செய்திகள் வாழ்வியல்

வீட்டுக்காக வாழ்ந்த சாதாரண புருஷர் அல்ல, நாட்டுக்காகவே வாழ்ந்த கவிப்புருஷர் பாரதி…!

* ஓரிடத்தில் தேங்கியவரல்ல, நதிபோலஓடிக்கொண்டிருந்தவர்

* பாரதியின் எல்லாப் பாட்டும் மனைவி செல்லம்மாவுக்கு மனப்பாடம்

வீட்டுக்காக வாழ்ந்த சாதாரண புருஷர் அல்ல, நாட்டுக்காகவே வாழ்ந்த கவிப்புருஷர் பாரதி…!’’

எள்ளுப்பேரன் நிரஞ்சன் பாரதி

* எதையும் காலத்தை மீறி யோசித்தவர்

* கல்யாணத்தில் காதல் பாட்டுக்கள் பாடியவர்

சிங்கத்தைத் தடவிக் கொடுத்து, அன்போடு பேசிய மகாகவி

பாரதி–யார்? ஆய்வுகள் நடக்கிறது. அவரது படைப்புகளை படிப்பது ஒருபுறம் இருக்கட்டும், படித்தபடி நடந்திருந்தால் “தாழ்த்தப்பட்ட” என்ற வார்த்தை தமிழ் அகராதியிலிருந்து தனித்து விடப்பட்டிருக்கும்.

பாரதியின் சிந்தனை உலக அதிசயங்களின் 8வது அதிசயம். காரணம் எக்காலத்துக்கும் நிலைத்து நிற்கும் அவரது பாடல்களே அதற்கு சாட்சி.

புறக்கணிப்புகளை புறந்தள்ளி புதுயுகம் படைத்த பாரதியின் 138வது பிறந்த நாளையொட்டி (டிசம்பர் 11) அவரது எள்ளுப்பேரன் நிரஞ்சன் பாரதி, “மக்கள் குரல்” நாளிதழின் சிறப்பு செய்திக்காக அளித்த பேட்டி இதோ…

பாரதி–யார்?

‘‘பாரதி வெறும் புலவரல்ல. சொற்களை வரிசைப் படி அடுக்கி பாட்டெழுதும் நபரல்ல அவர். மிடுக்கு நிறைந்த மனிதர். ஓர் இடத்தில் தேங்கி நின்றதில்லை. நதி போல் ஓடிக்கொண்டே இருந்தவர் பாரதி. பல நாட்கள் சாப்பாடே இல்லாமல் பாரதி குடும்பம் தூங்கி உள்ளது. அப்போது கூட அவரது சிந்தனை துடிப்போடு தான் செயல்பட்டது. சாதி மதத்திற்கு அப்பாற்பட்டு பரந்துபட்ட பார்வை கொண்டவர் பாரதி’’.

தற்போதும் பாரதி பேசப்படுகிறாரே…?

தமிழகத்தில் மீண்டும் பாரதியை போற்றப்படும் நிகழ்வுகள் நடந்து வருகிறது. எந்த ஒரு சூழ்நிலையிலும் பாரதியை தொடாமல் நாம் எதையும் யோசிக்க முடியாது.

கலைத்துறை என்றால் படத்தின் தலைப்புகள், பாடல்களில் பாரதியின் வரிகள் அல்லது வார்த்தைகள் எடுத்துக்கொள்ளப்படுகிறது. சமீபத்திய உதாரணம் “சூரரைப்போற்று”.

செல்லம்மா பற்றி…?

செல்லம்மாவுக்கு 7 வயது. பாரதிக்கு 14 வயது. இருவருக்கும் குழந்தை திருமணம் நடந்தது. செல்லம்மா பள்ளிக்கு சென்றதில்லை. இல்லற வாழ்க்கையின் ஆரம்ப காலத்தில் பாரதியை செல்லம்மாவால் புரிந்து கொள்ள முடியவில்லை.

வேலைக்கு போய் சம்பாதித்து, மாத சம்பளத்தை மனைவியிடம் கொடுத்து வாழும் ஒரு சராசரி மனிதனாக பாரதி வாழ வில்லை. தேசிய பணியில் ஈடுபட அரண்மனை பணியை உதறி தள்ளியவர் பாரதி.

ஏச்சுக்கும் பேச்சுக்கும் மத்தியில் வறுமையில் வாடிய குடும்பத்தை நிர்வகிக்கும் பொறுப்பை செல்லம்மா ஏற்றுக்கொண்டார்.

பாரதி வீட்டுக்காக வாழும் சாதாரண புருஷர் இல்லை. நாட்டுக்காக வாழும் கவி புருஷர் என்பதை மெதுவாகத்தான் செல்லம்மா உணர்ந்தார்.

பாரதி–செல்லம்மா இணை பற்றி…

பாரதி தனது கவிதைகளை முதலில் வாசித்துக் காட்டுவதும், பாடிக்காட்டுவதும் செல்லம்மாவிடம் தான். அவர் வாசித்துக் காட்டும்போதும், பாடிக் காட்டும்போதும் அழுகை வந்துவிடும் என செல்லம்மா குறிப்பிட்டு உள்ளார்.

பாரதியின் கவிதைகள் அனைத்தும் செல்லம்மாவுக்கு மனப்பாடமாக தெரியும். பாரதியிடம் கவிதை உற்பத்தியாவதையும் அதற்கு அவர் தவியாய் தவிப்பதையும் செல்லம்மா நேரில் பார்த்து உள்ளார். ஊடலையும் தாண்டி ஒருவரை ஒருவர் புரிந்து கொண்ட இணையர்கள் என்று சொல்லலாம்.

பாரதி செல்லம்மாவை நடத்திய விதம்…

சில சமயம் கோபத்தில் பாரதி அரிதிலும் அரிதாக செல்லம்மாவை அடித்து விடுவார். அதற்காக பாரதி வன்முறையாளர் அல்ல.

தனது தவறுக்கு செல்லம்மாவிடம் பாரதி மன்னிப்பு கேட்பார். என்னை மன்னித்து விடு, உன்னை கோபித்து கொண்ட பாரதி செத்துவிட்டான். புதிய பாரதி வந்திருக்கிறேன். என்னை ஏற்றுக்கொள் செல்லம்மா என்று சொல்வார்.

இன்றைய நவீன காலத்திலும் கூட நாம் ஆணாதிக்கத்தை பற்றி பேசுகிறோம்.

நூறாண்டுகளுக்கு முன் ஆணாதிக்கம் ஊறிய சமூகத்தில் நாம் இருந்தோம். அந்த காலக்கட்டத்தில் ஆணாதிக்கவாதியாக பாரதியார் நடந்து கொள்ளவில்லை என்பதை நாம் இந்த சம்பவத்தில் உணர்ந்து கொள்ளலாம்.

செல்லம்மாவின் பார்வையில் பாரதி…

எதையும் காலத்தை மீறி யோசிப்பவர் பாரதி. அந்த காலக்கட்ட மக்கள் குறுகிய மனப்பான்மையுடன் இருந்தனர். அவர்கள் பாரதியை விமர்சனம் செய்தனர். ஒரு சராசரி பெண்ணாகத்தான் செல்லம்மா யோசித்தார். நமக்கு ஏன் இப்படி ஒரு கணவர் வாய்க்கனும்? சராசரி கணவனாக பாரதி நடந்து கொள்ள மாட்டாரா? என செல்லம்மா ஏங்கினார். இதற்காக பாரதியிடம் செல்லம்மா வம்பளந்தது இல்லை. போகப் போக பாரதியை செல்லம்மா புரிந்து கொண்டார்.

அரவது பாடல்கள் உருவான விதம்…

பாரதியின் இரண்டாவது மகளை “பாப்பா” என்று செல்லமாக அழைப்பதுண்டு. அதை வைத்து தான் “ஓடிவிளையாடு பாப்பா…” என்ற பாடலை எழுதினார்.

சமைக்க வைத்த அரிசியை குருவிகளுக்கு போட்டு விட்டு, செல்லம்மா… இவைகளைப் பார்… எவ்வளவு மகிழ்ச்சியாக வாழ்க்கையை ரசிக்கின்றன. சிட்டு குருவிகளிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும் என்பார்.

சகுந்தலா பாரதியை மடியில் வைத்து கொண்டு தான் “விட்டு விடுதலையாகி நிற்பாய்…”என்ற சிட்டுக்குருவி பாடலை எழுதினார். விடிய விடிய இந்த பாடலை பாடி ஆடியிருக்கிறார்கள். இந்த பாடலை பத்திரிக்கைக்கு அனுப்புகிறேன். பணம் கிடைக்கும். கவலைப்படாதே செல்லம்மா என்று ஆறுதல் கூறுவாராம்.

கண்ணம்மா யார்?

திருமணத்தின் போது பாரதி, காதல் பாடல்களை பாடியிருக்கிறார். பெரும்பாலான பாடல்களில் செல்லம்மா என்று தான் எழுதியிருந்தார். அந்த பாடல்களை பதிப்பிக்கும்போது பாடல்களில் செல்லம்மா… செல்லம்மா… என்று வருகிறதே என நினைத்து செல்லம்மாவின் சகோதரர் அப்பாதுரை, நாகரீகம் கருதி கண்ணம்மா… கண்ணம்மா… என மாற்றிவிட்டார். ஒரு சில பாடல்கள் கண்ணனை மனதில் வைத்து எழுதப்பட்டவையாக கூட இருக்கலாம்.

பாரதியின் இயல்பான வாழ்க்கை குறித்து…?

சில நாள் காலை எழுந்து சுறுசுறுப்பாக குளித்து சாப்பிட்டு ரெடியாகிவிடுவார். இவர் கட்டுரை எழுது ஆரம்பித்து விடுவார், நமக்கு பணம் வரும் என செல்லம்மா நினைப்பார். ஆனால் அவர் திடீரென கடற்கரையில் போய் அமர்ந்து விடுவார். அவரை கணிக்க முடியாது. சில சமயம் கோபித்து கொண்டு வீட்டுக்கு பத்து பதினைந்து நாள் வராமல் போய்விடுவார். பாரதி அப்பளத்தை மிகவும் விரும்பி சாப்பிடுவாராம்.

பாரதிக்கு பின் செல்லம்மா…

சிறுவயதிலேயே பாரதி இறந்து விட்டார். செல்லம்மாவின் அண்ணன் அப்பாதுரையின் அரவணைப்பில் தான் குடும்பம் இருந்தது. யானைக் கூட்டத்துக்கு எப்படி பெண் யானை தலைமை தாங்குமோ அது போல பாரதியின் மரணத்துக்கு பின் குடும்பத்தை வழி நடத்தியது செல்லம்மாதான். மிகவும் கண்டிப்பானவர் என சொல்லக் கேட்டிருக்கிறேன்.

பாரதியார் வாரிசுகள் பற்றி?

பாரதியாரின் இருமகள்கள் தங்கம்மா, சகுந்தலா. தங்கம்மா சிறந்த பேச்சாளர். அவரது மகள் லலிதா பாரதி. அவரது மகன் ராஜ்குமார் பாரதி. கர்நாடக இசைப் பாடகர். அவரது மகன் தான் நான், நிரஞ்சன் பாரதி. சகுந்தலா குடும்பத்தினர் வெளிநாட்டில் செட்டிலாகிவிட்டனர்.

பாரதியிடம் பிடித்த கவிதை…?

“தேடிச்சோறு நிதம் தின்று…” என்ற கவிதை எனக்கு மிகவும் பிடிக்கும். தெறித்து விழுந்த நெருப்பு துண்டு போல இருக்கும் அந்த கவிதை.

பாரதி ஒரு புதையல். இன்னும் ஆராயப்பட வேண்டியவர். அடுத்த தலைமுறையினருக்கு பாரதியை கொண்டு செல்லும் பணி பல்வேறு தளங்களில் நடைபெற்று வருகிறது. நானும் எனது பங்கிற்கு “பசுமைக் கவிஞன்” என்ற யூடியூப் சேனல் வழியாக பாரதியின் வாழ்க்கை வரலாற்றை காணொளிகளாக பதிவு செய்து வருகிறேன். இவ்வாறு நிரஞ்சன் பாரதி கூறினார்.

“ஜதிப்பல்லக்கு” பிடிக்கும்

பாரதி ஜதிப்பல்லக்கில் அரசன் தன்னை அழைத்து போக வேண்டும் என ஆசைப்பட்டார். அந்த ஆசை அவருக்கு நிறைவேற இல்லை. அவரது ஆசையை நிறைவேற்றும் வகையில் பார்த்தசாரதி கோயில் வளாகத்தில் நடக்கும் பாரதி பிறந்த நாள் விழாவில் அவரது மார்பளவு சிலை பல்லக்கில் வைத்து கோயிலை சுற்றி எடுத்து வரப்படுகிறது.

கார்ட்டூன் அறிமுகம்

பத்திரிக்கை துறைக்குள் நுழைந்த பிறகு தான் உலக நடப்புகளை பாரதி அறிந்து கொள்ள களம் அமைந்தது. அதற்கு முன் கவிதையாளராக மட்டுமே இருந்தார். கார்ட்டூன் வடிவத்தை தமிழ் பத்திரிக்கை உலகத்துக்கு அறிமுகம் செய்தவர் பாரதி.

சிங்கத்துக்கு நல்ல புத்தி…

செல்லம்மாவும், பாரதியும் உறவினர் திருமணத்திற்காக திருவனந்தபுரம் சென்றனர். அப்போது மிருக காட்சி சாலைக்கு சென்றனர். பாரதி அங்கிருந்த சிங்கத்தை தடவி கொடுத்து அதனுடன் பேசவும் ஆரம்பித்து உள்ளார். மற்றவர்களுக்கு இது பைத்தியக்காரத்தனமாக தோன்றும். இதை பார்த்த செல்லம்மா “கடவுளே சிங்கத்துக்காவது நல்ல புத்திய கொடு”; “என் புருஷன்கிட்ட பார்த்து நடந்து கொள்ளச் சொல்” என வேண்டிக்கொள்வதாக குறிப்பிட்டு உள்ளார்.

– ஷீலா பாலச்சந்திரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *