செய்திகள்

டெல்லியை நோக்கி 2வது நாளாக விவசாயிகள் பேரணி: பலத்த போலீஸ் பாதுகாப்பு

மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து

டெல்லியை நோக்கி 2வது நாளாக விவசாயிகள் பேரணி:

பலத்த போலீஸ் பாதுகாப்பு

டெல்லி, நவ. 27-–2வது நாளாக விவசாயிகள் டெல்லியை நோக்கி தங்களது பேரணியை தொடர்ந்துள்ளனர். இதனை தொடர்ந்து அரியானா மற்றும் டெல்லி இடையேயான சிங்கு எல்லை பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்தும் நோக்கில், போலீசார் தடுப்பான்களுடன் சுருள்கம்பிகளை இணைத்து தடுப்புவேலி அமைத்து உள்ளனர்.

இந்த நிலையில், விவசாயிகளின் பேரணி தேசிய நெடுஞ்சாலையில் பானிபட் சுங்க சாவடி அருகே தடுத்து நிறுத்தப்பட்டது. அரியானாவின் சில இடங்களில் தடுப்பான்களை உடைத்து வன்முறையில் ஈடுபட்ட விவசாயிகளை போலீசார் தண்ணீர் பாய்ச்சியும், கண்ணீர் புகைகுண்டுகளை வீசியும் கலைத்தனர்.

வேளாண் சட்டங்களை எதிர்த்து தீவிரமடையும் போராட்டத்தால் டெல்லி போராட்ட களமாக மாறி வருகிறது.

மத்திய அரசின் சர்ச்சைக்குரிய 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து அரியானா, பஞ்சாப் மாநில விவசாயிகள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதன் ஒருகட்டமாக நேற்று அம்மாநிலங்களிலிருந்து புறப்பட்ட ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லிக்கு செல்லும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளை மறித்தனர்.

ஏற்கனவே இதை எதிர்பார்த்துக் காத்திருந்த போலீசார் தண்ணீர் பீய்ச்சியடிக்கும் வாகனம், தடியடி என்று தொடர்ந்து எதிர்த்தும், விவசாயிகள் பின்வாங்காமல் நேற்று இரவு முழுவதும் நெடுஞ்சாலைகளிலேயே முகாமிட்டிருந்தனர்.

டோல் பிளாசாவில் முகாம்

டெல்லி எல்லையிலிருந்து டெல்லி-அம்பாலா நெடுஞ்சாலையில் 65 கி.மீ தூரத்தில் உள்ள பானிபட் டோல் பிளாசாவில் அரியானா விவசாயிகளும் அதே நெடுஞ்சாலையில் டெல்லி எல்லையிலிருந்து 100 கி.மீ தூரத்தில் உள்ள கர்னாலில், பஞ்சாபிலிருந்து திரண்ட விவசாயிகளும் முகாமிட்டனர்.

மூன்றாவதாக டெல்லி – -சிர்சா நெடுஞ்சாலையில் நகர்ந்து, ஹிசார் மாவட்டத்தில் டெல்லி- – ஜெய்ப்பூர் நெடுஞ்சாலையில் எதிர்ப்பாளர்கள் குழுவை வழிநடத்திய ஸ்வராஜ் இந்தியா அமைப்பின் தலைவர் யோகேந்திர யாதவ் குர்கானில் உள்ள பிலாஸ்பூர் கிராமத்தில் போலீசாரால் தடுக்கப்பட்டார்.

இப்படி டெல்லியின் பல திசைகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லியை நோக்கி நகர்ந்து வருகின்றனர். இவர்கள் அடையாள ஒருநாள் ஆர்ப்பாட்டம் செய்யும் வகையைச் சேர்ந்தவர்கள் இல்லை. திட்டவட்டமாக தீர்மானமாக டெல்லியை முற்றுகையிட்டுப் போராட்டம் செய்யும் வகையில் டிராக்டர்களிலும், லாரிகள், ஜீப்புகளிலும் உணவு சமைக்க தேவையான பொருட்கள், படுக்கைகள் என அணிவகுத்து வருகின்றனர்.

அமைச்சர் வேண்டுகோள்

போராட்டம் உக்கிரம் அடைவதை போலீசாரும், உளவுத் துறையினரும் மத்திய அரசுக்குத் தெரிவித்த நிலையில் மத்திய விவசாயத் துறை அமைச்சர் தோமர், பிரச்சினைகள் மற்றும் வேறுபாடுகளைத் தீர்க்க அரசாங்கம் பேச்சுவார்த்தைக்குத் தயாராக உள்ளது. விவசாய சகோதரர்கள் கிளர்ச்சி செய்ய வேண்டாம் என்று நான் வேண்டுகோள் விடுக்க விரும்புகிறேன் என்று கூறினார்.

அதேபோல், நேற்று மாலை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் செய்தியாளர்களிடம் பேசும்போது, “நான் ஒரு விவசாயியின் மகன். உங்கள் போராட்டங்களை முடிவுக்குக் கொண்டுவரும்படி நான் வேண்டுகோள் விடுக்கிறேன்” என்று தெரிவித்தார். அமைச்சர்கள் இப்படிப் பேசினாலும் கடந்த இரு நாட்களில் 90 விவசாயிகள் சங்கத் தலைவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

நேற்று முழுவதும் அரியானா காவல் துறையினரால் பல தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டுள்ள இரும்புக் கம்பி, கான்க்ரீட் ஆகியவற்றைக் கொண்ட லேயர் தடுப்புகள் பலவும் விவசாயப் படையின் டெல்லி நோக்கிய முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்த முடியவில்லை.

அத்துடன், தோமரின் அறிக்கையோ அல்லது அரியானாவில் அரசாங்கத்தின் பல்வேறு முயற்சிகளோ ஆத்திரமடைந்த விவசாயிகளை சமாதானப்படுத்தவில்லை. விவசாயிகள் இன்று டெல்லியை அடைய அதிக எண்ணிக்கையில் முயற்சி செய்வார்கள் என்று தெரிகிறது. இதனால் அரியானா – டெல்லி எல்லையில் பதற்றம் நிலவுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *