செய்திகள்

வெற்றிக் கோப்பையுடன் நாடு திரும்பிய இந்திய வீரர்கள்: உற்சாக வரவேற்பு

புதுடெல்லி, ஜன. 21–

ஆஸ்திரேலியா டெஸ்ட் மற்றும் டி20 தொடர்ககளில் வெற்றி பெற்று வெற்றிக் கோப்பையுடன் நாடு திரும்பிய இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி, டெஸ்ட், ஒருநாள், டி20 தொடர்களில் விளையாடியது. ஒருநாள் தொடரை 1–-2 எனத் தோற்றது இந்திய அணி டி20 தொடரை 2–-1 என வென்றது. 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் ஆஸ்திரேலியா அணியும், 2வ போட்டியில் இந்திய அணிவும் வெற்றி பெற்று 3வது போட்டி டிராவில் முடிந்தது. இதனால் இரு அணிகளும் 1–1 என்ற புள்ளிகளுடன் பிரிஸ்பேனில் நடந்த 4வது டெஸ்ட் போட்டியில் களம் இறங்கின. இந்திய அணி வெற்றி பெற 328 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்திய அணி 2-வது இன்னிங்ஸில் 97 ஓவர்களில் 329 ரன்கள் எடுத்து பிரிஸ்பேன் டெஸ்டை 3 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ரிஷப் பண்ட் 89 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்து இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார். இதனால் ரஹானே தலைமையிலான இந்திய அணி 2-–1 என டெஸ்ட் தொடரை வென்று பார்டர் கவாஸ்கர் கோப்பையையும் கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. கடந்த முறை ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரையும் கோலி தலைமையிலான இந்திய அணி வென்றது.

இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் மற்றும் டி20 தொடர்களை வென்றுள்ள இந்திய அணி இன்று நாடு திரும்பியது. பிரிஸ்பேனிலிருந்து ரஹானே, ரவி சாஸ்திரி, ரோஹித் சர்மா, ஷர்துல் தாக்குர், பிரித்வ் ஷா போன்றோர் மும்பை விமான நிலையத்திற்கு வந்து இறங்கினர். அவர்களை மும்பை கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் வரவேற்றார்கள். பிரிஸ்பேனிலிருந்து பெங்களூர் வந்த நடராஜன், அங்கிருந்து சொந்த ஊரான சேலத்துக்குச் செல்கிறார். அஸ்வின், வாஷிங்டன் சுந்தர், பந்துவீச்சுப் பயிற்சியாளர் பரத் அருண் ஆகியோர் தற்போது துபாயில் உள்ளார்கள். அங்கிருந்து நாளை காலை இந்தியாவுக்குத் திரும்புகிறார்கள்.

பிரிஸ்பேனில் சிறப்பாக விளையாடிய ரிஷப் பண்ட் டெல்லி வந்தார். டெல்லி விமான நிலையத்தில் ரிஷாப் பண்ட் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், கோப்பையை தக்க வைத்து கொண்டதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த டெஸ்ட் தொடரில் நாங்கள் விளையாடிய விதம் மொத்த அணிக்கும் மகிழ்ச்சி ஏற்படுத்தி உள்ளது என கூறியுள்ளார்.

நடராஜனுக்கு சொந்த கிராமத்தில் பிரமாண்ட வரவேற்பு

ஆஸ்திரேலிய பயணத்தில் தமிழகத்தை சேர்ந்த அஸ்வின், டி.நடராஜன், வாஷிங்டன் சுந்தர் ஆகிய 3 பேர் இடம் பெற்றிருந்தனர். வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் தனது அறிமுக சர்வதேச போட்டியில் சாதித்தார். நெட் பவுலராக சென்ற நடராஜன் தனது முதல் டெஸ்டில் 3 விக்கெட் வீழ்த்தினார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் 2 விக்கெட்டும், மூன்று டி20 போட்டிகளில் 6 விக்கெட்டும் கைப்பற்றினார்.

நடராஜன் பெங்களூரில் இருந்து தனது சொந்த ஊரான சின்னப்பம்பட்டிக்கு வருகிறார். கடந்த மாதம் 6-ந் தேதி தான் நடராஜனின் மனைவி பவித்ராவுக்கு சேலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. அதேநேரத்தில் இந்திய அணியில் இடம் பிடித்து ஆஸ்திரேலியா சென்றுவிட்டதால் முதன் முதலாக தனது குழந்தையை காணும் ஆர்வத்தில் நடராஜன் உள்ளார். சொந்த ஊர் திரும்பும் அவருக்கு ஊர்மக்கள் சார்பாக பிரமாண்ட வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நடராஜனுக்கு மாலை 4.15 மணிக்கு சின்னப்பம்பட்டி பஸ் நிலையம் சந்தைப்பேட்டையில் இருந்து அவரது வீடு வரை சிறப்பான வரவேற்பு ஊர்வலம் நடக்கிறது. மேலும் அவருக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக அரசு மேல்நிலைப்பள்ளியின் பின்புறம் மேடை அமைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *