சினிமா செய்திகள் முழு தகவல்

‘காதல் மன்னன்’: பிளாஸ்பேக்!

பொன்மனச் செல்வன், காவியத் தலைவனான கதை

‘காதல் மன்னன்’ ஜெமினி கணேசன் : எம்.ஜி.ஆர், சிவாஜி எனத் தமிழ் திரையுலகை ஆட்சி செய்துகொண்டிருந்த காலக்கட்டத்தில், தன்னுடைய அழகாலும், இயற்கையான நடிப்பாலும் தனக்கென ஒரு தனி பாணியை ஏற்படுத்திக்கொண்டவர். முடி சூடா மன்னர்கள் மூவரில் ஒருவர். முற்றிலும் மாறுபட்ட நடிப்பில் தமிழ் சினிமாவை ஆட்சிசெய்த அற்புதக் கலைஞன்.

தமிழில் மட்டுமல்லாமல், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் எனப் பிற இந்திய மொழி களிலும் சுமார் 200 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளவர்.

இந்திய அரசின் உயர்ந்த விருதுகளில் ஒன்றான ‘பத்மஸ்ரீ’ விருது பெற்றவர். அவர் உருவம் பதித்த தபால் தலை வெளியிடப்பட்டு கௌரவிக்கப்பட்டவர்.

ஜெமினி கணேசன், 1920ம் ஆண்டு நவம்பர் 17ல் “புதுக்கோட்டை” என்ற இடத்தில் ‘ராமசாமி’, ‘கங்கம்மா’ தம்பதிக்கு மகனாக பிறந்தார். ஒரு வசதியான குடும்பம். சிறுவயதில் தன்னுடைய தாத்தா நாராயண சாமி ஐயர் வீட்டில் வளர்ந்த ஜெமினி கணேசன் பிறகு புதுக்கோட்டையிலுள்ள குலமது பாலையா பிரைமரி ஸ்கூல், சென்னையில் உள்ள ராஜா முத்தையா செட்டியார் உயர் நிலைப்பள்ளியில் படித்தார். பின்னர், சென்னை கிறிஸ்துவ கல்லூரியில் இளங்கலைப் படிப்பைத் தொடர்ந்தார். விளையாட்டு, பேச்சு, பாட்டு எனப் பல திறமைகள் கொண்ட சிறந்த மாணவனாக திகழ்ந்தார்.

கல்லூரிப் படிப்பை வெற்றிகரமாக முடித்த ஜெமினி கணேசன், ஆரம்ப காலத்தில் தான் படித்த கல்லூரியிலேயே ஆசிரியராகப் பணியாற்றினார். பின்னர், ஜெமினி பட நிறுவனத்தில் மேலாளராகப் பணியில் சேர்ந்தார். 1947ம் ஆண்டு, ஜெமினி தயாரிப்பில் ‘மிஸ் மாலினி’ என்ற திரைப்படத்தில் ஒரு சிறிய வேடம் தாங்கி நடித்தார். அதனைத் தொடர்ந்து, ஜெமினி பட நிறுவனங்களின் படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்துவந்தார்.


20 வயதில் திருமணம்; 3 மனைவிகள்

1940 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தன்னுடைய 20 வயதில் அலமேலு என்ற பாப்ஜியை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 4 மகள்கள் பிறந்தனர். பின்னர், இந்தி நடிகையான புஷ்பவள்ளியை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் பிறந்தனர். ஒரு மகள் இந்தி டாப் ஸ்டார் ரேகா. அதன் பிறகு, 1953 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் ‘நடிகையர் திலகம்’ என்று புகழ்பெற்ற சாவித்திரியை திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு விஜயசாமுண்டீஸ்வரி என்ற மகளும், சதீஷ் என்ற மகனும் பிறந்தனர். ஜெமினிகணேசன் இறுதி காலத்தில் சிறுநீரகக் கோளாறால் அவதிப்பட்டு 2005ம் ஆண்டு மார்ச் மாதம் 22ந் தேதி 84 வது வயதில் காலமானார்.


1952 ஆம் ஆண்டு கே. ராம்நாத் இயக்கத்தில் வெளிவந்த ‘தாய் உள்ளம்’ என்ற திரைப்படத்தில் ஆர். எஸ். மனோகர் கதாநாயகனாவும், எம். வி. ராஜம்மா கதாநாயகியாகவும் நடிக்க, வில்லன் வேடத்தில் ஜெமினி கணேசன் நடித்தார். இதில் ஒரு விசேஷயம் கதாநாயகனாக நடித்த ஆர். எஸ். மனோகர், பிற்காலத்தில் வில்லன் வேடத்துக்கு மாறினார், வில்லனாக நடித்த ஜெமினி கணேசன் கதாநாயகனாக மாறினார். ‘காதல் மன்னன்’ எனப் பெயர் பெற்றார்.

‘மனம்போல மாங்கல்யம்’ இரட்டை வேடம்

தொடக்கத்தில் ஒரே ஒரு திரைப்படத்தில் மட்டுமே வில்லன் கதாபாத்திரத்தினை ஏற்று நடித்த ஜெமினி கணேசன் , அதற்கு அடுத்த ஆண்டே ‘பெண்’ என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக வேடம் ஏற்று நடித்தார்.

1953 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இத்திரைப்படம், எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை என்றாலும், அதே ஆண்டில் வெளியிடப்பட்ட ‘மனம்போல மாங்கல்யம்’ என்ற திரைப்படத்தில், அவர் இரட்டை வேடம் ஏற்று நடித்தார். இத்திரைப்படம், மாபெரும் வெற்றி பெற்று ஜெமினி கணேசனின் திரை வாழ்க்கையில் அடுத்த படிக்கட்டாக அமைந்ததோடு மட்டுமல்லாமல், சொந்த வாழ்க்கையிலும் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. இத்திரைபடத்தில் தன்னுடன் கதாநாயகியாக நடித்த, சாவித்திரியை திருமணம் செய்துகொண்டார்.


நினைவில் நின்ற வெற்றிப்படங்கள்

‘மளாணனே மங்கையின் பாக்கியம்’, ‘மிஸ் மாலினி’, ‘கணவனே கண் கண்ட தெய்வம்’, ‘மிஸ்ஸியம்மா’, ‘மாமன் மகள்’, ‘வஞ்சிக்கோட்டை வாலிபன்’, ‘பார்த்திபன் கனவு’, ‘கல்யாணப்பரிசு’, ‘சுமைதாங்கி’, ‘பாசமலர்’, ‘தேன் நிலவு’, ‘பாதகாணிக்கை’, ‘கற்பகம்’, ‘சின்னஞ்சிறு உலகம்’, ‘இரு கோடுகள்’, ‘புன்னகை’, ‘தாமரை நெஞ்சம்’, ‘நான் அவனில்லை’, ‘பத்தினி தெய்வம்’, ‘வாழவைத்த தெய்வம்’, ‘களத்தூர் கண்ணம்மா’, ‘பாவமன்னிப்பு’, ‘பார்த்தால் பசி தீரும்’, ‘காத்திருந்த கண்கள்’, ‘ஹலோ மிஸ்டர் ஜமீன்தார்’, ‘வல்லவனுக்கு வல்லவன்’, ‘வீர அபிமன்யு’, ‘சரஸ்வதி சபதம்’, ‘பணமா? பாசமா?’, ‘பூவா – தலையா?’, ‘காவியத் தலைவன்’, ‘பொன்மனச் செல்வன்’, ‘அவ்வை சண்முகி’, ‘மேட்டுக்குடி’ – ஜெமினி நடிப்பில் நினைவில் நின்ற வெற்றிப் படங்கள்.


இணைந்து நடிக்க முகஞ்சுளிக்காதவர்

தொடர்ந்து காதல், குடும்பம், சமூகம், சரித்திரம், வீரம் என அனைத்து கதாபாத்திரங்களிலும் யதார்த்தமான நடிப்பை வெளிபடுத்திய ஜெமினி கணேசன், இயக்குனர்களின் நாயகனாகவும், திரைக்கதாநாயகிகளின் நாயகனாக வும், சினிமா ரசிகர்களின் நாயகனாக வும் விளங்கினார்.

ஒரு முன்னணி கதாநாயகனாக இருந்தபொழுதும், சிவாஜி கணேசன், எம்.ஜி.ஆர், ஜெய்சங்கர், முத்துராமன், ஏவி.எம். ராஜன் போன்ற பிற நட்சத்திரங்களுடன் இணைந்து நடிக்க எப்பொழுதும் தயங்கியதே இல்லை. 1947ம் ஆண்டு தன்னுடைய திரைவாழ்க்கையினைத் தொடங்கினார் 1953-க்கு பிறகு தொடர்ந்து கதாநாயகனாக முத்திரைப் பதித்து, சுமார் 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தார். 1970ம் ஆண்டு இறுதியில் வெளிவந்த ‘லலிதா’ என்ற திரைப்படமே அவர் கதாநாயகனாக நடித்த கடைசி படம். அதன் பிறகு, தன்னுடைய இறுதிக்காலம் வரை கமல்ஹாசன், சிரஞ்சீவி, சத்தியராஜ், விக்ரம், கார்த்திக் போன்ற நடிகர்களுடன் குணச்சித்திரப் பாத்திரங்களை ஏற்று நடித்து வந்தார். ‘அவ்வை சண்முகி’ அருமை.

எழுத்து, தொகுப்பு: வீ.ராம்ஜி

மேலும் படிக்க….

ஜெமினியோடு திரை பிரபலங்களின் சுவையான பேட்டி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *