செய்திகள்

சுழற் பந்துக்கு சாதகமான ஆடுகளம்: வெற்றி பெறுவதே இலக்கு

இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டி நாளை துவக்கம்

சுழற் பந்துக்கு சாதகமான ஆடுகளம்:வெற்றி பெறுவதே இலக்கு

துணை கேப்டன் ரஹானே பேட்டி

அகமதாபாத், மார்ச் 3–

இங்கிலாந்துக்கு எதிராக நாளை தொடங்கும் 4வது டெஸ்ட் போட்டியிலும் ஆடுகளம் சுழற் பந்துக்கு சாதகமாகவே அமையும். அந்த போட்டியில் வெற்றி பெறுவதே இந்திய அணியின் இலக்கு என்று துணை கேப்டன் ரஹானே கூறினார்.

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்துள்ள இங்கிலாந்து அணி டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் சென்னையில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. அகமதாபாத்தில் நடந்த 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 2வது நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை தோற்கடித்து அபார வெற்றி பெற்றது. இதற்கு அந்த மைதானம் சுழற் பந்துக்கு சாதகமாக இருந்ததே காரணம் என்றும் பேசப்பட்டது.

இந்த நிலையில் நாளை அகமதாபாத் மைதானத்தில் நான்காவது மற்றும் இறுதி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாளை காலை 9.30 மணிக்கு தொடங்க உள்ளது. இந்த போட்டியில் இந்தியா வென்றால் 3-–1 என்ற கணக்கில் இந்தியா தொடரை வென்று விடும். இங்கிலாந்து வென்றால் 2–-2 என்று தொடர் சமன் செய்யப்படும். இந்த நிலையில் ஏற்கனவே அகமதாபாத் மைதானம் சுழல்பந்துக்கு சாதகமாக இருப்பதால் சுழல்பந்து வீச்சாளர்கள் இரு அணிகளும் அதிகமாக களமிறக்கப்படுவார்கள் என தெரிகிறது.

இந்த நிலையில் கடைசி டெஸ்ட் போட்டிக்கான ஆடுகளமும் சுழற்பந்து வீச்சுக்கே சாதகமாக இருக்கும் என்று இந்திய அணியின் துணை கேப்டன் அஜிங்யா ரஹானே கூறியுள்ளார்.

அவர் கூறியதாவது:

ஆடுகளம் குறித்து விமர்சனவாதிகள் தாங்கள் நினைத்த எதையும் சொல்லலாம். இதுவே நாங்கள் வெளிநாடு சென்று விளையாடும் போது, எப்படி இந்த அளவுக்கு வேகப்பந்து வீச்சுக்கு உகந்த ஆடுகளத்தை அமைக்கலாம் என்று யாரும் பேசுவதில்லை. அப்போது பேட்டிங்கில் இந்திய வீரர்களின் தொழில்நுட்பம் குறித்து பேசுவார்கள். எங்களது வெளிநாட்டு சுற்றுப்பயணங்களில் போட்டியின் முதல் நாளில் ஆடுகளம் ஈரப்பதமாக இருக்கும். அதில் புற்கள் இருந்து பந்து தாறுமாறாக எகிறும் போது, ஆடுகளம் அபாயகரமாக தோன்றும். ஆனால் அது பற்றி நாங்கள் புகார் சொல்வதில்லை. ஆடுகளம் சரியில்லை என்று பேசுவதும் கிடையாது. எனவே இந்த விவகாரத்தில் முன்னாள் வீரர்களின் கருத்துகளை தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டிய தேவையில்லை. பந்து நன்கு சுழன்று திரும்பும் ஆடுகளங்களில், சரியான லைனில் கணித்து விளையாட வேண்டும். அதுவே பந்து அதிகமாக சுழன்றால் அது பற்றி சிந்தித்துக் கொண்டிருக்காமல் வழக்கம் போல் ஆட வேண்டும். எந்த ஆடுகளமாக இருந்தாலும் உங்களது தடுப்பாட்டத்தில் நம்பிக்கை வைத்து செயல்பட வேண்டும்.

டெஸ்ட் சாம்பியன்ஷிப்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை வெல்வது உலக கோப்பைக்கு நிகரானது என்று இஷாந்த் ஷர்மா கூறியது நிச்சயம் சரி தான். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மீது எங்களது கவனம் உள்ளது.

கடைசி டெஸ்டில் இந்திய அணி டிரா செய்தாலே ஜூன் மாதம் லண்டனில் நடக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த இரு டெஸ்டில் நாங்கள் நன்றாக விளையாடி வெற்றி பெற்றோம். முதலாவது டெஸ்டில் உண்மையிலேயே இங்கிலாந்து அணியினர் அபாரமாக ஆடினர். எந்த வகையிலும் அவர்களை நாங்கள் எளிதாக எடுத்துக் கொள்ளமாட்டோம். இங்கிலாந்து அணியை நாங்கள் மதிக்கிறோம். அவர்கள் மிகச்சிறந்த அணி. அதே சமயம் 4-வது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெறுவதே எங்களது இலக்கு.

இவ்வாறு ரஹானே கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *