செய்திகள்

ஊரக வளர்ச்சி துறைக்கு ரூ.27 ஆயிரத்து 278 கோடி

* நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.5141.60 கோடி

* ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.6754 கோடி

ஊரக வளர்ச்சி துறைக்கு ரூ.27 ஆயிரத்து 278 கோடி

சட்டசபையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு

40 லட்சம் வீடுகளுக்கு ரூ.3016 கோடியில் குடிநீர் இணைப்பு

சென்னை, பிப்.23–

ஊரக வளர்ச்சி துறைக்கு ரூ.27 ஆயிரத்து 278 கோடி வழங்கப்பட்டுள்ளது என்று சட்டசபையில் இன்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

2021–22 ஆம் ஆண்டின் இடைக்கால வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகளில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.5141.60 கோடியும், ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதிப் பகிர்விற்காக ரூ.6754.30 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சட்டசபையில் தெரிவித்தார்.

இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்து அவர் பேசியதாவது:–

ஆறாவது மாநில நிதிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு தொடர்புடையவர்களுடன் கலந்தாய்வு மேற்கொண்டு வருகிறது. ஆறாவது மாநில நிதிக்குழுவின் பரிந்துரைகள் 2022–23 ஆம் ஆண்டிலிருந்து செயல்படுத்தப்படும்.

15வது நிதிக்குழு, ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மானியமாக 2020–21 ஆம் ஆண்டில் ரூ.3607 கோடியும், 2021–22 –ம் ஆண்டில் 2666 கோடி ரூபாயும் பரிந்துரைத்துள்ளது. 15வது நிதிக்குழு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு மானியமாக 2020–21 ஆம் ஆண்டில் ரூ.1737 கோடியும், 2021–22–ம் ஆண்டில் 1313 கோடி ரூபாயும் பரிந்துரைத்துள்ளது. இத்தொகை 14வது நிதிக்குழுவின் இறுதி ஆண்டிற்காக, அதாவது 2019–20 ஆம் ஆண்டிற்கான நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்காகப் பரிந்துரைக்கப்பட்ட 2519.02 கோடி ரூபாய் மானியத்தை விட, கணிசமான அளவில் குறைவாக உள்ளது.

2020–21 ஆண்டில் கோவிட் 19 பெருந்தொற்று மற்றும் மத்திய அரசிடமிருந்து வரப்பெறும் நிதி குறைந்த காரணத்தால், மாநில அரசின் நிதியின் மீது கணிசமான அழுத்தம் இருந்தபோதிலும், உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதி வழங்கலை உறுதி செய்ய இந்த அரசு தன்னால் இயன்ற அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளது.

ஊரகப் பகுதிகளில் நிலைக்கத்தக்க வாழ்வாதாரங்கள், தரமான உட்கட்டமைப்பு மற்றும் சேவைகள் வழங்குவதே இந்த அரசின் பல்வேறு ஊரக வளர்ச்சித் திட்டங்களின் முக்கிய நோக்கமாகும். ஊரக குடியிருப்புகளுக்கு குடிநீர் வழங்கல் ஒரு அடிப்படைத் தேவையாகும். ஜல் ஜீவன் மிஷன் மத்திய அரசு பொறுப்பேற்கும் திட்டமாகும். இத்திட்டத்தைச் செயல்படுத்த வேண்டிய அனைத்து சேவைப் பயன் கட்டணத்தையும் மாநில அரசு ஏற்றுக் கொள்கிறது. மேலும் ஏனைய மாநிலத் திட்டங்களின் நிதிகளை ஒருங்கிணைத்து இத்திட்டம் செயல்படுகிறது.

இதனால் மாநில அரசின் பங்கு 45 சதவீதம் எனக் குறிப்பிட்டிருந்தாலும் உண்மையான பங்கு அதிகமாக உள்ளது. இத்திட்டத்தின் கீழ், மாநிலத்திலுள்ள அனைத்து கிராமப்புற வீடுகளுக்கும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்படும். தமிழ்நாட்டின் கிராமப்புற பகுதிகளில் உள்ள 126.89 லட்சம் வீடுகளில் 21.93 லட்சம் வீடுகளில் ஏற்கனவே குடிநீர் குழாய் இணைப்புகள் உள்ளன.

மீதமுள்ள 104.96 லட்சம் வீடுகளுக்கு 2023–ம் ஆண்டின் மார்ச் மாத இறுதிக்குள் குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்படும். 2020–21 ஆம் ஆண்டில் 3,016.26 கோடி ரூபாய் செலவில் 40 லட்சம் வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்படும். இதில் 2,006.08 கோடி ரூபாய் ஜல் ஜீவன் மிஷன் வாயிலாகவும் 1,010.18 கோடி ரூபாய் பிற திட்டங்களின் நிதியை ஒருங்கிணைத்தும் வழங்கப்படும்.

ரூ.215 கோடியில் தனிக்கழிப்பறைகள்

ஊரகப் பகுதி மக்களின், குறிப்பாக, பெண்கள் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்தினை மேம்படுத்த, சுகாதாரத்தைப் பேணுவது மிகவும் இன்றியமையாததாகும். தமிழ்நாடு திறந்த வெளியில் மலம் கழித்தலற்ற நிலையை ஏற்கனவே அடைந்துள்ளது. தூய்மை இந்தியா திட்டம் (ஊரகம்) இரண்டாம் கட்டத்தில், இந்த நிலையைத் தக்கவைத்து, எந்த ஒரு வீடும் விடுபடாமல் பயன்பெறுவதே இத்திட்டத்தின் நோக்கமாகும். 2020–21 ஆம் ஆண்டில் 1.79 லட்சம் புதிய மற்றும் விடுபட்ட வீடுகள் கண்டறியப்பட்டு, 214.63 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தனிக் கழிவறைகள் கட்டப்பட்டு வருகின்றன. மேலும், தனிக் கழிவறைகள் கட்டுவதற்கு போதிய இடவசதி இல்லாத குடியிருப்புப் பகுதிகளிலும் 144.33 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 2,749 சமூக சுகாதார வளாகங்கள் கட்டப்பட்டு வருகின்றன. 67) ஊரகப் பகுதிகளில் சாலை இணைப்புகளை மேம்படுத்துவது அரசின் உயர்ந்த முன்னுரிமையாகும். 2011–-12–ம் ஆண்டு முதல், 98,894 கிலோமீட்டர் ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய சாலைகளின் மேம்பாட்டிற்காக 23,349 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு ஊரகச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், 2015–-16ஆம் ஆண்டிலிருந்து 5,800 கோடி ரூபாய் செலவில் 27,205 கிலோமீட்டர் ஊரகச் சாலைகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.

பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டத்தின் மூன்றாம் கட்டத்தில், ஊரகச் சந்தைகள், உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள் ஆகியவற்றை இணைக்கும் விதமாக 7,375 கிலோமீட்டர் சாலைகள் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்காக, முதல் கட்டத்தில் 3,198 கிலோமீட்டர் மொத்த நீளத்தைக் கொண்ட 880 சாலைகளை மேம்படுத்துவதற்காக, 2021-–22ஆம் ஆண்டு இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில், 440 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

பிரதமர் வீட்டுவசதி திட்டத்துக்கு ரூ.3,548 கோடி

இந்திரா வீட்டுவசதித் திட்டத்தின் கீழ், 2011–-12–ம் ஆண்டு முதல் 2015–16ஆம் ஆண்டு வரை 4,41,637 வீடுகள் கட்டுப்பட்டுள்ளன. 2016-–17ஆம் ஆண்டில் பிரதம மந்திரி வீட்டுவசதி திட்டம் (ஊரகம்) தொடங்கப்பட்டு, 2019-–20ஆம் ஆண்டு வரை 5,27,552 வீடுகளின் கட்டுமானம் மேற்கொள்ளப்பட்டது. வீடு ஒன்றிற்கு 1.20 லட்சம் ரூபாய் என மத்திய அரசால் நிர்ணயிக்கப்பட்ட அலகுத் தொகை போதுமானதாக இல்லாததால், தற்போது தமிழ்நாடு அரசு அளித்து வரும் மேற்கூரை மானியமான 50,000 ரூபாயுடன், வீடு ஒன்றிற்கு, கூடுதலாக 70,000 ரூபாய் அனுமதித்துள்ளது. இதன் மூலம் வீடு ஒன்றிற்கான தொகை 2.75 இலட்சம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இத்தொகையில் பல்வேறு திட்டங்களை ஒருங்கிணைத்து மேற்கொள்ளப்படும் செலவினமான 35,000 ரூபாய் உள்ளடங்கும். இதன் மூலம், கட்டுமானத்திலுள்ள 2,57,925 வீடுகளை பயனாளிகள் கட்டி முடிக்க உதவும். 2021–22ஆம் ஆண்டு இடைக்கால வரவு–செலவுத் திட்ட மதிப்பீடுகளில், பிரதம மந்திரி வீட்டுவசதித் திட்டத்திற்காக (ஊரகம்) மொத்த தொகையாக 3,548 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை திறம்பட செயல்படுத்துவதில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாகத் திகழ்கிறது. 2020-–21 ஆம் ஆண்டு தமிழ்நாட்டிற்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்கான 32 கோடி மனித வேலை நாட்களில், இதுவரை 5,998.99 கோடி ரூபாய் செலவில் 28.62 கோடி மனித வேலை நாட்களுக்கான வேலை வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை திறம்பட செயல்படுத்தியதற்காக, 2011–12ஆம் ஆண்டிலிருந்து 26 தேசிய விருதுகளை தமிழ்நாடு பெற்றுள்ளது.

2021–-22–ம் ஆண்டுக்கான இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில், ஊரக வளர்ச்சித் துறைக்காக 22,218.58 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *