செய்திகள்

மறைந்த பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு பத்ம விபூஷண் விருது

பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா, வில்லிசைக் கலைஞர் சுப்பு ஆறுமுகத்துக்கு பத்மஸ்ரீ விருது

புதுடெல்லி, ஜன.26-

மறைந்த பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம், ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே உள்பட 7 பேருக்கு பத்ம விபூஷண் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கலை, இலக்கியம், மருத்துவம், சமூக சேவை என பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு நாட்டின் உயரிய விருதுகளான பத்மஸ்ரீ, பத்மபூஷண், பத்மவிபூஷண் ஆகிய விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. நாட்டின் மிக உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம விருதுகள் ஆண்டுதோறும் குடியரசு தினத்தையொட்டி அறிவிக்கப்படுவது வழக்கம்.

அந்த வகையில் நடப்பண்டுக்கான பத்ம விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி, 102 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகளும், 7 பேருக்கு பத்ம விபூஷண் விருதுகளும், 10 பேருக்கு பத்ம பூஷன் விருதுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

மறைந்த புகழ்பெற்ற பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம், ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே உள்பட 7 பேருக்கு பத்ம விபூஷண் விருது வழங்கப்படுகிறது.

பிரபல பின்னணிப் பாடகி சித்ரா, மறைந்த அசாம் முன்னாள் முதல்வர் தருண் கோகோய், மக்களவை முன்னாள் சபாநாயகர் சுமித்ரா மகாஜன், முன்னாள் மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான், குஜராத் முன்னாள் முதலமைச்சர் கேசுபாய் படேல் உள்ளிட்ட 10 பேர் பத்ம பூஷண் விருது பெறுகின்றனர்.

பிரபல பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையாவுடன், தமிழகத்தைச் சேர்ந்த இந்திய பெண்கள் கூடைப்பந்து அணி முன்னாள் கேப்டன் பி.அனிதா, வில்லிசைக் கலைஞர் சுப்பு ஆறுமுகம், நூறு வயது தாண்டிய சாதனை இயற்கை விவசாயி பாப்பம்மாள், கர்நாடக இசை பாடகி பாம்பே ஜெயஸ்ரீ, ஓவியக் கலைஞர் கே.சி.சிவசங்கர், சமூக சேவகர் மாராச்சி சுப்புராமன், மறைந்த தொழில் முன்னோடி பி.சுப்பிரமணியம், ‘2 ரூபாய் டாக்டர்’ என்று அழைக்கப்பட்ட மறைந்த திருவேங்கடம் வீரராகவன், புதுமை தொழில்முனைவாளர் ஸ்ரீதர் வேம்பு உள்ளிட்ட 102 பேருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்படுகிறது.

பத்ம விருது பெறுபவர்களில் 29 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வெளிநாட்டவர், வெளிநாடுவாழ் இந்தியர், ஒரு மாற்றுத்திறனாளி உள்ளிட்ட 10 பேரும் விருது பெறுகின்றனர். 16 பேருக்கு அவர்களது மறைவுக்குப் பின் விருது வழங்கப்படுகிறது. வருகிற மார்ச், ஏப்ரல் மாதங்களில் டெல்லி ஜனாதிபதி மாளிகையில் நடைபெறும் விழாவில் இவ்விருதுகளை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்குவார் என தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *