செய்திகள்

டெல்லியில் போராட்டத்தை தொடங்கிய விவசாயிகள்

வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு

டெல்லியில் போராட்டத்தை தொடங்கிய விவசாயிகள்

புதுடெல்லி, நவ. 28–

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி நோக்கி பேரணி நடத்தி, டெல்லியில் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடத்த விவசாய சங்கங்கள் முடிவு செய்தன. அதன்படி பஞ்சாப் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் டிராக்டர்களிலும், நடந்தும் டெல்லியை நோக்கி சென்றனர்.

ஆனால் இந்த போராட்டத்திற்கு டெல்லி காவல்துறை முதலில் அனுமதி அளிக்கவில்லை. எல்லைகளில் விவசாயிகள் தடுத்து நிறுத்தப்பட்டனர். தடையை மீறி டெல்லியை நோக்கி புறப்பட்ட விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தண்ணீரை பீய்ச்சி அடித்தும், தடியடி நடத்தியும் விரட்டியடித்தனர். இதனால் எல்லையில் பதட்டம் உருவானது. எனினும், விவசாயிகள் பின்வாங்காமல் எல்லையில் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வேளாண் சட்டங்களுக்கு எதிராக முழக்கமிட்டனர்.

எத்தனை நாட்கள் ஆனாலும் டெல்லிக்கு செல்வதில் உறுதியாக இருந்தனர். பல நாட்களுக்கு தேவையான உணவுப் பொருட்கள் மற்றும் சமையல் பாத்திரங்களை டிராக்டர்களில் ஏற்றிக்கொண்டு வந்திருந்தனர்.

நிலைமை தீவிரமடைந்த நிலையில், விவசாயிகள் அமைதியான முறையில் போராட்டம் நடத்த வேண்டும் என்ற நிபந்தனையுடன் டெல்லிக்குள் நுழைவதற்கு காவல்துறை நேற்று மாலை அனுமதி அளித்தது.

விவசாயிகள் அமைதியான முறையில் டெல்லி புராரி பகுதியில் உள்ள நிரங்கரி மைதானத்தில் போராட்டம் நடத்த அனுமதிக்கப்படுவதாக டெல்லி கமிஷனர் தெரிவித்தார்.

அதன் பின்னர் போலீஸ் பாதுகாப்புடன் எல்லையில் இருந்து டெல்லி நோக்கி விவசாயிகள் புறப்பட்டனர். டிராக்டர்களுடன் புராரி மைதானத்திற்கு வந்து சேர்ந்த விவசாயிகள், இன்று காலை போராட்டத்தை தொடங்கினர். இதனைத் தொடர்ந்து விவசாயிகள் மைதானம் நோக்கி வந்த வண்ணம் உள்ளனர்.

வேளாண் சட்டங்கள் திரும்ப பெறப்படாத வரை போராட்டம் தொடரும் என்றும் நீண்டகால போராட்டத்திற்கு தயார் நிலையில் வந்திருப்பதாகவும் போராட்டக்களத்தில் உள்ள ஒரு விவசாயி தெரிவித்தார்.

டிசம்பர் 3ம் தேதி பேச்சுவார்த்தை நடத்த வரும்படி விவசாய சங்கங்களுக்கு வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் அழைப்பு விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *