வாஷிங்டன், பிப். 3–
அமெரிக்காவை சேர்ந்த ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் தலைமை நிர்வாக அதிகாரி ஜெப் பெசோஸ், அந்த பதவியிலிருந்து விலகி செயல் தலைவராக பதவி ஏற்க இருக்கிறார். இவருக்கு பதிலாக அமேசான் வெப் சர்வீசஸ் தலைமை நிர்வாக அதிகாரி ஆன்டி ஜெஸி அந்த பதவியை ஏற்க இருக்கிறார்.
உலகின் மிகப்பெரிய பன்னாட்டு ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான், 1994ம் ஆண்டு துவங்கப்பட்டது. ஜெப் பெசோஸ், இந்த நிறுவனத்தை புத்தக விற்பனை மையமாகவே துவக்கினார். பின்னர் நாளடைவில் வளர்ச்சியடைந்து மிகப்பெரிய ஆன்லைன் வர்த்தக நிறுவனமாக முன்னேறியது. இதன் நிகர விற்பனையும் அதிகரித்ததால், ஜெப் பெசோஸின் சொத்து மதிப்பும் நாளுக்குநாள் கூடியது.
இந்நிலையில், அமேசான் தலைமை நிர்வாக அதிகாரி பதவியிலிருந்து பெசோஸ் விலகுவதாகவும், அதற்கு பதிலாக ஆன்டி ஜெஸி புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக இருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த மாற்றங்கள் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஜெப் பெசோஸ், தன் ஊழியர்களுக்கான குறிப்பில், ‘அமேசானின் செயல் தலைவராக முக்கிய நடவடிக்கைகளில் அங்கம் வகிப்பேன். இது தவிர டே ஒன் பண்ட், தி பெசோஸ் எர்த் பண்ட், ப்ளூ ஆரிஜின், தி வாஷிங்டன் போஸ்ட் என எனக்கு பிடித்த சில விஷயங்களிலும் ஈடுபட வேண்டியுள்ளது,’ என குறிப்பிட்டுள்ளார்.
புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக பொறுப்பேற்கவுள்ள ஆன்டி ஜெஸி, 1997ம் ஆண்டு அமேசானில் சேர்ந்துள்ளார். இவர்தான் அமேசான் வெப் சர்வீஸை துவங்கி அதை கோடிக்கணக்கானோர் பயன்படுத்தும் கிளவுட் பிளாட்பார்மாக உருவாக்கியவர். ஜெப் பெசோஸின் இந்த முடிவை வரவேற்று கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர்பிச்சை, மைக்ரோசாப்ட் தலைமை நிர்வாக அதிகாரி சத்திய நடெல்லா ஆகியோர் தங்களது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.