நாடும் நடப்பும்

பாதிப்பில்லா தமிழகம்

தீபாவளி பண்டிகை ஓரளவு சிறப்பாகவே கொண்டாடப்பட்டு விட்டாலும் கொரோனா தொற்று அச்சுறுத்தலால் கோலாகலமாக கொண்டாட முடியவில்லையே என்ற வருத்தம் இருந்தது! ஆனால் தீபாவளி நெருங்கி விட்ட நாட்களில் ஆடை, ஆபரண விற்பனை அதிகரிப்பை பார்க்கும்போது மீண்டும் தொற்றின் வீச்சு அதிகரித்து இரண்டாம் அலைக்கு வித்திடுமோ? என்ற அச்சக் கேள்வி எழுந்தது.

ஆனால் இம்மாத துவக்கம் முதலே கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வரும் எண்ணிக்கை தமிழகத்திற்கு மகிழ்ச்சியை தருகிறது.

தலைநகர் டெல்லியில் அதிகரித்து வரும் எண்ணிக்கைக்கு முக்கிய காரணமே தீபாவளி கொண்டாட அங்காடிப் பகுதிகளில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் தான் என்ற செய்தியைப் பார்க்கும்போது தமிழகத்தில் இரண்டாம் அலை வராதது பாராட்டுக்குரியது.

தமிழக அரசின் முழு கவனத்துடன் மேற்கொண்ட பல்வேறு கட்டுப்பாடு நடவடிக்கைகளால் நோய்த்தொற்று ஓரளவு கட்டுப்பாட்டிற்கு வந்து கொண்டிருக்கிறது என்பது புரிகிறது.

சென்னை, வேலூர் பகுதிகளில் தீபாவளியையொட்டி மழை துவங்கி விட்ட நிலையிலும் ஷாப்பிங் பகுதிகளில் எப்போதும் இருக்கும் அதிகப்படி ‘தள்ளுமுள்ளு’ இல்லை! காரணம் பலர் சொந்த ஊருக்கு முன்பே சென்றிருப்பார்கள். மீதம் பலர் வீட்டில் பாதுகாப்பாக இருந்தபடி ஆன்லைனில் புத்தாடைகளையும் இனிப்பு பலகாரங்களையும் வாங்கிக் கொண்டனர்.

இந்த மாற்றம் கொரோனா வைரஸ் தொற்று நம்மிடம் கொண்டுவந்த மனமாற்றமாகும். வாழ்வியல் மாற்றத்தை இப்படி ஒரு கண்ணில் கூட தெரியாத நுண் கிருமி நம்மிடம் கொண்டு வந்ததுடன் அதை நம்மிடம் விட்டுச் சென்றும் உள்ளது.

கூட்ட நெரிசலைத் தவிர்க்க யோசிப்பது, சுகாதாரமான வாழ்வை ரசிப்பது, அனாவசியமாக கியூ வரிசையை மதிக்காமல் ‘தள்ளுமுள்ளு’ ஏற்படுத்தி முதலில் வாங்கி விட்டோம் என சந்தோஷப்படுவதை விட்டுக் கொடுத்து சீராக ஒருவர் பின் ஒருவராக வாங்கி மகிழ்வதன் ஆனந்தத்தைப் புரிந்து கொள்ள வைத்து விட்டது.

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் மூத்த அமைச்சர்களின் கூட்டு ஆலோசனைகள், மக்கள் நலன் காக்கும் அக்கறை ஆகிய காரணங்களால் தீபாவளி அசம்பாவிதம் பெரிய அளவில் தவிர்க்கப்பட்டு விட்டதை மக்கள் பாராட்டுகிறார்கள்.

பொதுமக்கள் தேவையை பூர்த்தி செய்ய விசேஷ பஸ்கள் ஏற்பாடு செய்ததால் 5 லட்சம் பேர் தமிழகமெங்கும் பயணித்து உள்ளனர். ஆனால் பஸ்களில் இப்படி வெளியூர் செல்பவர்கள் சமூக விலகலை பின்பற்றிடவும் முகமூடி அணிந்தே பயணிப்பதையும் உறுதி செய்திருக்கும் கட்டுப்பாடுகளை அரசு நிரணயித்து செயல்படுத்தி இருப்பதால் தான் கொரோனா பரவல் கட்டுப்பாட்டில் இருக்கிறது.

மேலும் பள்ளி, கல்லூரிகள் முழுமையாக துவங்க அனுமதி தராததால் உடனடியாக தொற்றின் ஆதிக்கம் மீண்டும் வராது என நம்புவோம்! தற்போது சென்னையில் மழை இருப்பதால் எல்லா வித கிருமிகளின் பரவல் மிக சாதகமான சூழ்நிலை இருப்பதால் கல்விக் கூடங்கள் திறக்காததும் நல்லது தான்.

மாணவர்கள், பெற்றோர்கள் வாட்டத்துடன் வீட்டில் முடங்கி இருப்பதும் புரிகிறது. ஆனால் ‘அடக்கம் உடையாரை அறிவிலர் என்று எண்ணி கடக்கக் கருதவும் வேண்டா…

மடைத் தலையில் ஓடு மீன் ஓட, உறுமீன் வரும் அளவும் வாடி இருக்குமாம் கொக்கு’ என்ற அவ்வையாரின் வரிகளை நினைவு கூற வைக்கிறது.

இப்படியாக பசியை போக்க பெரிய மீனுக்கு காத்திருக்கும் பொறுமையான கொக்கைப் போல் தமிழகம் அவசரப்படாமல் ஊரடங்கை மெல்ல தளர்த்தி வருவது அச்சம், வீண் பயம் என்பது இல்லை, உண்மையில் அறிவார்ந்த நடவடிக்கைகள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *