திருப்பத்தூர், பிப். 18–
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, வாணியம்பாடி, ஆம்புர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் ரூ.85.30 கோடி மதிப்பீட்டில் 11 ஆயிரத்து 287 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ம.ப.சிவன் அருள் தலைமையில் அமைச்சர்கள் கே.சி.வீரமணி, நிலோபர் கபீல் ஆகியோர் வழங்கினர்.
அமைச்சர் கே.சி. வீரமணி பேசியதாவது:
அம்மா 2011 ஆம் ஆண்டில் ரூ.5500 கோடி விவசாய பயிர்க்கடன் தள்ளுபடி செய்தார். உலகத்திலேயே எங்குமில்லாத வகையில் தமிழகத்தில் கூட்டுறவு கடன் சங்களில் ரூ.12,110 கோடி மதிப்பீட்டில் 16.43 லட்சம் விவசாயிகளுக்கு பயிர்க்கடன் தள்ளுபடி செய்துள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் ரூ.205 கோடி மதிப்பிலும், ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் மட்டும் 700 கோடி மதிப்பில் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஏழை எளிய மக்கள் நலம்பெற வேண்டும் என்ற நோக்கத்தில் 2000 அம்மா மினி கிளினிக்குகள் தொடங்கப்பட்டு செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. எனவே முதலமைச்சர் தலைமையிலான அரசிற்கு பொது மக்கள் அனைவரும் ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
அமைச்சர் நிலோபர் கபீல் பேசியதாவது:
மக்களை தேடி அரசு என்ற நிலை உருவாக்கப்பட்டது. முதலமைச்சர் உருவாக்கியுள்ள 1100 தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பொது மக்கள் தங்களின் புகார்களை அளிக்கலாம். இந்த தொலைபேசி எண் காலை 7 மணி முதல் இரவு 10 வரை இயங்கும். பொது மக்கள் அளிக்கும் புகார்கள் சம்மந்தப்பட்ட துறைகளுக்கு சென்று நடவடிக்கை எடுக்கப்பட்டு விரைவில் தீர்வு காணப்படும்.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி தொகுதியில் அரசு தொழிற்பயிற்சி நிலையம் உருவாக்கப்பட்டுள்ளது. இப்பயிற்சி நிலையத்தில் லெதர் புட்ஸ் மேனிபேக்ஷரிங், பேஷன் டிசைனிங் உள்ளிட்ட 5 பிரிவுகள் உள்ளது. மேலும் இங்கு வருகைபுரிந்துள்ள மகளிர்கள் பேஷன் டிசைனிங்கில் சோ்ந்து அனைவரும் பயிற்சியெடுத்து பயன்பெற்று தங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் என்சிஈ.தங்கையாபாண்டியன், திருப்பத்தூர் சார் ஆட்சியர் வந்தனாகர்க், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மகேஷ்பாபு, மகளிர் திட்ட இயக்குர் உமாமகேஷ்வரி, பண்டக சாலை தலைவர்கள் கே.ஜி.ரமேஷ், அச்சக தலைவர் டி.டி.குமார், அரசுத்துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.