செய்திகள்

பிரதமர் மோடி போர்ச்சுகல் அதிபருடன் பேச்சுவார்த்தை

Spread the love

புதுடெல்லி, பிப்.15–

பிரதமர் நரேந்திர மோடி, போர்ச்சுகல் அதிபர் மார்சேலோ ரெபேலோ டிசெளசா ஆகியோர் முன்னிலையில் இரு நாடுகளுக்கு இடையே 7 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

டிசெளசா 4 நாள் பயணமாக இந்தியாவுக்கு கடந்த 13–ந் தேதி வந்தார். இந்தியா–போர்ச்சுகல் ஒப்பந்தங்கள் குறித்து அதிகாரிகள் கூறியதாவது:–

டிசெளசாவை பிரதமர் மோடி டெல்லியில் நேற்று சந்தித்தார். அப்போது, இரு நாட்டு நல்லுறவை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர். வர்த்தகம், முதலீடு, கல்வி ஆகிய துறைகள் இவர்களின் பேச்சுவார்த்தையில் முக்கிய இடம் பிடித்தது.

அறிவுசார் சொத்துரிமை, துறைமுகங்கள், போக்குவரத்து, கலாசாரம், தொழில், முதலீடு ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை அளிக்கும் நோக்கில் 7 ஒப்பந்தங்கள் இரு தலைவர்களின் முன்னிலையிலும் கையெழுத்தானது என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

முன்னதாக, ஜனாதிபதி மாளிகையில் டிசெளசாவுக்கு உரிய மரியாதையுடன் வரவேற்பளிக்கப்பட்டது. பின்னர் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துடன் போர்ச்சுகல் அதிபர் கலந்துரையாடினார். புதுடெல்லி நிகழ்ச்சிகளுக்குப் பிறகு, மகாராஷ்டிரம், கோவா ஆகிய மாநிலங்களுக்கும் டிசெளசா செல்லவுள்ளார்.

தெற்கு ஐரோப்பாவின் முக்கிய நாடுகளில் ஒன்றான போர்ச்சுகல், இந்தியாவுடன் நெருங்கிய நட்பு பாராட்டி வருகிறது. கடந்த 15 ஆண்டுகளாக முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு ஒப்பந்தங்கள் ஏற்பட்டு, இரு நாடுகளிடையே நெருக்கம் அதிகரித்துள்ளது.

பிரதமர் மோடி கடந்த 2017–ம் ஆண்டு ஜூன் மாதம் போர்ச்சுகல் சென்றிருந்தார். அப்போது, விண்வெளி, இரட்டை வரிவிதிப்பை தவிர்த்தல், நானோ தொழில்நுட்பம், உயிரித் தொழில்நுட்பம், உயர் கல்வி உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை அளிக்க 11 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *