செய்திகள்

கடலூர் மாவட்ட குடிமராமத்து பணிகள்: கலெக்டர் அன்புச்செல்வன் விவசாயிகளுடன் ஆலோசனை

கடலூர், ஜன. 29–

கடலூர் மாவட்டத்தில் நடைபெறும் குடிமராமத்து பணிகள் குறித்து பாசனதாரர்களுடன் கலெக்டர் அன்புச்செல்வன் ஆலோசனை நடத்தினார்.

கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரத்துறை சார்பில் (விருத்தாச்சலம் மற்றும் சிதம்பரம்) குடிமராமத்து பணிகள் 2020-21 தொடர்பாக பாசனதாரர்களுடனான கலந்துரையாடல் கூட்டம் மாவட்ட கலெக்டர் வெ.அன்புச்செல்வன் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கலெக்டர் அன்புச்செல்வன் பேசியதாவது:

கடலூர் மாவட்டத்தில் குடிமராமத்து பணிகள் 2016-17-ம் ஆண்டில் 10 பணிகள் ரூ.95 லட்சம் மதிப்பில் செய்து முடிக்கப்பட்டன. 2017-18-ம் ஆண்டில் 55 பணிகள் ரூ.1,150 லட்சம் மதிப்பீட்டில் பணிகள் செய்து முடிக்கப்பட்டன. 2019-20-ம் ஆண்டில் 36 பணிகள் ரூ.815 லட்சம் மதிப்பீட்டில் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டு 31 பணிகள் செய்து முடிக்கப்பட்டன. 4 பணிகள் சி.எஸ்.ஆர் (சமூக பொறுப்புணர்வு திட்டம்) நிதியிலும், ஒரு பணி வரும் ஆண்டில் எடுத்துக்கொள்ளப்பட இருக்கின்றது.

இதனை தொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் 2020-21-க்கான குடிமராமத்து பணிகள் மேற்கொள்ள பொதுப்பணித்துறை விருத்தாச்சலம் கோட்டம் மூலம் 13 பணிகள் ரூ.288.50 இலட்சம் மதிப்பீட்டிலும், பொதுப்பணித்துறை சிதம்பரம் கோட்டம் மூலம் 43 பணிகள் ரூ.859.75 லட்சம் மதிப்பீட்டிலும் பணிகள் மேற்கொள்ள அரசு ஒப்புதல் பெற கலந்தாலோசிக்கப்பட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

இக்கூட்டத்தில் செயற்பொறியாளர்கள் சாம்ராஜ் (சிதம்பரம்) திரு.மணிமோகன் (விருத்தாச்சலம்), மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) லலிதா, உதவி இயக்குநர் (வேளாண்மை) பூவராகன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம் )மாரியப்பன், விவசாயிகள் மற்றும் பாசனதாரர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *