செய்திகள்

மாநில எரிசக்தி கணிப்பான் – 2050 வலைக்கருவி: அமைச்சர் பி.தங்கமணி துவக்கினார்

சென்னை, பிப்.24–

தமிழ்நாடு மாநில எரிசக்தி கணிப்பான் – 2050 என்னும் வலைக்கருவியை மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் பி.தங்கமணி தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் பிரிட்டிஷ் உயர் ஆணையம் துணை உயர் ஆணையர் ஆலிவர் பால்ஹட்செட், அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் (எரிசக்தித் துறை) எஸ்.கே.பிரபாகர், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் பங்கஜ் குமார் பன்சல் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.

இங்கிலாந்து தெற்காசிய மற்றும் காமன்வெல்த் துறை அமைச்சர் லார்ட் டாரிக் அஹமத், இந்தியாவிற்கான பிரிட்டிஷ் துணை உயர் ஆணையர் ஜான் தாம்சன், பிரிட்டிஷ் துணை உயர் ஆணையர், பெங்களுரு ஜெர்மி பில்மோர்-பெட்போர்ட், பிரிட்டிஷ் துணை உயர் ஆணையர் (ஐதராபாத்) ஆன்ட்ரூ பிளம்மிங் மற்றும் தமிழ்நாடு மாநில எரிசக்தி கணிப்பான் 2050 சார்ந்த பிற பங்குதாரத் துறைகளின் முதன்மை செயலாளர்கள் ஆகியோர் காணொலி காட்சி மூலம் பங்கேற்றனர்.

இது குறித்து அமைச்சர் பி.தங்கமணி கூறுகையில்,

2013–ம் ஆண்டில் நிதி ஆயோக்கால் உருவாக்கப்பட்ட இந்திய எரிசக்தி பாதுகாப்பு சூழல் நிலை காட்சிகள் 2047 வெற்றிகரமாக செயல்பட்டதால், இக்கருவியை மாநில அளவில் செயல்படுத்த, நிதி ஆயோக் திட்டமிட்டது. ஆந்திரா, குஜராத், அசாம், கர்நாடகா மற்றும் மகாராஷ்டிராவைத் தொடர்ந்து தமிழ்நாடு 6வது மாநிலமாக, இங்கிலாந்து அரசாங்கத்தின், சர்வதேச மேம்பாட்டுத் துறையின் ஆதரவுடன் உருவாக்கப்பட்ட எரிசக்தி கணிப்பானை அறிமுகப்படுத்தியது.

இந்திய எரிசக்தி பாதுகாப்பு சூழல் நிலை காட்சிகள் 2047–க்கு ஏற்ப தமிழக மாநில எரிசக்தி கணிப்பான் 2050 உருவாக்கப்பட்டுள்ளது. இக்கருவியானது மாநிலத்தின் முக்கிய பயன்பாடு பயனாளர்கள், முன்னோக்கு ஆற்றல் திட்டம் மற்றும் நீண்டகால தொலை நோக்கு பார்வை திட்டம் ஆகியவற்றை திட்டமிடுவதற்கான வழிகளை எளிதாக்குகிறது.

மேலும் இக்கருவியானது திட்டமிடுவோர், கொள்கை வகுப்பாளர் ஆகியோர், தேவை வழங்கல் மற்றும் அனைத்து ஆற்றல் மூலங்களின் உகந்த பயன்பாட்டினை உறுதி செய்தல் ஆகியவற்றை உள்ளடக்கிய முழுமையான ஆற்றல் திட்டத்தை வகுக்கவும் உதவுகிறது. மேற்கண்டவைகளால், மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்களிக்கும், பசுமை மற்றும் சுத்தமான ஆற்றலை அடைவதற்கு இக்கருவி உதவுகிறது.

மாநிலத்தில் எரிசக்தி திட்டத்தை வலுப்படுத்துவதற்கும், விரும்பிய கொள்கை முடிவுகளை எடுப்பதற்கும் எரிசக்தி பயன்பாடு மற்றும் கார்பன் தடத்தை கண்காணிப்பதற்கும் இக்கருவி பயனளிக்கும்.

இவ்வாறு அமைச்சர் பி.தங்கமணி கூறினார்.

மேலும், அனைத்து தமிழ்நாடு மாநில எரிசக்தி கணிப்பான் 2050ன் பங்குதாரத் துறைகள், ஆராய்ச்சியாளர்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் இக்கருவியை உபயோகித்து பயன் பெறுமாறும் கேட்டுக் கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *