நாடும் நடப்பும்

வட சென்னையின் பெருமையை மீட்டு தரவரும் மெட்ரோ ரெயில்

நேற்று சென்னை வந்த பிரதமர் வடசென்னையை அதிமுக்கிய இணைப்பகமாக இருக்கும் சர்வதேச விமான நிலையத்திற்கு வெகு விரைவில் பயணிக்க ஏதுவாக குளு குளு மெட்ரோ ரெயில் சேவையை விரிவாக்கம் செய்துள்ளதை பச்சை கொடி அசைத்து துவக்கியுள்ளார்.

வண்ணாரப்பேட்டை வரை ஓடிக் கொண்டு இருந்த தற்போதைய மெட்ரோ ரெயில் சேவைகள் மேலும் 9 கிலோ மீட்டர்கள் நீண்டு விம்கோ நகர் வரை செல்லும்.

வடசென்னை மிக போக்குவரத்து நெரிசல் பகுதியாக 1930–களிலேயே சுட்டிக்காட்டப்பட்டு, நகர வளர்ச்சி கூவம் நதியின் மறு பக்கமாக இருந்த தென்சென்னை பகுதியில் வளர துவங்கியது.

துறைமுகம், அகல ரெயில் பாதைகள், பெரிய தொழில் மையங்கள் எல்லாம் வட சென்னையின் அடையாளங்களாக இருந்த நிலையில் குடியிருப்பு பகுதிகளாக தென் சென்னையின் மயிலை, ராஜா அண்ணாமலைபுரம், அடையாறு போன்ற பகுதிகள் வளர்ச்சியை கண்டது.

1990–களுக்குப் பிறகு மகாபலிபுரம் சாலையிலும் தாம்பரம் பகுதிகளிலும் குடியிருப்பு பகுதிகள் தோன்ற தென் சென்னையில் இருந்த கிண்டி, தாம்பரம் தொழில் பேட்டைகள் வளர்ந்து மக்களின் வேலைவாய்ப்பு தேவைகளை பூர்த்தி செய்ய ஆரம்பித்தது.

2000–ம் ஆண்டில் ஐ.டி. புரட்சி துவங்க பழைய மகாபலிபுரம் சாலை உலகிலேயே மிக நீண்ட ஐ.டி. வளாகங்கள் நிறைந்த நீண்ட பகுதியாக உயர்ந்தது.

அடுத்த தலைமுறை வசதிகள் எல்லாம் இன்றும் இந்த ஐ.டி. புரட்சியை கண்ட பகுதியில் அதிவிரைவு வளர்ச்சியில் ஈடுபட நாடெங்கும் இருந்தும் இளைஞர்கள் படையெடுத்து வந்து இப்பகுதியை புதிய சென்னையாக உருவாக்கி விட்டனர்.

இந்த சூழ்நிலையில் வடசென்னை தற்போது ஒரு கடைமடை பகுதியாக, சென்னைவாசிகள் பெரும்பாலோனர் எட்டிப் பார்க்கக் கூட யோசிக்காத பகுதியாக மாறிவிட்டது.

எல்லா வளர்ச்சிகளும் அண்ணா சாலை பகுதியில்தான் என்ற நிலையில் வட சென்னை, மத்திய சென்னையோடு இணைந்து இருந்தது.

ஆனால் பழைய மகாபலிபுரம் சாலை கண்ட ஐடி வளர்ச்சியில் வடசென்னை ஈடுபட பல சிக்கல்கள் இருந்தது. குறிப்பாக பஸ்சில் வர குறைந்தது இரண்டு மணி நேர பயணமாக இருந்தது!

ஆனால் பாரி முனையில் இருந்து எம்ஆர்டிஎஸ் ரெயில் சேவைகள் துவங்கி, தற்போது வேளச்சேரி வரை பயணிக்க முடிவதால் வட சென்னைவாசிகள் மேற்படிப்புகளுக்கும் பணிகளுக்காகவும் புதிய குடியிருப்பு பகுதியின் வசதிகளை அனுபவிக்கவும் புலம் பெயர்ந்து வருவதால், வட சென்னை வளர்ச்சிகள் அபரீதமாக பாதிக்கப்பட்டு வருகிறது.

பழைய தொழில் கூடங்கள் லாபகரமாக இயங்காத நிலையில் மீன்பிடி, துறைமுக சேவைகளில் ஈடுபட்டு வருவோர் மட்டுமே வடசென்னையில் பிரதானமாக இருக்கிறார்கள்.

பழைய வட சென்னை குடியிருப்போர் வயது மூப்பு காரணமாகவும் இப்பகுதியில் உள்ள வீட்டை குறைந்த விலையில் மட்டுமே விற்க முடிகிறது என்பதாலும் அந்த பணத்தில் புதிய சென்னை குடியிருப்பு பகுதிகளில் முதலீடு செய்ய தயக்கமாக இருப்பதாலும் மட்டுமே வட சென்னை பகுதிகளில் பிரதானமாக சிறு தொழில்களில் ஈடுபட்டு அங்கேயே வசித்து வருகிறார்கள்.

ஆக ஒரு பகுதி வளர்ச்சியின்றி இருக்கிறது. மறுபுறமோ ஆடம்பர சென்னையாக வளர்ந்து கொண்டே இருக்கிறது. இந்த சரிசம வளர்ச்சியின்றி இருக்கும் நிலையில் பல்வேறு சமுதாய சிக்கல்களுக்கும் வழி பிறக்க குற்ற எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

இதற்கெல்லாம் நல்ல தீர்வாக மெட்ரோ ரெயில் சேவை விரிவாக்கம் அமைய இருக்கிறது.

மெட்ரோ ரெயில் இயக்கக் குறைவான எரிபொருளும் குறைவான மின்சாரமும் போதும். சுற்றுச்சூழலுக்கு உகந்தது, தூய்மையானது. குறிப்பிட்ட காலத்தில் வரும், துரிதமாகச் செல்லும் பயண நேரம் குறையும். சாலையில் வாகன நெரிசலும் குறையும்.

மெட்ரோ ரெயில் நிலையங்கள் நகரத்திற்குள் பயணிப்பதற்கானவை. ஆதலால் அவை அருகருகே அமைந்திருக்கும். இரண்டு நிலையங்களுக்கு இடைப்பட்ட தூரம் பொதுவாக ஒரு கி.மீ., என்பதாக இருக்கும்.

மேலும் மெட்ரோ ரெயில் நிலையங்களுக்கு இடையிலான தூரத்தின் இடைவெளி எப்படிக் குறைவானதோ, அதே போல அடுத்தடுத்து வரும் ரெயில்களுக்கு இடையிலான காலத்தின் இடைவெளி குறைவானது. தற்போது மெட்ரோ ரெயில் சேவைகளில் ஒரு இறுதி பக்கம் சென்னை விமான நிலையமாக இருக்கிறது.

அங்கு இருந்து கே.கே.நகர், வடபழனி, அண்ணா நகர், செனாய் நகர், எழும்பூர், சென்ட்ரல், பாரிமுனை, ராயபுரம், வண்ணாரப்பேட்டை தற்போது விம்கோ நகர் வரை செல்ல முடியும்.

அதுபோன்றே சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து அண்ணா சாலை வழித்தடத்தில் தேனாம்பேட்டை, நந்தனம், சைதை, கிண்டி, ஆலந்தூர் வழியாகவுகம் விமான நிலையம் வரை பயணிக்க முடிகிறது.

ஆக விம்கோ நகரில் இருந்து இந்த இரண்டில் எந்த வழியாக வந்தாலும் ஒரு மணி நேரமும் 10 நிமிடங்களில் வந்து சேர முடியும் – அதுவும் குளு குளு வசதியுடன்.

வாடகை காரில் வந்தால் கூட 90 நிமிடங்களுக்கு குறையாது பயண தூரமாக இருப்பதால் வாடகை கட்டணம் மிகக் கூடுதலாக இருக்கிறது.

தற்போது விம்கோ நகர் மெட்ரோ ரெயில் வரைபடத்தில் வந்து விட்டதால் இந்த ரெயில் நிலையம் வரும் காலத்தில் அதிமுக்கிய ரெயில் சந்திப்பாக உயரும் என்று நம்பலாம். காரணம் இதற்குப் பிறகுள்ள பொன்னேரி உட்பட பல பகுதிகளுக்கு இணைப்பு பெற்று சென்னையின் வளர்ச்சியில் நேரடியாக ஈடுபட வழி பிறக்கிறது.

தென்சென்னை என்றாலே கபாலி கோயில், பார்த்தசாரதி கோயில், சாந்தோம் சர்ச், திருவல்லிக்கேணி, பெரிய பள்ளி வாசல் என்பது நினைவுக்கு வருவது போல், இனி திருவொற்றிவூர் என்றால் அப்பர், சுந்தரர், திருஞான சம்பந்தர் ஆகிய முப்பெரும் நாயன்மார்களால் பாடல் பெற்ற தலங்களுடைய பகுதி என்பதை உணர்த்தும்.

நிதி துறை, விம்கோ நகரில் உள்ள வெட்டுப்புலி தீப்பெட்டி தயாரிப்பு போன்ற பல்வேறு அம்சங்களையும் நினைவுப்படுத்தும்.

1012–ஆம் ஆண்டில் ராஜேந்திரசோழனை கவர்ந்த வடசென்னை தற்போது மீண்டும் அதே புகழை பெற மெட்ரோ ரெயில் சேவைகள் துவங்கி விட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *