சிறுகதை

இடம் பெயரும் இன்னல்கள் | புதுகை நா. கார்த்திக்

Spread the love

என்னங்க! உங்ககிட்ட நானும் ஒரு வருசமா ஒரு ஆன்ட்ராய்டு போன் கேட்டுக்கிட்டேயிருந்தேன். இதோ வாங்கித் தர்றேன்; அதோ வாங்கித் தர்றேன்னு வருசங்களையும் ஓட்டிட்டீங்க.

ஏங்க அந்த ஆசை எனக்கு இருக்கக் கூடாதா என்ன?

என்னோட ரெண்டு அக்காவும் ஆன்ட்ராய்டு செல்போன் வச்சிக்கிட்டு பேஸ்புக், வாட்ஸ் ஆப், ட்வீட்டர்ன்னு கலக்கிட்டிருக்காங்க. அவங்க வீட்டு ஃபங்சன் போட்டோஸ், டூர் போட்டோஸ் எல்லாம் அவங்க வாட்ஸ் அப்ல அனுப்பிக்கிறாங்க. பேஸ் புக் ல போடறாங்க; சந்தோசமா இருக்காங்க.

எனக்கு மட்டும் அந்த கொடுப்பினை கிடையாதா?. முடிவை சொல்லுங்க. எனக்கு எப்பத்தான் வாங்கித் தருவீங்க? என்றாள் சரண்யா கண்களை கசக்கிக் கொண்டே.

சாரி.. சாரி! வருத்தப்படாதே சரண்யா. காலேஜ்ல நான் அட்வான்ஸ் போட்டாவது எப்படியும் இந்த மாசத்துக்குள்ள வாங்கித் தந்துடறேன். சரியா? என்றபடி அன்புடன் அவளது முகவாயை நிமிர்த்தினான் கணவன் தமிழன்பன்.

மனைவி சரண்யா முகத்தில் புன்னகை. 30 வயது தமிழன்பன் இதயத்தில் நிம்மதி.

மனதில் ஒரு உறுதியுடன் கல்லூரிக்குப் புறப்பட்டுச் சொன்றான். அங்கு அவனுக்கு டைப்பிஸ்ட் பணி.

சித்தாள் முதல் பாசிமணி ஊசி விற்பவர் வரை கையில் ஆன்ட்ராய்டு போனோடு வலம் வரும் போது அதைப் பார்க்கும் எவருக்கும் மனதில் ஆசையும் ஏக்கமும் வராதா என்ன?

அந்த பிரபல தனியார் பொறியியல் கல்லூரி அலுவலகத்தில் பணிபுரியும் தமிழன்பனின் ஆன்ட்ராய்டு செல்போன் பாடல் ஒலியுடன் மணி அடித்தது.

தமிழன்பன் செல்போனை எடுத்து பச்சை நிற பட்டனை இழுத்துவிட்டு,

‘‘ ஹலோ சொல்லுங்க’’ என்றான் அமைதியான குரலில்.

ஹலோ! நாங்க சிம்சாங் செல்போன் கம்பெனி சென்னையிலிருந்து பேசுறோம். உங்களுக்கு ஒரு ஆஃபர் வந்திருக்கு ரூ.6000 மதிப்புள்ள செல்போன் நாங்க வெறும் ரூ.1499 க்கு தர்றோம். உங்க அட்ரஸை கொடுங்க… நாங்க பார்சலை அனுப்பி வைக்கிறோம்; முடிவு பண்ணிட்டு எங்களுக்கு கூப்பிடுங்க என்று இனிமையான குரலில் பேசி முடித்தாள் அந்நிறுவனத்தின் பெண் ஊழியர்.

சில நாட்கள் கழிந்தன

தமிழன்பன் சில நண்பர்களுடன் கலந்தாலோசித்து ஒரு வித தயக்கத்துடன் முடிவு செய்து சிம்சாங் போன் நிறுவனத்திற்கு அழைத்து தனது அட்ரஸை கூறி அனுப்பி வைக்கும்படி கூறினான்.

அதற்கு அந்நிறுவன பெண் ஊழியரும் நாங்கள் செல்போனை போஸ்ட் ஆபிஸ்க்கு கூரியர் மூலமாக அனுப்பி வைப்போம். அங்கு சென்று ரூ.1499 தொகையை கட்டி பெற்றுக் கொள்ளுங்கள் என்று கூறி விட்டு போனை வைத்து விட்டாள் அந்த பெண் ஊழியர்.

மீண்டும் சில நாட்கள் கழிந்தன . தமிழன்பன் செல்போனுக்கு சென்னை யிலிருந்து கால் வந்தது அவன் கல்லூரியில் அலுவலக வேலையில் மூழ்கியிருந்தபோது.

தமிழன்பன் செல்போனை அட்டென்ட் செய்தான். செல்போன் நிறுவன பெண் ஊழியர் பேசினார்:

‘‘ நாங்கள் உங்கள் அட்ரஸ்க்கு பார்சல் அனுப்பியுள்ளோம். அதை போஸ்ட் ஆபிஸ் சென்று பணம் கட்டி பெற்றுக் கொள்ளுங்கள் ’’என்று கூறிய பின் கட் செய்துவிட்டாள் அந்த பெண் ஊழியர்.

தமிழன்பனும் கல்லூரியில் மதியம் அரைநாள் விடுப்பு எழுதிக் கொடுத்துவிட்டு வீட்டிற்கு வந்து போஸ்ட் ஆபீஸ்க்கு சென்று அங்கு இருந்த ஊழியரிடம் பார்சல் வந்ததா என விசாரித்தான்.

அவர்கள் ஆதார் கார்டு ஜெராக்ஸ் எடுத்து வாருங்கள் என்று கூற, அவனும் ஜெராக்ஸ் எடுத்துவிட்டு வந்து ரூ.1499 தொகையையும் ஆதார் ஜெராக்ஸையும் கொடுத்து பார்சலைப் பெற்றுக் கொண்டான் .

தமிழன்பன் வீட்டுக்கு மிக்க ஆர்வத்துடன் வந்தான். பார்சலை பிரித்துப் பார்த்ததான். ஏமாற்றமடைந்தான். அதில் தொலைக்காட்சியில் அடிக்கடி ஔிபரப்பாகும் டெலி சாப்பிங் நெட்வொர்க் நிகழ்ச்சியில் விளம்பரப்படுத்தும் வெஜிடபிள் கட்டர் அனுப்பியிருந்தனர்.

தமிழன்பனுக்கு ஒன்னுமே புரியவில்லை.

தமிழன்பன் உடனே அந்த செல்போன் நிறுவனத்திற்கு போன் செய்து பார்சல் மாறி வந்திருப்பதை தெரிவித்தான். அந்நிறுவன பெண் ஊழியரும் பார்சல் மாறி வந்துவிட்டது. நீங்க எங்களுக்கு அதை திருப்பி அனுப்புங்க. நாங்க செல்போன் நிறுவனத்திடம் கேட்டு அனுப்பி வைக்கிறோம் என்றாள் அப்பெண் ஊழியர் மீண்டும் ஏமாற்றும் எண்ணத்தில்.

தமிழன்பனோ மீண்டும் ஏமாறாமல் அதை நானே பார்த்துக் கொள்கிறேன் என்று கூறி போனை கட் செய்து விட்டு அதை மனைவி சரண்யாவிற்கு தெரியாமல் மறைத்து வைத்து விட்டான்.

தமிழன்பனுக்கு ஒரு எண்ணம். அதை வௌியில் கொண்டு வரவேண்டும். ஆனால் வீட்டிலும் மாட்டிக் கொள்ள கூடாது என்று யோசித்து ஒரு முடிவு செய்து மனதில் வைத்துக் கொண்டான்.

சில மாதங்கள் கழித்து அவனது திருமண நாள் வந்தது.

தமிழன்பனும் அதைப் பார்சல் செய்து தனது திருமண நாள் பரிசாக தனது மனைவி சரண்யாவிற்கு பரிசளித்து, பிரச்னை தீர்ந்துவிட்டது என்ற மனமகிழ்ச்சியில் திளைத்திருந்தான்.

சில மாதங்கள் கழித்து மீண்டும் தமிழன்பன் செல்போனுக்கு ஒரு கால் வந்தது.

தமிழன்பன் ‘‘ஹலோ’’ என்றான்.

சிம்சாங் செல்போன் கம்பெனி சென்னை என்று கூறி ஆபர் வந்திருப்பதாக கூறினாள் அந்த நிறுவன பெண் ஊழியர்.

தமிழன்பனும் ‘‘எனக்கு அந்த ஆஃபரும் வேணாம். ஓண்ணும் வேண்டாம்ங்க’’ எனக் கூறி போன் தொடர்பை துண்டித்துவிட்டான்.

நாம் மீண்டும் ஆன்லைனில் ஏமாற மாட்டேன் என ஆன்லைன் ஆபத்தை உணர்ந்தவனாய் மனதில் தௌிவான முடிவோடு நிம்மதி பெருமூச்சு விட்டான்.

‘‘என்னங்க வெஜிடபிள் கட்டர் ரொம்ப யுஸ்புல்லா இருக்குங்க. முன்னாடி அரை மணிநேரம் ஆனது. இப்ப அஞ்சு நிமிசத்துல வேலை முடிஞ்சிடுது. அப்புறம் ஒன்னு சொல்ல மறந்துட்டேங்க. நீங்க ஆபிஸ் பொறப்பட்டு போன பிறகு சத்யா அக்கா வந்திருந்தாங்க அவங்க ஆன்ட்ராய்டு போன் ஒன்னு புதுசா வாங்கியிருக்காங்களாம். பழசை என்கிட்ட கொடுத்துட்டாங்க.. ஒரு வருசம் முன்னாடிதான் வாங்குனதாம். அதுவே நல்லாருக்குங்க. அது போதும் எனக்கு. என்றவளின் கைகளில் சம்சாங் நிறுவன செல்போன்; முகத்தில் பூரிப்பு இருங்க. ரெண்டே நிமிசம் பேப்பர் படிச்சிக்கிட்டிருங்க காபி கொண்டு வந்து தர்றேன் . ’’ என்றபபடி துள்ளல் நடையுடன் சமையலறை சென்றாள் சரண்யா.

யாவருக்கும் துன்பங்கள் வரலாம். அதில் துவண்டு விடாமல், சோர்ந்து போய் உட்கார்ந்து விடாமல் அதை வெற்றிப்படிகளாக்கி முன்னேறுதலே மனித வாழ்க்கை என்பதை தமிழன்பன் உணரத் தவறவில்லை.

இன்னல்கள் இடம் பெயர்ந்து விட்டன.

தமிழன்பனுக்கு நட்டம் ஏற்பட்டாலும் இருவித நன்மைகளால் மனைவியிடம் இன்ப ஓட்டம் ஏற்பட்டதால் நிம்மதி பெருமூச்சு விட்டான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *