செய்திகள்

இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட்டில் 2-வது நாளிலேயே அபார வெற்றி: இந்திய அணியின் சாதனை

அமதாபாத், பிப். 26–

இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட்டில் 2-வது நாளிலேயே இந்தியா அபார வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது.இந்தியா –- இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி பகல் – -இரவு மோதலாக (பிங்க் பந்து டெஸ்ட்) உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியமான ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. ‘டாஸ்’ ஜெயித்து முதலில் ‘பேட்’ செய்த இங்கிலாந்து முதல்இன்னிங்சில் 112 ரன்னில் சுருண்டது. பின்னர் தனது முதல்இன்னிங்சை தொடங்கிய இந்தியா முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டுக்கு 99 ரன்கள் எடுத்திருந்தது. ரோகித் சர்மா (57 ரன்), அஜிங்யா ரஹானே (1 ரன்) களத்தில் இருந்தனர்.

இந்த நிலையில் 2-வது நாள் ஆட்டத்தை ரோஹித் சர்மா – ரஹானே கூட்டணி தொடர்ந்தது. எனினும், ஜோ ரூட், ஜேக் லீச் கூட்டணியின் சுழற்பந்து வீச்சில் இந்திய வீரர்கள் தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். 53.2 ஓவர்களில் 145 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனார்கள். பின்னர் 33 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் பதிலடி கொடுத்தனர். அக்‌ஷர் பட்டேல் வீசிய முதல் பந்திலேயே ஜாக் கிராவ்லி (0) கிளீன் போல்டு ஆனார். அடுத்து வந்த ஜானி பேர்ஸ்டோவும் ரன் எடுக்காமல் அவுட்டானர். துணை கேப்டன் பென் ஸ்டோக்ஸ் (25 ரன், 34 பந்து, 3 பவுண்டரி), கேப்டன் ஜோ ரூட் (19 ரன், 45 பந்து) எல்.பி.டபிள்யூ ஆனார். இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்சில் 30.4 ஓவர்களில் 81 ரன்னில் ஆல் அவுட்டானது. இந்திய தரப்பில் அக்‌ஷர் பட்டேல் 5 விக்கெட்டுகளும், அஸ்வின் 4 விக்கெட்டுகளும் எடுத்தனர்.

இதைத் தொடர்ந்து 49 ரன்கள் வெற்றி இலக்குடன் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ரோகித் சர்மா – சுப்மான் கில் களம் இறங்கி தங்களது அதிரடி ஆட்டத்தை தொடர்ந்தனர். 7.4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 49 ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

ரோகித் சர்மா 25 ரன்களுடனும் (25 பந்து, 3 பவுண்டரி, ஒரு சிக்சர்), சுப்மான் கில் 15 ரன்னுடனும் (21 பந்து, ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர்) அவுட் ஆகாமல் இருந்தனர். இரண்டு இன்னிங்சையும் சேர்த்து மொத்தம் 11 விக்கெட்டுகளை கைப்பற்றிய இடக்கை சுழற்பந்து வீச்சாளர் அக்‌ஷர் பட்டேல் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். 4 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

அஸ்வின் சாதனை

இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின், ஜோப்ரா ஆர்ச்சரின் விக்கெட்டை எல்.பி.டபிள்யூ. முறையில் வீழ்த்திய போது அது அவரது 400-வது விக்கெட்டாக அமைந்தது. தமிழகத்தை சேர்ந்த 34 வயதான அஸ்வின் இதுவரை 77 டெஸ்டுகளில் விளையாடி 401 விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.

இந்திய பவுலர்களில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்களில் அனில் கும்பிளே (619 விக்கெட்), கபில்தேவ் (434 விக்கெட்), ஹர்பஜன்சிங் (417 விக்கெட்) ஆகியோருக்கு அடுத்த இடத்தில் அஸ்வின் உள்ளார்.

அத்துடன் 400 விக்கெட்டுகளை அதிவேகமாக எட்டிய 2-வது வீரர் என்ற பெருமையையும் அஸ்வின் (77 டெஸ்டுகளில்) பெற்றார். இலங்கை சுழற்பந்து வீச்சு ஜாம்பவான் முரளிதரன் 72 டெஸ்டுகளில் இந்த இலக்கை எட்டியதே சாதனையாக இருக்கிறது.

டோனி சாதனையை முறியடித்த கோலி

சொந்த மண்ணில் விராட் கோலி தலைமையில் இந்திய அணி பதிவு செய்துள்ள 22-ஆவது வெற்றி இதுவாகும். அவர் தலைமையில் இதுவரை 29 டெஸ்டுகளை இந்திய அணி விளையாடியுள்ளது. இதன் மூலம் 21 டெஸ்டுகளில் இந்திய அணிக்கு கேப்டனாக வெற்றிக்கு வழி நடத்திய எம்.எஸ். தோனியின் சாதனையை கோலி முறியடித்துள்ளார்.

டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெறுவது இது 9-வது நிகழ்வாகும். இந்த டெஸ்டில் சுழற்பந்து வீச்சாளர்கள் மட்டும் மொத்தம் 27 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதற்கு முன்பு 2017–-18-ம் ஆண்டு துபாயில் நடந்த இலங்கை- – பாகிஸ்தான் பகல் – -இரவு டெஸ்டில் 24 விக்கெட்டுகளை சுழற்பந்து வீச்சாளர்கள் வீழ்த்தியதே சாதனையாக இருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *