செய்திகள்

அமைச்சர் விஜயபாஸ்கர் மகள் ரிதன்யா அரங்கேற்றம்; எடப்பாடி, ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து

* சரியான பாசறையில் பாடம் பயின்று கைதேர்ந்திருக்கிறார்

* கலை, கல்வியில் சிறந்து பெற்றோருக்கு பெருமை சேர்த்திருக்கிறார்

அமைச்சர் விஜயபாஸ்கர் மகள் ரிதன்யா அரங்கேற்றம்; எடப்பாடி, ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து

குரு ஊர்மிளா சத்யநாராயணனுக்கும் பாராட்டு

சென்னை, பிப்.7

மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கரின் மகள் ரிதன்யா பிரியதர்ஷினியின் (பிரபல நாட்டியக் கலைஞர் ஊர்மிளா சத்யநாராயணாவின் சிஷ்யை ரிதன்யா பிரியதர்ஷிணி) பரதநாட்டிய அரங்கேற்ற விழா நேற்று (6 ந் தேதி) சென்னை சேத்துபட்டு, லேடிஆண்டாள் கலையரங்கத்தில் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தெலுங்கானா மாநில கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், இசை ஞானி இளையராஜா, பிரபல நாட்டியக் கலைஞர் சித்ரா விஸ்வேஸ்வரன் ஆகியோர் பங்கேற்று வாழ்த்தினார்கள்.

சரியான பாசறையில் பயின்று பரதத்தில் கைதேர்ந்திருக்கிறார், கலை, கல்வி இரண்டிலும் சிறந்து பெற்றோருக்கு பெருமை சேர்த்திருக்கிறார் ரிதன்யா என்று முதல்வர் மனம் திறந்து பாராட்டினார்.

விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்திப் பேசியதாவது:

அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் மற்றும் ரம்யா விஜயபாஸ்கர் இணையரின் மூத்த புதல்வி ரிதன்யா பிரியதர்ஷினியின் பரதநாட்டிய அரங்கேற்றம் நிகழ்வில் பங்கு கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.

பரதநாட்டியம் பொதுவாக தென்னிந்தியாவுக்குரிய, சிறப்பாகத் தமிழ்நாட்டுக்குரிய தொன்மையான நடனமாகும். புராண ரீதியாக பரதமுனிவரால் உருவாக்கப்பட்டதலாலேயே பரதம் என்ற பெயர் வந்ததாகவும் கூறுவர். பரதநாட்டியம் என்ற சொல்லில் இருக்கும் “ப” “பாவம்” (வெளிப்படுத்தும் தன்மை) என்ற சொல்லிலிருந்தும், “ர”, “ராகம்” (இசை) என்ற சொல்லிலிருந்தும், “த”, “தாளம்” (தாளம்) என்ற சொல்லிலிருந்தும் வந்தவையாக கருதப்படுகிறது. இதில் பாவம் உணர்ச்சியையும், ராகம் இசையையும் குறிக்கும். இவற்றுடன் தாளம் சேர்ந்த நடனமே பரத நாட்டியம் ஆகும். இக்கலை வடிவம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் உருவாகியது.

ஆரம்பத்தில் தமிழகத்தில் இருந்த இந்தக் கலை தற்போது இந்தியாவையும் தாண்டி உலக அளவில் பிரசித்தி பெற்று விளங்குகிறது. எந்தவித உணர்ச்சியையும் பரதநாட்டியத்தின் மூலம் உணர்த்த முடியும் என்பதும் இக்கலையின் சிறப்பு அம்சமாகும்.

உலகப்புகழ் குரு

குமாரி ரிதன்யா பிரியதர்ஷினியின் ஆசான் கலைமாமணி விருது பெற்ற ஊர்மிளா சத்யநாராயணன் உலக புகழ்பெற்ற பரத கலைஞர். மிகுந்த அனுபவம் கொண்டவர். புகழ்பெற்ற கலை ஆசான்கள் குரு கே.என். தண்டாயுதபாணி பிள்ளை மற்றும் கே.ஜே. ஸரசா ஆகியோரின் கீழ் பயிற்சி பெற்றவர். இந்தியாவிலும் பல்வேறு அயல் நாடுகளிலும் பரதக்கலை பாரம்பரியத்தை நிலைநாட்டி வந்திருப்பவர். நாட்டிய சங்கல்பா என்னும் தன் கலை ஸ்தாபனம் மூலமாக பரதக்கலை நுட்பங்களை இளைய தலைமுறையினருக்கு செவ்வனே பயிற்றுவித்து வரும் இவரது பள்ளி 25 ஆண்டுகளைக் கடந்து இதுவரை 135 அரங்கேற்றங்களை முன்னெடுத்து செய்துள்ளது. இவர் சிறந்த நாட்டிய கலைஞர் மட்டுமல்ல சிறப்பான ஆசானும் கூட. இவரது கலைப்பணி மேலும், மேலும் சிறக்க எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

9 ஆண்டு பயிற்சி

குமாரி ரிதன்யா பிரியதர்ஷினி ஆழ்ந்த அனுபவம் படைத்த நாட்டிய சங்கல்பாவின் மாணவி. கடந்த ஒன்பது ஆண்டு காலமாக பரதக் கலையை பயின்று வரும் இவர் அபிநயத்தை அதிகமான ஆர்வத்துடனும், நுட்பமாக கவனித்தும், கற்றும் வந்திருக்கிறார். நடனத்தின்பால் இயற்கையாக ஆர்வம் கொண்டிருக்கும் இவருக்கு கற்றல் எளிதாய் அமைந்திருக்கின்றது. தன் குடும்பப் பின்னணியோ, நடனப் பள்ளியின் தொலைவோ, தன் ஆர்வத்தை எந்த விதத்திலும் பாதித்திடாதவண்ணம் மிகுந்த மென்மையுடனும் முதிர்ச்சியுடனும் பயின்று ஒரு நல்ல மாணவியாகத் திகழ்ந்து வந்திருக்கிறார். இவருக்கு எனது மனம் திறந்த பாராட்டுகள். இதற்கு ஆக்கமும் ஊக்கமும் தொடர்ந்து அளித்து வரும் அவருடைய பெற்றோர்களையும் இத்தருணத்தில் பாராட்டக் கடமைப்பட்டிருக்கின்றேன்.

ஸரசாவின் மாணவி புரட்சித்தலைவி

புரட்சித்தலைவி அம்மாவும் சிறந்த பரதநாட்டிய கலைஞர். புரட்சித்தலைவி அம்மா, ஸரசா அம்மையாரிடமிருந்துதான் பரதநாட்டியம் கற்றுக் கொண்டார். ஊர்மிளா சத்திய நாராயணனும் ஸரசா அம்மையாரிடம் இருந்துதான் இக்கலையை பயின்றுள்ளார். குமாரி ரிதன்யா பிரியதர்ஷினி சரியான பாசறையில் தன்னை இணைத்துக் கொண்டு இந்த நடனத்தை கற்று கைதேர்ந்துள்ளார் என்பதை அறியும்பொழுது எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. குமாரி ரிதன்யா பிரியதர்ஷினி பரதக் கலையில் மட்டுமல்லாமல் தனது படிப்பிலும் சிறந்து விளங்கி வருவதற்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

விஜயபாஸ்கருக்கு பாராட்டு

உண்மையிலேயே இந்த சென்னை மாநகரத்தில் அவருடைய நடன அரங்கேற்றம் சிறப்புமிக்க நிகழ்ச்சியாகும். ஏனென்று சொன்னால், புதுக்கோட்டையில் பிறந்து வளர்ந்த டாக்டர் விஜயபாஸ்கர் தன்னுடைய தனித்திறமையால் மருத்துவத் துறையில் பயின்று படிப்படியாக உயர்ந்து புரட்சித்தலைவி அம்மாவின் நன்மதிப்பைப் பெற்று, மருத்துவராக இருந்து, அந்தத் துறைக்கே அமைச்சராகவும் அம்மாவின் ஆசியைப் பெற்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராக பொறுப்பேற்று திறம்பட பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.

கிராமத்தில் பிறந்து வாழ்ந்து தன்னுடைய திறமையால் உயர்ந்து அவருடைய புதல்விக்கு இங்கு அரங்கேற்றம் நடத்திய பெருமை அவரைச் சாரும். இந்த நடன நிகழ்ச்சியைப் பார்க்கின்றபோது உண்மையிலேயே ரிதன்யா பிரியதர்ஷினி ஓராண்டு, இரண்டாண்டுகள் அல்ல, ஒன்பது ஆண்டுகாலம் இந்தப் பயிற்சியைப் பெற்றிருக்கின்றார். ஒன்பது ஆண்டுகாலம் தொடர்ந்து பயிற்சியைப் பெற்றதன் விளைவாக அவருடைய நடனம் சிறப்பாக அமைந்திருக்கின்றது.

பரதநாட்டியத்தில் எங்களுக்கு அனுபவம் கிடையாது, ரசிக்கத்தான் முடியும். ஆகவேதான், இங்கே மேடையிலே வீற்றிருக்கின்றவர்கள் அவருடைய நடனத்திலே எப்படியெல்லாம் அசைவுகள் இருக்கின்றன என்பதை அழகாக சுட்டிக்காட்டினார்கள். உண்மையிலேயே, பரதநாட்டிய கலை என்பது மிகமிக அரிது, அதைக் கற்றுக் கொள்வது மிக அரிது, அதைத் திறம்படக் கற்றுக் கொள்வது அதைவிட அரிது.

உயர்ந்து திகழ வாழ்த்து

அதற்கு இன்றைக்கு பெருமை சேர்க்கின்ற அளவிற்கு தன்னுடைய திறமை முழுவதையும் மேடையில் தன் நடனத்தின் மூலமாக அவர் வெளிப்படுத்தி அனைவருடைய கைதட்டல்களையும் பெற்று, அதன் மூலமாக சிறப்பான நடனத்தை நான் கற்றுக் கொண்டேன் என்ற சான்றிதழையும், ஒட்டுமொத்தமாக அரங்கத்திலுள்ள அனைவரின் நன்மதிப்பையும் பெற்றிருக்கின்றார். அவர் மென்மேலும் இந்த பரதநாட்டியத்தில் உயர்ந்து திகழ வேண்டுமென்று வாழ்த்துகிறேன்.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *