செய்திகள்

உயிரோடு இருந்த அண்ணனை குளிர்சாதன பெட்டியில் வைத்து சாகும்வரை விழித்திருந்த தம்பி

உயிரோடு இருந்த அண்ணனை குளிர்சாதன பெட்டியில் வைத்து சாகும்வரை விழித்திருந்த தம்பி

சேலத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

சேலம், அக். 14–

உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிருக்குப் போராடிய அண்ணனை குளிர்சாதனப் பெட்டியில் வைத்து அவர் சாகும்வரை விடிய விடிய அவரது தம்பி விழித்திருந்தார். இது குறித்து அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சேலம் கந்தம்பட்டியில், பழைய ஹவுசிங் போர்டு பகுதியில் வசிப்பவர் சரவணன் (70). இவர் அண்ணன் பாலசுப்பரமணிய குமார் இறந்து விட்டதாக கூறி நேற்று குளிர்சாதன பெட்டிக்காக தகவல் கொடுத்துள்ளார். இதனை அடுத்து குளிர்சாதனப்பெட்டி பணியாளர்கள் சம்மந்தப்பட்ட சரவணன் வீட்டிற்கு வந்து குளிர்சாதனப் பெட்டியை வைத்துவிட்டு இன்று பிற்பகல் வருவதாகக் கூறிச் சென்றனர்.

அதன்படி நேற்று பிற்பகல் குளிர்சாதன பெட்டியை திரும்ப எடுக்க வந்த பணியாளர்கள், குளிர்சாதனப் பெட்டிக்குள் முதியவர் உயிரோடு துடித்துக் கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அருகிலிருந்தவர்களிடம் தெரிவித்தனர். அவர்கள் வந்து பார்க்கும் போது முதியவர் குளிர்சாதனப் பெட்டிக்குள் இரவு முழுவதும் உயிரோடு இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அங்கிருந்தவர்கள் சூரமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாரதிராஜா தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் நடுங்கி கொண்டிருந்த முதியவரை மீட்க முயன்றனர். அப்போது போலீசாரை சரவணன் தடுத்தார். உடனே போலீசார் குளிர்பதனப்பெட்டியில் நடுங்கி கொண்டிருந்த பாலசுப்பிரமணிய குமாரை அதிரடியாக மீட்டனர். பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதியவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

இது குறித்து போலீசார் கூறியதாவது:-

தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதியவரை நேற்று நள்ளிரவு வீட்டிற்கு அழைத்து வந்து உள்ளனர். பின்னர் அதிகாலையில் அவரை குளிர்பதன பெட்டியில் வைத்து உள்ளனர். சுமார் 12 மணி நேரம் அவர் குளிர்பதன பெட்டியில் நடுங்கிக்கொண்டு இருந்துள்ளார். அதிர்ஷ்டவசமாக அசம்பாவித சம்பவம் எதுவும் நடைபெறவில்லை.

சரவணன் சற்று மனநிலை பாதித்தவர் என்பது தெரிய வருகிறது. இதனால் அவர் இந்த செயலில் ஈடுபட்டு உள்ளார் என்பதும் தெரிய வருகிறது. இருப்பினும் தொடர்ந்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *