செய்திகள்

தாய்மொழியில் என்ஜினீயரிங் படிப்புகள்: அடுத்த ஆண்டு முதல் தொடங்க மத்தி்ய அரசு திட்டம்

புதுடெல்லி, நவ.27-

தாய்மொழியில் என்ஜினீயரிங் படிப்புகளை அடுத்த ஆண்டு முதல் தொடங்க மத்திய கல்வி அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

மத்திய கல்வி அமைச்சகத்தின் பல்வேறு திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்த உயர்மட்ட ஆய்வுக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தலைமை தாங்கினார். செயலாளர்கள் அமித்கரே, அனிதா கர்வால் மற்றும் பல அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகைகள் உரிய நேரத்தில் வழங்கப்பட வேண்டும் என்றும், அதற்காக உதவி மையம் தொடங்க வேண்டும் என்றும் அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் வலியுறுத்தினார். மேலும் அதை உறுதி செய்யுமாறு பல்கலைக்கழக மானியக்குழுவுக்கு உத்தரவிட்டார். மாணவர்களின் குறைகள் உடனுக்குடன் தீர்க்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

மாணவர்களின் முழுமையான வளர்ச்சி மற்றும் கல்விமுறை மாற்றம் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு, தேசிய கல்விக்கொள்கையை முறையாக அமல்படுத்த அதிகாரிகள் செயல்பட்டு வருவதாக குறிப்பிட்ட அவர், தாய்மொழியில் கல்வி வழங்கும் என்ஜினீயரிங் படிப்புகள் அடுத்த கல்வியாண்டில் தொடங்கப்படும் என்றும், இதற்காக ஒரு சில ஐ.ஐ.டி மற்றும் என்.ஐ.டி. கல்வி நிறுவனங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன என்றும் கூறினார்.

மேலும், தேசிய தேர்வு முகமை, பல்வேறு கல்வி வாரியங்களில் தற்போதுள்ள சூழ்நிலையை மதிப்பீடு செய்து, போட்டித்தேர்வுகளுக்கான பாடத்திட்டங்களை கொண்டுவரும் என்றும், அடுத்த ஆண்டு எப்போது, எப்படி தேர்வுகளை நடத்துவது என்பது குறித்து மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் கருத்துகள் பெறப்படும் என்றும் ரமேஷ் பொக்ரியால் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *