முழு தகவல்

திருமணங்கள்: பதிவும்-நடைமுறைகளும்!

திருமணம் என்றால் என்ன?

மணம் என்ற சொல்லுக்குக் ‘கூடுதல்’ என்பது பொருள். இல்லறம் அல்லது நல்லறம் இல்லை என்பது தமிழ் முதுமொழி. எனவே, வாழ்வில் ஒரு ஆணும் பெண்ணும் இணைந்து வாழ்ந்து, ஒருவருக்கொருவர் துணையாக இருந்து, தங்களுக்கான வழித்தோன்றல்களை உருவாக்கிக் கொண்டு, சமூகத்திற்கும் பயன்பட திருமணங்கள் உதவுகிறது. ஆணும் பெண்ணும் இணையும் இல்லற வாழ்விற்கான நிலையான நடைமுறைகள் ஏதாவது இருக்கிறதா என்றால் இல்லை. அது ஒவ்வொருநாட்டுக்கும் இனத்துக்கும் சாதிக்கும் இனக் குழுவுக்கும் மாறுபடும் என்பதுடன் ஒவ்வொரு கால கட்டத்திலும் கூட மாறியே வந்துள்ளது.

தமிழர்களின் ஆதி திருமண முறைகளாக, கடி-மணம், கரணம், மன்றல், வதுவை, வரைவு என பலநிலைகளில் நடைபெற்றுள்ளது. இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு நிலையில் மணம் முடித்தலை சிறப்பித்து கூறுகிறது. அதன் தொடர்ச்சியாக, மரபு வழி மணம், ஏறு தழுவுதல், மடலேறுதல், போர் நிகழ்த்தி மணமுடித்தல், துணங்கையாடி மணத்தல், பரிசம் கொடுத்து மணத்தல் போன்ற பல நிலைகள் தமிழ் சமூக திருமண முறைகளில் சிறந்து விளங்கியுள்ளது.

களவு மணம் – கற்பு மணம்

என்றாலும் சங்க இலக்கியங்களில் தமிழர்களின் திருமண முறையாக களவு மணம், கற்பு மணம் ஆகியவை சிறப்பான முறையில் பேசப்பட்டள்ளன. தமிழர்களுக்கு பொதுவாக திராவிட சமூக அமைப்பில் தொழில்நிலையிலான பிரிவுகள் இருந்ததே ஒழிய, சாதிய நிலையிலான வேறுபாடுகள் இருந்ததில்லை. இப்போது இருக்கும் சாதிய ஏற்றத்தாழ்வுள்ள படிநிலை அமைப்பு (GRADED INEQUALITY) ஆரியர்கள் இந்த நாட்டில் , தமிழ் மன்னர்களின் துணையோடு வலுப்பெற்று பண்பாட்டு படையெடுப்பு நிகழ்ந்த பிறகுதான் என்பது வரலாற்று ஆய்வாளர்களின் முடிவு.

சங்க இலக்கிய காலத்தில் ஒருவனும் ஒருத்தியும் தம்முள் தாமே எதிர்ப்பட்டு உள்ளத்தாலும், உடலாலும் ஒன்றுப்பட்டு, மறைவாகப் பழகி வருதல் ‘களவு மணம்’ எனப் பெயர் பெறும். பலர் அறிய மணம் செய்து வாழும் வாழ்க்கை ‘கற்பு மணம்’ எனப் பெயர் பெறும். களவு நடந்த பின்பே கற்பு நடைபெறுதல் வேண்டும் என்பது பண்டைப் புலவர் குறிக்கோள். கணவனும் மனைவியுமாக வாழக்கூடிய இருவர், பிறர் இடையூறு இல்லாமல் தமக்கு தாமே ஒருவரையொருவர் நன்கு அறிந்து திருமணத்திற்கு உடன்படுதல் வேண்டும். அதனால் இம்முறைக்கு ‘அன்பின் ஐந்திணை’ எனப் பெயரிட்டனர்.

திருமண சடங்குகள் பற்றி அறிய…

திருமணச் சட்டங்கள்

இந்தியாவின் உச்ச நீதிமன்றம் 2006 இல், அனைத்து திருமணங்களையும் பதிவு செய்ய கட்டாயப்படுத்தியது. இந்தியாவில், திருமணம் 1955 இந்து திருமண சட்டத்தின் கீழ் அல்லது சிறப்பு திருமண சட்டம், 1954 கீழ் பதிவு செய்யப்படலாம். இந்து திருமண சட்டம் இந்துக்களுக்கு பொருந்தும். சிறப்பு திருமண சட்டம் இந்தியாவின் அனைத்து குடிமக்களுக்கும் அவர்களின் மதத்தைப் பொருட்படுத்தாமல் செய்து கொள்ளும் திருமணத்திற்கு பொருந்தும்.

இந்து திருமண சட்டம் ஏற்கனவே திருமணம் செய்து கொள்ளும் திருமணத்தை பதிவு செய்ய உதவுகிறது. எனினும், சிறப்பு திருமண சட்டம் ஒரு திருமணம் மற்றும் ஒரு திருமண அதிகாரி பதிவு மூலம் வழங்குகிறது. இந்தியாவில் திருமணத்திற்கு தகுதியுடையவர்கள், குறைந்தபட்ச வயது 21 ஆண்களுக்கு மற்றும் பெண்களுக்கு 18 ஆண்டுகள் ஆகும்.

இந்து திருமணச் சட்டம்-1955

இந்து திருமண சட்டத்தின் கீழ் பதிவு செய்தல், 1955 கணவன் மற்றும் மனைவி இருவரும் இந்துக்கள், பௌத்தர்கள், ஜெயின்கள் அல்லது சீக்கியர்கள் அல்லது அவர்கள் எங்கேயோ இந்த மதம் ஒன்றில் மாற்றப்பட்டுள்ள இடங்களில் இந்து திருமண சட்டம் பொருந்தும். இதன் முதல் படி, மணமக்கள் வசிக்கும் இடத்தின் அருகே உள்ள சார்-பதிவாளர் அலுவலகத்தில் திருமணத்தை பதிவு செய்ய விண்ணப்பிக்க வேண்டும்.

இரு தரப்பினரும் விண்ணப்ப படிவத்தை நிரப்புதல் செய்து, அதனுடன் இருவரின் திருமண விழா புகைப்படங்கள், திருமண அழைப்பிதழ், இருவரின் வயது மற்றும் இருப்பிட முகவரியின் சான்று அதனுடன் இருவரும் தெளிவான மன நிலையுடனும் இருப்பதாகவும் மற்றும் இருவருக்குமிடையே தடை அல்லாத உறவுதான் என்பதற்கு ஆதாரமாக அனுமதி பெற்ற பத்திரத்துறை பதிவாளர்/ நிர்வாகி சான்றிதழுடன் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

அனைத்து ஆவணங்களும் ஒரு அரசிதழ் பதிவு பெற்ற அலுவலரிடம் உறுதிப்படுத்த வேண்டும். மற்றும் அதனுடன் சார் பதிவாளரின் காசாளரிடம் ஒரு சிறு தொகையை கொடுத்து அதற்கான ரசீதையும் அந்த விண்ணப்ப படிவத்துடன் இணைக்க வேண்டும். விண்ணப்பத்தை சமர்பித்ததும் அது சரி பார்க்கப்பட்டு, சம்பந்தப்பட்ட உத்தியோகத்தர் திருமண பதிவின் சான்றிதழ் வழங்கப்படும் தேதியை நியமிப்பார்.

இந்து திருமண சட்டம் 1955 இன் கீழ் , இரு தரப்பினருக்கும் இடையே சில நிபந்தனைகள் நிறைவேற்ற பட்டால் தான் திருமணம் செல்லுபடியாகும். இந்த நிபந்தனைகள் பிரிவு 5 மற்றும் பிரிவு 7 இன் கீழ் குறிப்பிடப்பட்டுள்ளன. 1955 ஆம் ஆண்டு இந்து திருமண சட்டத்தின் பிரிவு 5 ன் அடிப்படையில், ஒரு திருமணத்தில் இருவரும் இந்துக்களாக இருந்தால் அத்திருமணம் செல்லத்தக்கதாகக் கருதப்படுகிறது. அனால் இருவரில் ஒரு பிரிவினர் ஒரு இஸ்லாமியரோ அல்லது ஒரு கிறிஸ்தவரோ என்றால், பின்னர் அத்திருமணம் ஒரு சரியான இந்து திருமணமாக இருக்க முடியாது.

இந்திய கிறிஸ்தவ திருமணச் சட்டம் 1872

இந்திய கிறிஸ்தவ திருமணச் சட்டம், 1872, அனைத்து கிறிஸ்தவ திருமணங்களும் அதன் சொந்த ஏற்பாடுகளின் கீழ் நடத்தப்படும் என்று கூறுகிறது. அதோடு கூடுதலாக, 4 வது பிரிவில், கிறிஸ்தவ-கிறிஸ்தவ திருமணங்களைத் தவிர, ஒரு கிறிஸ்தவர், கிறிஸ்தவர் அல்லாத மற்றொருவரை மணப்பது இந்தச் சட்டத்தின் கீழ் உறுதிப்படுத்த முடியும் என்று அது கூறுகிறது.

1872 ஆம் ஆண்டு இந்திய கிறிஸ்தவ திருமணச் சட்டத்தின் 5, பின்வரும் நபர்கள் திருமணத்தை உறுதிப்படுத்த தகுதியுடையவர்கள். இந்த தனிநபரைத் தவிர வேறு எவராலும் நடத்தப்படும் திருமணங்கள் வெற்றிடமாக இருக்கும்.

ஸ்காட்லாந்தின் தேவாலய மதகுருமார்கள், அத்தகைய திருமணம் ஸ்கொட்லாண்ட் தேவாலய விதிகள், சடங்குகள், பழக்கவழக்கங்கள் மற்றும் சடங்குகளுக்கு ஏற்ப, திருமணங்களை உறுதிப்படுத்த இந்தச் சட்டத்தின் கீழ் உரிமம் பெற்ற மத அமைச்சர் முன்னிலையில், இந்தச் சட்டத்தின் கீழ் அல்லது அவரால் நியமிக்கப்பட்ட திருமண பதிவாளர், இந்திய கிறிஸ்தவர்களுக்கு இடையிலான திருமண சான்றிதழ்களை வழங்க இந்த சட்டத்தின் கீழ் உரிமம் பெற்றவர்.

முஸ்லிம் திருமணங்கள்

முஸ்லிம் திருமணங்கள் ஒரு ஒப்பந்தமாகவே கருதப்படுகிறது. திருமணத்தை ‘நிக்கா’ என்றும், திருமண ஒப்பந்தத்தை ‘நிக்காநாமா’ என்றும் படிவத்தில் பதிவு செய்கிறார்கள். இத்திருமணத்தின் போது ஒரு தரப்பினர் திருமணத்தை முன்மொழிய வேண்டும். இன்னொரு தரப்பினர் இதை ஒத்துக்கொள்ள வேண்டும். இரண்டும் ஒரே நேரத்தில் நடைபெற வேண்டும்.

திருமணத்தின் போது மணமகளுக்கு மணமகனால் ஒரு குறிப்பிட்ட தொகை கொடுக்கப்படும். இதற்கு ‘மொஹர்’ என்று பெயர். இந்த மொஹர் தொகை திருமணப்பதிவேட்டிலும், நிக்காநாமாவிலும் எழுதி வைக்கப்படும்.

அமெரிக்க நிலை

அமெரிக்காவில் இப்போது 20 சதவீதம் பேர் கடவுள் நம்பிக்கையில்லாதவர்கள். கடவுள் நம்பிக்கையற்றவர்களாக இருந்தாலும் வீட்டில் நடைபெறும் நல்லது கெட்டது அனைத்திற்கும் மதக் குருக்களைத்தான் அழைக்க வேண்டியிருக்கிறது. ஒரு நாத்திகவாதி தனது திருமணத்தில் தான் விரும்பிய மேற்கோள்களை சுட்டிக்காட்டி பேசவோ, அல்லது தனக்கு விருப்பமானவற்றை அச்சடித்து கொடுக்கவோ இப்போதிருக்கும் மத அமைப்புகள் அனுமதிப்பதில்லை. ஏதோ ஒரு மதகுருவை அழைத்து வந்து திருமணத்தை நடத்திக்கொள்கிறார்கள்.

மதகுருவுக்கு மணமக்களைப்பற்றியோ, மணமக்களின் பெற்றோர் பற்றியோ தெரியாது. மணமக்கள் தங்களுக்கு விருப்பமான ஒருவர் தங்களது திருமணத்தை நடத்தி வைக்கவேண்டும் என்று விரும்பினால், அவ்வாறு நடத்திக்கொள்ள சட்டத்தில் இடமில்லை. இப்போதுதான் அப்படி ஒரு சட்ட வடிவை சில அமெரிக்க மாநிலங்கள் முன் வைத்திருக்கின்றன. ‘‘பயிற்சி பெற்ற நாத்திகரும், மணமக்கள் விரும்பினால் அவர்கள் விருப்பப்படி மதகுருக்கள் இல்லாமல் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

சுயமரியாதை திருமணம்

ஆனால், 1967 ஆம் ஆண்டிலேயே தமிழ்நாடு முதல்வலாக இருந்த பேரறிஞர் அண்ணா, சுயமரியாதை திருமண சட்டம் இயற்றி உலகுக்கே முன்னோடியோக இருந்தார். மதச்சடங்குகள் இல்லாமல் செய்து கொள்ளும் திருமணமே சுயமரியாதை திருமணம் அல்லது சீர்திருத்த திருமணமாகும். சுயமரியாதை திருமணத்தை செல்லுபடி ஆக்குவதற்காக இந்து திருமணசட்டம் 7ஏல் திருத்தம், 1967 ல் கொண்டுவரப்பட்டது. நண்பர்கள், உறவினர்கள் முன்னிலையில் சுயமரியாதை திருமணம் செய்து கொள்ளலாம்.

மணமக்கள் தாம் ஒருவரை கணவன் அல்லது மனைவியாக ஏற்றுக்கொள்கிறோம் என்று தனக்கு தெரிந்த மொழியில் உறுதிமொழி ஏற்க வேண்டும். வேறு சடங்குகள் அவசியமில்லை. தமிழ்நாட்டில் உள்ள இந்துக்களுக்கு மட்டுமே இது பொருந்தும். பெரியவர்கள், உற்றார் உறவினர்கள் முன்னிலையில் உறுதிமொழி எடுத்தும் சுயமரியாதை திருமணம் செய்து கொள்ளலாம். இது, இந்தியாவல் மட்டுமல்ல, உலகிலேயே வேறு எங்கும் இல்லாத சீர்திருத்த திருமணம் ஆகும்.

தமிழ்நாடு திருமண சட்டம்-2009

2009ஆம் ஆண்டு, நவம்பர் மாதம் 24ஆம் தேதி தமிழ்நாடு திருமணப் பதிவுச் சட்டம் கொண்டு வரப்பட் டது. அந்தத் தேதிக்குப் பிறகு, மாநிலத்தில் நடக்கிற அனைத்து திருமணங்களும், திருமணத் தேதியிலிருந்து 90 நாட்களுக்குள் கட்டாயமாகப் பதிவு செய்யப்பட வேண்டும் என இந்தச் சட்டம் சொல்கிறது.

எங்கே பதிவு செய்ய வேண்டும்?

கணவரது சொந்த ஊர், மனைவியின் சொந்த ஊர், தம்பதி வசிக்கும் இடம், திருமணம் நடந்த இடம் என ஏதாவது ஒரு பகுதிக்குரிய சார்பதிவாளர் அலுவலகத்தில் திருமணத்தைப் பதிவு செய்யலாம். பதிவு செய்யும்போது, கணவன், மனைவி மற்றும் இரண்டு சாட்சிகள் தேவை. திருமணப்பதிவின் போது சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் சில உண்டு. பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்ட், வருமா னவரித் துறையால் வழங்கப்பட்ட பான் கார்ட், அரசு அல்லது அரசுத்துறை அல்லது உள்ளாட்சி அமைப்புகளால் வழங்கப்பட்ட அடையாள அட்டை, புகைப்படத்துடன் கூடிய வங்கி அல்லது அஞ்சல் அலுவலக பாஸ் புத்தகம், முதியோர் பென்ஷன் புத்தகம், துப்பாக்கி லைசென்ஸ், சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு வழங்கப்பட்ட அடையாள அட்டை, பள்ளி இறுதிச் சான்றிதழ் இவற்றில் ஏதாவது ஒன்றின் பிரதி.

கணவன், மனைவியின் வயதுக்கான ஆதாரம், திருமண அழைப்பிதழ் பிரதி அல்லது திருமணம் நடந்த இடத்தை உறுதிப்படுத்தும் விதமாக வேறு ஏதாவது ஆதாரம் போன்றவற்றை அளிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட அலுவலரிடம், திருமணத்தைப் பதிவு செய்வதற்கான விண்ணப்பத்தை இலவசமாகப் பெறலாம். அதனுடன் தேவையான ஆவணப் பிரதிகளை இணைத்து, 150 ரூபாய் கட்டணத்துடன் விண்ணப்பிக்க வேண்டும். திருமண நாளிலிருந்து தொண்ணூறு நாட்களுக்குள் திருமணத்தை பதிவு செய்யாமல் போனால், அடுத்த 60 நாட்களுக்குள் பதிவு செய்ய சட்டம் அனுமதிக்கிறது.

எந்த மதத்தினராக, ஜாதியினராக இருந்தாலும், இச்சட்டப்படி கட்டாயமாக தங்கள் திருமணத்தைப் பதிவு செய்ய வேண்டியது அவசியம். இன்னும் சொல்லப்போனால், இந்து திருமணச் சட்டம் 1955, இந்திய கிருஸ்துவ திருமணச் சட்டம் 1872, சிறப்புத் திருமணச் சட்டம் 1954, முகமதியர்கள் ஷரியத் திருமணச் சட்டம் மற்றும் வேறு எந்த தனிப்பட்ட சட்டங்களின்கீழ் திருமணம் பதிவு செய்யப்பட்டிருந்தாலும் கூட இச்சட்டத்தின் மூன்றாவது பிரிவின் கீழ் கட்டாயமாகப் பதிவு செய்யப்படுவது அவசியம்.

அதுமட்டுமல்ல, ஒருவருடைய திருமணப்பதிவு குறித்த தகவல்களையும் அறிய முறைப்படி விண்ணப்பித்து, அதற்குரிய கட்டணம் செலுத்தி, திருமண ஆவணங்களைப் பார்வையிடவும், பிரதிகள் கேட்டுப் பெறவும் சட்டத்தில் வழி இருக்கிறது.

ஆன்லைன் திருமண பதிவு

இணையம் வழியிலான திருமணப் பதிவு குறித்து விரிவான நிலையில் தெரிந்து கொள்ள…

வசிப்பிடத்தில் திருமணப்பதிவு

மணமக்கள் வசிப்பிடத்திலும் திருமணத்தை பதிவு செய்யலாம் என்ற சட்ட முன்வடிவு தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேறியது.

தமிழக சட்டப் பேரவையில், தமிழ்நாடு திருமணங்கள் பதிவு செய்தல் சட்டத்தை திருத்துவதற்கான சட்ட முன்வடிவை, சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தாக்கல் செய்தார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழ்நாடு திருமணங்கள் பதிவு செய்தல் 2009ம் ஆண்டு சட்டத்தின்படி, திருமணம் எந்த இடத்தில் நடக்கிறதோ, அந்த பகுதியில் உள்ள பதிவாளரின் அலுவலகத்தில் மட்டுமே திருமணத்தை பதிவு செய்ய முடியும். இந்த நிலையில், திருமணம் பதிவு செய்வதை எளிதாக்குவதற்காக, கடந்த 2019–20 ம் ஆண்டின் வணிக வரிகள் மற்றும் பதிவுத்துறை தொடர்பான மானிய கோரிக்கையின் போது, மணமகன் அல்லது மணமகள் தங்கும் இடத்தில் உள்ள பதிவாளரின் அலுவலகத்திலும் திருமணத்தை பதிவு செய்யும் வகையில் சட்டத்தில் தேவையான திருத்தம் செய்யப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் சி.வி. சண்முகம் அறிவித்தார்.

அந்த அறிவிப்பை செயல்படுத்துவதற்காக இந்த சட்ட முன்வடிவு செப்டம்பர் 16 ந்தேதி தாக்கல் செய்யப்பட்டு சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

எழுத்து, தொகுப்பு: மா. இளஞ்செழியன்.

செய்திப்பிரிவு: மக்கள் குரல் இணையதளக்குழு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *