செய்திகள் வர்த்தகம்

மீனாட்சி என்ஜினியரிங் கல்லூரியின் புதிய மாணவர்களுக்கு புகுமுக திட்ட நிறைவு விழா

மீனாட்சி என்ஜினியரிங் கல்லூரியின் புதிய மாணவர்களுக்கு புகுமுக திட்ட நிறைவு விழா

வாழ்வை வளப்படுத்திக்கொள்ள அறிவை செறிவூட்டுவது அவசியம்

லூகாஸ் டிவிஎஸ் முன்னாள் நிர்வாக இயக்குநர் ரவிச்சந்திரன் வாழ்த்து

சென்னை, நவ. 19-

மாணவர்கள் தங்கள் வாழ்வை வளப்படுத்திக் கொள்ள வேண்டுமானால், எப்போதும் அறிவை செறிவூட்டிக் கொண்டே இருப்பது அவசியம் என சிறப்பு விருந்தினர் ரவிச்சந்திரன் கூறினார்.

கோடம்பாக்கம் மீனாட்சி சுந்தர்ராஜன் பொறியியல் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான புகுமுக உந்துதல் வழங்கும் நிகழ்ச்சியின் ஒரு வார நிறைவு விழா இணைய வழி மூலம் இன்று நடைப்பெற்றது. இதில் காட்சிப்படம் மூலமாக மீனாட்சி சுந்தராஜன் கல்லூரியின் நிறுவனர் பேராசிரியர் கே.எஸ். சுந்தராஜனுக்கு மலர்த் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் அக்கல்லூரியின் செயலாளர் கே.எஸ். பாபாய் அனைவரையும் வரவேற்றுப் பேசும்போது, இந்த உந்துதல் நிகழ்ச்சி மாணவர்களையும் அவர்கள் திறைமைகளையும் கல்வியுடன் இணைக்கும் பாலமாக அமைந்துள்ளதாகவும் மாணவர்களின் திறமைகளை அவர்கள் கண்டுகொள்ளும் விதமாக இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டு அதில் வெற்றிக் கண்டுள்ளதாகவும் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில், என்ஜினியரிங் கல்லூரியின் டீன் உமாராணி தனது அறிமுக உரையில், மாணவர்களுக்கான புகுமுக திட்ட நிகழ்ச்சியில் மாணவர்களின் உடலை வலுப்படுத்தும் யோகா, மாணவர் குழு கலந்துரையாடல், வள்ளூவர் கோட்டம், மாமல்லபுரம், தக்சன் சித்ரா உள்ளிட்ட இடங்களுக்கு அழைத்துச் சென்று மாணவர்கள் உள்ளத்தை மேம்படுத்தும்விதமான ஒருவார பன்முக நிகழ்ச்சிகள் நடைபெற்றன என எடுத்துக் கூறினார்.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக, லூகாஸ் டிவிஎஸ் நிறுவனத்தின் முன்னாள் நிர்வாக இயக்குநர் என். ரவிச்சந்திரன் கலந்து கொண்டு, மாணவர்களின் வெற்றிகரமான வாழ்வுக்கு தேவையான வழிகாட்டு நெறிகள் குறித்து பேசியதாவது:-

உலகம் மிக வேகமாக மாறிக்கொண்டே இருக்கிறது. இன்று பொறியியல் படிப்பின் பல்வேறு பிரிவுகளில் சேர்ந்து, கல்லூரி படிப்புக்கு தயார்ப்படுத்தும் புகுமுக திட்டங்களை முடித்துள்ளீர்கள். மாணவர்கள், தங்கள் வாழ்வில், இனி புதிய அனுபவங்களை பெற இருக்கிறீர்கள். அறிவே சிறப்பு வாய்ந்தது. கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு. எனவே, எப்போதும் எதையாவது கற்றுக்கொண்டே இருக்க வேண்டும். கல்வி என்பது வெறுமனே பட்டம் பெறுவதல்ல. ஏனெனில் ஏட்டுச்சுரைக்காய் கறிக்குதவாது என்பது நம் முன்னோரின் அனுபவ மொழி.

ஒவ்வொருவர் வாழ்விலும் கல்வி என்பது வேர் போன்றது என்றால், பண்பாடு என்பது மலராகவும், அறிவே கனியாகவும் இருக்கிறது என்பதை மறந்து விடக்கூடாது. கல்வியும் அதனால் நாம் பெரும் அறிவுமே நம்மை ஒரு மனிதனாக முழுமையாக்குகிறது. அது நமக்கான ஒரு தனித்தன்மையை அளிக்கின்றது. இதன் மூலம் நம்மால் உண்மையின் தன்மையை அறிந்து, சிறந்த சமூகத்தை உருவாக்கலாம்.

நாம் கல்வியை ஒரு வழித்தடமாக பார்க்காமல், பன்முகவழித்தடமாக பார்ப்பதற்கு இந்த உந்துதல் நிகழ்ச்சிகள் நமக்கு உதவிபுரிகின்றன. மாணவர்களின் வெற்றிக்கான பாதை ஒரு குறிக்கோளை நோக்கிச் செல்லவேண்டும். தற்காலிமான மகிழ்வுக்காக நிரந்தர மகிழ்ச்சியை நம் மாணவர்கள் இழந்துவிடக்கூடாது. மாணவர்கள் தங்களை அனைத்துவகையான வாய்ப்புகளையும் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் தங்களை வடவமைத்துக்கொள்ள வேண்டும். நாட்டின் வளர்ச்சிக்காகவும், தன் சொந்த வளர்ச்சிக்காகவும் சுயதிறன்களை மாணவர்கள் மேம்படுத்திக்கொள்ள வேண்டும்.

பொதுவாக, ஒரு நாட்டுக்கு என்றாலும், சமூகம் தனிமனிதர் என்றாலும், அவர்களுடைய ஆற்றலை, அறிவும், திறனும், முழுமையான ஈடுபாடும்தான் முடிவு செய்கிறது. இந்தியா போன்ற பெரும் வளமான நாட்டில் அனைத்தும் உள்ளது. மிகப்பெரும் நிலப்பரப்பும், கடல் வளமும் மனித வளமும் உள்ள நம் நாட்டில் அனைத்து வாய்ப்புகளும் உள்ளது. நாம் நம் அறிவை செறிவூட்டி, முழுமையாக நம்மை ஈடுபடுத்திக் கொண்டு ஒரு செயலை செய்தால், வாழ்வில் வளம் பெறலாம் என்பதை மறந்து விடக்கூடாது என்று கூறினார்.

நிகழ்ச்சியில், கல்லூரி முதல் சுரேஷ் நன்றி கூறினார். முன்னதாக, புதுமுக மாணவர்கள் உந்துதல் திட்ட நிகழ்ச்சியில், தாங்கள் பெற்ற அனுபவங்களை எடுத்துக்கூறினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *