செய்திகள்

மாணவிகளுக்கு கை கழுவும் முறைகள் குறித்த விழிப்புணர்வு செயல்முறை நிகழ்ச்சி: கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் துவக்கி வைத்தார்

திருவள்ளூர், பிப். 8–

ஆவடி பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு கை கழுவும் முறைகள் குறித்த விழிப்புணர்வு செயல்முறை நிகழ்ச்சியை கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் துவக்கி வைத்தார்.திருவள்ளுர் மாவட்டம், ஆவடி மாநகராட்சி, காமராஜர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் பள்ளி மாணவிகளுக்கு, பருவ காலங்களில் பரவக்கூடிய கொரோனா வைரஸ் போன்ற சுவாசம் மூலம் பரவும் தொற்றுநோய்கள் வராமல் தடுக்கும் வகையில், கைகளை கழுவும் முறைகள் குறித்த விழிப்புணர்வு செயல்முறை நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.

அப்போது அவர் கூறியதாவது :

தொற்றுநோய் வராமல் தடுக்கும் முறைகளில் கை கழுவுதல் என்பதும் ஒரு இன்றியமையாத முறையாகும். நன்றாக கை கழுவ குறைந்தது 30 விநாடிகள் எடுத்துக்கொள்ள வேண்டும். கொரோனா போன்ற வைரஸ் நோய்கள், இருமல் மற்றும் தும்பல் வாயிலாக வௌிப்படும் நீர்த்திவலைகள் மூலம் நேரடியாகவும், அக்கிருமிகளை உடைய நீர்த்திவலைகள் படிந்துள்ள பொருட்களை தொடும்பொழுது கைகள் மூலமாகவும் பரவுகிறது. எனவே, கைகளை நன்றாக கழுவி சுத்தம் செய்ய வேண்டும்.

கை கழுவும் செயல்முறை விழிப்புணர்வு, 68 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் மருத்துவர் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் கிராம சுகாதார செவிலியர்கள் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டு, 2552 பள்ளிகளில் பயிலும் 8,06,000 மாணவ-மாணவிகளுக்கு விழிப்புணர்வு மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக, சுகாதார உறுதிமொழியாக, எங்கள் வீட்டில் சேரும் குப்பைகளை மக்கும் மற்றும் மக்காத குப்பை என்று வகைப்பிரித்து துப்புரவு பணியாளர்கள் வரும்போது வழங்குவேன், ஒரு தடவை உபயோகப்படுத்தி தூக்கி எறியக் கூடிய பிளாஸ்டிக் பொருட்களை உபயோகிக்க மாட்டேன், துணி மற்றும் சணல் பைகளை பயன்படுத்துவேன் போன்ற வாசகங்கள் அடங்கிய உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் தலைமையில் பள்ளி மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் என அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) ஜே.பிரபாகரன் (பூவிருந்தவல்லி), ஆவடி மாநகராட்சி ஆணையர் கிருஷ்ணமூர்த்தி, ஆவடி வட்டாட்சியர் சங்கிலி ரதி, பள்ளி தலைமை ஆசிரியை மற்றும் பள்ளி மாணவிகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *