செய்திகள்

டெல்லி மாநகராட்சி இடைத் தேர்தல்: ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி

புதுடெல்லி, மார்ச் 3–

டெல்லி மாநகராட்சி இடைத்தேர்தலில் ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் கட்சிகள் அமோக வெற்றி பெற்றுள்ளன. பாரதீய ஜனதா கட்சி படுதோல்வி அடைந்துள்ளது. வடக்கு டெல்லி மாநகராட்சியில் ரோஹினி-சி மற்றும் ஷாலிமார் பாக் (வடக்கு) ஆகிய 2 வார்டுகளிலும், கிழக்கு டெல்லி மாநகராட்சியில் மூன்று வார்டுகளான திரிலோக்புரி, கல்யாணபுரி மற்றும் சவுகான் பேங்கர் ஆகியவற்றுக்கு கடந்த 28ம் தேதி தேர்தல் நடைபெற்றது. ஷாலிமார் பாக் (வடக்கு) பெண்களுக்காக ஒதுக்கப்பட்டது. திரிலோக்புரி மற்றும் கல்யாண்புரி ஆகியவை தனி தொகுதிகளாகும்.

5 வார்டுகளில், 4 வார்டுகளில் ஏற்கனவே ஆம் ஆத்மி கவுன்சிலர்கள்தான் பதவியில் இருந்தனர். ஆனால் டெல்லி சட்டசபை தேர்தலின்போது, அவர்கள் ஆம் ஆத்மி சார்பில் எம்எல்ஏக்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். எனவே அங்கு இடைத் தேர்தல்கள் நடைபெற்றன.

ஷாலிமார் பாக் வார்டை பொறுத்தளவில் அங்கு, பாரதீய ஜனதா கவுன்சிலர் திலக் ராஜ் கட்டாரியா கடந்த ஆண்டு ஜூன் மாதம் ராஜினாமா செய்தார். மேயர் பதவி பிரச்சினை காரணமாக கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவர் ராஜினாமா செய்துவிட்டார்.

இந்த நிலையில், 4 வார்டுகளில் ஆம் ஆத்மியும், ஒரு வார்டில் காங்கிரசும் ஆரம்பம் முதல் முன்னிலையில் இருந்தது. காலை 10.30 மணியளவில் 2 வார்டுகளில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றது. 2 வார்டுகளில் முன்னிலை வகித்தபடி இருந்தது. பின்னர் 11 மணியளவில் மற்ற 2 வார்டுகளிலும் வென்றது.

திரிலோக்புரி, கல்யாணபுரி, ரோஹினி-சி மற்றும் ஷாலிமார் பாக்கில் ஆம் ஆத்மியும், சவுகான் பேங்கரில் காங்கிரசும் வெற்றி பெற்றுள்ளன. எங்குமே பாரதீய ஜனதா வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *