செய்திகள்

குரூப்–4 பணியிடங்களுக்கு 19-ந்தேதி கலந்தாய்வு: டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு

சென்னை, பிப்.13-

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) கடந்த ஆண்டு (2019) செப்டம்பர் மாதம் 1ந்தேதி குரூப்–4 பதவிகளுக்கான எழுத்துத்தேர்வை நடத்தியது. தேர்வு முடிவு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 12ந்தேதி வெளியிடப்பட்டது. இந்த தேர்வில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டு, முறைகேட்டில் ஈடுபட்ட தேர்வர்கள் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முறைகேட்டில் ஈடுபட்டவர்களின் பெயரை தரவரிசை பட்டியலில் இருந்து டி.என்.பி.எஸ்.சி. அகற்றிவிட்டு, அவர்களுக்கு பதிலாக அடுத்த நிலையில் தேர்ச்சி பெற்றவர்களின் பட்டியலையும் வெளியிட்டது. இந்த நிலையில் மதிப்பெண், தரவரிசை எண், இடஒதுக்கீடு அடிப்படையில் தற்காலிக பட்டியலில் இடம்பெற்றவர்களுக்கான கலந்தாய்வு குறித்த அறிவிப்பை டி.என்.பி.எஸ்.சி. நேற்று அறிவித்தது.

இதுதொடர்பாக டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘குரூப்–4 பதவிகளுக்கான எழுத்துத்தேர்வில் தேர்ச்சி பெற்ற தேர்வர்களின் மதிப்பெண், தரவரிசை எண், இடஒதுக்கீடு விதி மற்றும் காலி பணியிடங்களின் அடிப்படையில் தற்காலிக பட்டியல் வெளியிடப்பட்டு இருக்கிறது. இவர்களுக்கு வருகிற 19-ந்தேதி(புதன்கிழமை) முதல் அசல் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு சென்னை பாரிமுனையில் உள்ள டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதுகுறித்த தகவல்கள் தேர்வர்களுக்கு குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும். அழைப்புக் கடிதத்தினை தேர்வாணைய இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பதாரர்களுக்கு கலந்தாய்வு அழைப்பானை தனியே தபால் மூலம் அனுப்பப்பட மாட்டாது.

தரவரிசை பட்டியலில் இடம்பெற்று இருப்பவர்களின் விவரங்கள் மற்றும் கூடுதல் தகவல்களை www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

மூலச் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு பங்கேற்க அழைக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வில் அவரவர் பெற்ற மதிப்பெண்கள், ஒட்டுமொத்த தரவரிசை, இடஒதுக்கீட்டு விதிகள், விண்ணப்பத்தில் அளித்துள்ள தகவல்கள் மற்றும் நிலவும் காலி பணியிடங்களுக்கு ஏற்ப கலந்தாய்விற்கு அனுமதிக்கப்படுவர். கலந்தாய்விற்கு வர தவறினால் அவர்களுக்கு மறுவாய்ப்பு அளிக்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *