சிறுகதை

கிரீன் கார்டு | ராஜா செல்லமுத்து

Spread the love

செய்து கொண்டிருந்த பணி நிறைவடைந்ததால் ஓய்வுபெற்ற தணிகாசலம் எப்போதும் இருப்பது தன் வீட்டருகே இருக்கும் பூங்காவில் தான் . அவர் மட்டுமல்ல அவருடன் இன்னும் எத்தனையோ முதியவர்கள் கூடும் இடமாக அந்தப் பூங்கா இருந்தது.

தணிகாசலம் வந்தால் தான் அந்த ஏரியாவே  கலகலப்பாக இருக்கும். அவர் பேசும் தமிழ் கேட்கவே சிலர் அங்கு கூடுவர். அவர் கையில் தமிழ் மணக்கும் புத்தகங்கள் நாளிதழ்கள் தவறாமல் இருக்கும். எதுகை மோனை தொடங்கி யாப்பிலக்கணம் , வீரகோழியம் வரை விறுவிறுவெனப் பேசுவார். பாரதி பாடலைப் பாடும் போது அவரின் தொண்டை நரம்புகள் புடைத்துப் பருக்கும்.

‘‘அக்னிக்குஞ்சொன்று கண்டேன்..

அதை ஆங்கொரு காட்டிலோர்..

பொந்தில் வைத்தேன்

வெந்து தணிந்தது காடு ..’’

என்று தொடங்கும் பாரதியார் பாடலைப்பாடும் போது கொதிக்கும் கோப உக்கிரத்தில் கொதித்துப் பேசுவார். சில சமயங்களில் ராகம் போட்டுக் கூடப்பாடுவார். அவர் பேசுவதையும் பாடுவதையும் வாய் பிளந்து பார்த்துக் கொண்டிருப்பார்கள். உடன் உட்கார்ந்திருக்கும் வயது முதிர்ந்த நண்பர்கள்.

‘‘தணிகாசலம் எப்படி.. உங்களால மட்டும் இப்படி பாட முடியுது..! அதுவும் இவ்வளவு உற்சாகமா..! உங்கள நினைச்சாலே எங்களுக்கு ஒரு மாதிரியா இருக்கு. தமிழ்.. தமிழ்.. எப்பவுமே தமிழா.. உங்க மேல இருக்கிற மரியாதை எவ்வளவோ கூடிப்போயிருச்சு.. உங்கள தமிழ்சிற்பின்னே சொல்லணும்’’ என்று கூடியிருந்தவர்கள் பேச தணிகாசலம் மெய் மறந்தே போய்விட்டார்.

‘‘என் நாடு.. என் தேசம்.. என்மொழி.. என் உயிர்.. எல்லாமே தமிழ். தமிழ்நாடு மட்டும் தான். இந்த நிலத்த விட்டு நான் எங்கயும் போறதில்ல.. போகப் போறதுமில்ல.. என்று தமிழ் மொழியில் தோய்ந்த ஒரு புறநானூற்றுப் பாடலை உரக்கப்பாடினார்.

‘‘ஐயோ என்ன மாதிரியான ஒரு தமிழ் தணிகாசலம் சார்.. உங்களுக்கு மட்டும் தமிழ் கடவுள் தாரை வார்த்துக் குடுத்திருக்கான் போல. .’’ என்று ரொம்பவே பெருமையாகப் பேசினர் ஓய்வு பெற்ற ஊழியர்கள்.

‘‘தணிகாசலம் சார்.. உங்க வீட்டுல இருக்கிறவங்களுக்கு தாய்மொழிமேல ஆர்வம் இருக்கா..! இல்ல.. உங்கள மாதிரி இவ்வளவு உணர்வோட இருப்பாங்களா..? என்று ஒருவர் பளிச்செனக் கேட்டார்.

‘‘ஓ.. என்னோட குடும்பம் பத்தி ஒங்களுக்கு தெரியாதில்ல..

‘‘ஆமா..

‘‘ம்.. இந்த ஏரியாவுக்கு நான் வந்து கொஞ்ச நாள் தானே ஆச்சு.

ம்.. இப்ப சொல்றேன் கேளுங்க.. எனக்கு ஒரே மனைவி..’’ என்று தணிகாசலம் சொல்ல

‘‘எங்களுக்கும் ஒரே மனைவிதாங்க..’’ என்று ஒரு வயது முதிர்ந்தவர் சொல்ல அங்கே ஆரம்பமான சிரிப்பொலி அடங்கி ஒடுங்க கொஞ்சம் அவகாசம் தேவைப்பட்டது .

உடன் சிரித்த தணிகாசலம் கொஞ்சம் சிரிப்பை அடக்கிக்கொண்டு

‘‘ம்.. எனக்கு ஒரு மனைவி, ரெண்டு புள்ளைங்க.. ஒருத்தன் பையன். இன்னொன்னு பொண்ணு . பையனுக்கு திருமணம் முடிஞ்சு போச்சு. பொண்ணுக்கும் திருமணம் முடிஞ்சுபோச்சு . பெத்த ரெண்டு புள்ளைகளையும் கரைசேத்தாச்சு. இப்ப வேலையிலும் ஓய்வு; குடும்பத்திலயும் ஓய்வு. இப்ப வீட்டுல நானும் என்னோட மனைவியும் மட்டும் தான்..’’ என்று மகிழ்ச்சி பொங்கச் சொல்லிக்கொண்டிருந்தார் தணிகாசலம்.

‘‘ம்.. தணிகாசலம் பையன் , பொண்ணு ரெண்டையும் பெத்து வளத்து அழகா திருமணமும் செஞ்சு குடுத்திட்டாரு.. சபாஷ்.. சபாஷ்..’’ என்ற ஒரு பெரியவர் ‘‘தணிகாசலம் சார்.. உங்களோட புள்ளைங்க எங்க இருக்காங்க.. எல்லாம் உள்ளூர்லயா..? என்று அவர் கேட்க

‘‘ம்.. இது ஊராங்க.. இங்க இருந்தம்னா ஒத்தகாசு சம்பாதிக்க முடியுமா..? இல்ல நாலு காசு சேத்து வச்சு நல்லாதான் பொழைக்க முடியுமா..? முடியாது.. இங்க இருந்தா வாயுக்கும் கைக்குமான வாழ்க்கையே தான்… ..’’என்று மூர்க்கம் கலந்து பேசியவரை அங்கிருந்தவர்கள் ஒரு மாதிரியாகப் பார்த்தனர்.

‘‘என்னய்யா.. இந்த ஆளு இதுக்கு முன்னாடி ஒரு மாதிரியா.. பேசுனான். இப்ப ஒரு மாதிரியா.. பேசுறான் என்றவர்கள் இன்னும் என்னென்ன பேசுவான்..’’ என்று ஒருமையில் பேச ஆரம்பித்தனர் .

‘‘ஆமாங்க என்னோட பையனுக்கு கல்யாணம் பண்ணி அவனோட மனைவியோட அமெரிக்காவுலயே வச்சிட்டேன். பொண்ணுக்கும் கல்யாணம் பண்ணி அவளோட மாப்பிள்ளையும் சேத்து அமெரிக்காவுலேயே இருக்க வச்சிட்டேன். அப்படி அவங்கள அங்க வச்சாதான் அவங்களுக்கு பெறக்கப்போற குழந்தைங்களுக்கு கிரீன் கார்டு கெடைக்கும் . அப்பதான் அவங்களோட வாழ்க்கை இங்க இருக்கிறது மாதிரி இல்லாம அழகா இருக்கும்’’ என்று தணிகாசலம் சொல்ல

‘‘அடப்பாவி.. இப்பதான் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி என்னென்ன பேசிட்டு இருந்தான். இப்ப என்னாடான்னா அமெரிக்கா கிரீன்கார்டுன்னு அளந்து விடுறானே..’’ என்று ஒரு ஓய்வூதியர் பேச

‘‘இங்க எல்லாமே இப்பிடி தாங்க. வாயில பேசுறது ஒண்ணு; செய்கையில செயல்ல செய்றது ஒண்ணு.. இவன மாதிரி ஆளுக இங்க நிறையப்பேரு இருக்கானுக. இவனுக பேச்சுக்கும் செயலுக்கும் நிறைய வித்யாசம் இருக்கத்தான் செய்யும். இவனுக பண்றது எல்லாமே அயோக்கியத்தனம் , ..’’ என்று ஒருவர் சொல்ல அனைவரும் தணிகாசலத்தைக் வெறித்துப் பார்த்தனர்.

ஊருக்கு உபதேசம் பேருக்கு வாழ்க்கை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *