சிறுகதை

ஆண்மை | பி.கல்யாணி

Spread the love

சிலு..சிலு.. வென்று காற்றில் அழகழகாய் வண்ண புடவைகளும் வெள்ளைவேட்டியும் ஆடிக்கொண்டிருந்தது.

அடர்த்தியாக வேயப்பட்ட கூரை வீட்டின் பூசணிகளும் பரங்கிகளும் காய்ச்சு தொங்கிக் கொண்டிருந்தன. மணிகண்டன் வீட்டில் காய்கறித் தோட்டம் பக்குவமாய் பராமரிக்கப்பட்டு கத்தரிக்காய் வெண்டைக்காய் புடலை தக்காளி விதவிதமாய் கண்ணைப் பறிக்கும் அளவிற்கு விளைந்திருந்தது. இவற்றை எல்லாம் பார்த்துவிட்டு வீட்டு திண்ணையில் அமர்ந்த படியே பேசிக்கொண்டிருந்தாள் பொன்னாத்தாள்.

‘‘நீ.. என்ன தான் சொல்லு. மணிகண்டன் மாதிரி ஒரு பிள்ளைய பாக்குறது சிரமம் தான் இந்த கலிகாலத்தில. இப்படியொரு பிள்ளையா..! எப்படி உழைக்கிறான்

பாரு ..’’ என்று மணிகண்டனின் அம்மா தமிழரசியிடம் பெருமூச்சுவிட்டாள் பொன்னாத்தாள் .

மேலும் பேச்சைத் தொடர்ந்த அவள்

‘‘எனக்கும் ஒரு புள்ளை இருக்கான். அன்னாடம் குடிச்சு குடிச்சு குடலை புண்ணாக்கிட்டு வீட்டுபானையில் தம்புட்டு அரிசி இல்லைன்னாலும் மூலை முடுக்கெல்லாம் தோண்டி துருவி வித்துக் குடிப்பான். அப்பறம் என்னைய ராத்திரியில் வந்து விளாசி அடிக்கிறான் என்று கவலையுடன் சொன்னாள் பொன்னாத்தாள்.

‘‘தப்பு பொன்னாத்தா.. நீ.. அவனுக்கு இத்தனை உரிமை தரக்கூடாது. பெத்தவ உன் மேல் கைவக்க நீ ..கொஞ்சமும் இடம் தரக்கூடாது. பஞ்சாயத்தில போய் அவனை சொல்..’’ என்று தமிழரசி மனம் தாளாமல் கோபமாக சொன்னாள்.

‘‘வேணாம் தமிழரசி.. என் புள்ளையை பத்து பேர் நடுவுல நானே அவமானபடுத்திற மாதிரி ஆகும். அவனுக்கு ஊருக்குள்ளே மருவாதை இருக்காது.

‘‘ம்..ம்.. அப்படினா.. அடிபட்டேசாவு.. அப்ப ஏன் எங்கிட்ட புலம்பறே? என்றாள் தமிழரசி

‘‘ இல்ல..மணிகண்டன் மாதிரி எனக்கு ஒரு பிள்ளை இருந்திருக்கலாம்னு சொல்ல வந்தேன்..’’ என்றாள் பொன்னாத்தாள்.

‘‘ஏன்.. பொன்னாத்தா அம்மா… நீங்க அம்மாவோட பிரண்டா இருந்தாலும்.. நீங்களும் எனக்கு ஒரு அம்மா மாதிரித் தான். நானும் உங்களுக்கு பிள்ளை மாதிரி தானே..! உங்களுக்கு என்ன வேதனை..? அதை என்கிட்ட சொல்லேன்..’’ என்றான் மணிகண்டன்.

‘‘என் மகன பத்தி நான் கவலை படுறத விடு.. உன்னை பத்தித்தான் எனக்கு கவலை..’’ என்று பொன்னாத்தாள் சொன்னவுடன் கொஞ்சம் உன்னிப்பாக பேச்சைக் கவனித்தான் மணிகண்டன்.

‘‘ நீ .. பத்து வயசிலிருந்து நடக்க முடியாமல் வாதமாக இருக்கும் தமிழரசிக்கு பணி விடை செய்ததை பார்த்து நான் எப்பவும் பூரிப்பேன். இப்ப உனக்கு கல்யாண வயசு..! இருந்தாலும் அம்மாவைத் தவிர உலகமே இல்லைன்னு வாழறியே..! உனக்குனு ஒரு வாழ்க்கை வேணாமா.. அது தான் என் கவலை..’’ என்றாள் பொன்னாத்தாள்

‘‘எல்லாம் என் தனிமையை கொல்லத்தான் செஞ்சிட்டிருக்கேன்..’’என்று மணிகண்டன் அம்மா அசுத்தமாக்கிய இடத்தை முறையாய் சுத்தம் செய்தபடியே பேசினான்

‘‘ஏய்.. தமிழரசி…. என் பொண்ணை மணிகண்டனுக்கு கண்ணாளம் கட்டிவச்சா.. அவ உன்னை நல்லா பாத்துப்பா..’’ என்று சொன்னாள் பொன்னாத்தாள் .

அப்போது குறிக்கிட்ட மணிகண்டன்

‘‘அம்மா.. அந்த பாக்கியம் எனக்கில்லை உங்க கிட்ட ஏன் மறைக்கணும்? காளை மாடு அம்மாவை விரட்டிச்சு அம்மாவை பிடித்துத் தள்ளி நான் தரையில் விழுந்திட்டேன். அது என் உயிர் நிலையில் குத்தியதால் எனக்கு ஆண்மை நரம்பினில் இரத்தம் சீராக ஓடலை. ஒரு நரம்பு துண்டிச்சிருச்சு.. அதனால நான் கல்யாணம் பண்ணிக்க தகுதி இல்லாதவனாக ஆகிட்டேன். ஒரு பொண்ணுக்கு வாழ்கை கொடுக்க முடியாத நான்.. என்னை பெத்த அம்மாவை என் பொண்ணா நினைச்சு பணிவிடை செய்றேன்; அந்த ஆத்ம திருப்தி போதும் என்று பேசினான் மணிகண்டன்

‘‘மணிகண்டா.. ஒளிவு மறைவில்லாமல் இந்த விசயத்த எங்கிட்ட சொல்லிட்டியே. நீ.. தங்கமான பிள்ளைப்பா..

‘‘அம்மா என் விதியை நான் நொந்துகலை . எப்போதும் என்னால் முடிஞ்ச நல்லதை செய்யிறேன் . தென்னம் பிள்ளையை வளர்த்து இளநீர் காய்களை வித்து, அதுல வரும் காசில அனாதை குழந்தைகளுக்கு ஸ்கூல் பீஸ் கட்டறேன் . அந்த பிள்ளைங்க தான் என் பிள்ளைங்க.. அந்த குழந்தைங்க வளர்ந்தாலும் என்கிட்ட இப்ப பாசமா இருக்கிறது போல் எப்பவும் பாசமாக இருப்பாங்க என்றான் மணிகண்டன்.

‘ ‘மணிகண்டா … ஆண்மை ஒரு ஆணோட காம கழிவில் இல்லடா .. உன் பெருந்தன்னையான மனசில் தான் இருக்கு.. உன்னோட பேராண்மை தான்.. மலை போன்ற பெருமை உடையது. உன் கிட்டா தாலிகட்டிக்கதான் என் பெண்ணுக்கு குடுப்பினை இல்லை..ஆனா அவளுக்கு ஒரு அண்ணனா இருந்து. நீ.. தான் ஒரு நல்ல பையனை பார்த்து மணமுடிக்கணும்..’’ என்ற பொன்னாத்தாவின் கரங்களை நம்பிக்கையுடன் பற்றி அதற்கு ஆமோதித்தான் மணிகண்டன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *