திருவண்ணாமலை, ஜன. 9–
திருவண்ணாமலை மாவட்ட அரசு அருங்காட்சியம் அமைக்கப்பட்டு வரும் பணியை கலெக்டர் சந்தீப்நந்தூரி நேரில் ஆய்வு செய்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
திருவண்ணாமலை மாவட்ட அரசு அருங்காட்சியம் ரூ.1 கோடி மதிப்பீட்டில் புதியதாக அமைக்கப்பட்டு வருகிறது. இந்த அருங்காட்சியகத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் ஏற்கனவே உள்ள வரலாற்று சின்னங்கள், பொருட்கள் மற்றும் சென்னை உட்பட பிற மாவட்டங்களிலிருந்து கொண்டு வரப்படும் வரலாற்று சின்னங்கள், பொருட்கள் காட்சிக்கு வைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. திருவண்ணாமலை மாவட்ட அரசு அருங்காட்சியகத்தில் வரலாற்று சின்னங்கள், சிறப்பு பொருட்கள் காட்சிக்கு வைக்கப்படுவது குறித்த தகவல்கள் பரிமாற்றம் நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தி மெய்நிகர் வாசிப்புடன் அமைக்கப்பட்டு வருகிறது.
திருவண்ணாமலை மாவட்ட அரசு அருங்காட்சியகம் மிகச் சிறப்பாக அமைக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டின் 22-வது மாவட்ட அரசு அருங்காட்சியகமாக திருவண்ணாமலை மாவட்ட அரசு அருங்காட்சியகம், வேங்கிக்கால் பகுதியில் 23,000 சதுர அடியில் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த அருங்காட்சியகத்தில் சமூக, பொருளாதார, அரசியல், கலை, அறிவியல் உட்பட ஏழு விதமான வரலாறுகள் மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தின் பாரம்பரியமான பொருட்கள் கால வரிசைப்படி காட்சி படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும், அருங்காட்சியக வளாகத்தில் வரலாற்று சிறப்பு வாய்ந்த சின்னம் பெரிய அளவில் நிறுவும் பணிகளும் நடைபெற்று வருகிறது.
ஆய்வின் போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பா. ஜெயசுதா, அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் சரவணன் உடன் இருந்தனர்.