கடலூர், ஜன. 20–
2018-–2019-ம் ஆண்டில் தேசிய அளவில் பதக்கங்களை வென்ற கடலூர் மாவட்டத்தைச் சார்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கணைகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வாங்குவதற்கான காசோலைகளை கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி வழங்கினார்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் தேசிய அளவில் தங்கப்பதக்கம் வென்றவர்களுக்கு தலா ரூ.6000-, வெள்ளிப்பதக்கம் வென்றவர்களுக்கு தலா ரூ.4000-, வெண்கலப்பதக்கம் வென்றவர்களுக்கு தலா ரூ.2000 வீதம் விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கணைகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் 2018-–2019-ம் ஆண்டில் கடலூர் மாவட்டத்தைச் சார்ந்த தங்கப்பதக்கம் வென்ற 9 பேர், வெள்ளிப்பதக்கம் வென்ற 2 பேர், வெண்கலப்பதக்கம் வென்ற 5 பேர் ஆக மொத்தம் 16 மாணவ மாணவியர்கள் தோ்வு செய்யப்பட்டு (மொத்தம் ரூ.72,000) விளையாட்டு உபகரணங்கள் வாங்க அவர்களுக்கான காசோலைகளை கலெக்டர் வழங்கினார்.
2020 ஆன்லைன் நேஷ்னல் டேக்வாண்டோ சாம்பியன் ஷிப் போட்டியில் பதக்கம் வென்ற மாணவ, மாணவிகள் தாங்கள் பெற்ற பதக்கம் மற்றும் சான்றிதழுடன் மாவட்ட கலெக்டரிடம் வாழ்த்து பெற்றனர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் சிவா மற்றும் விளையாட்டு வீரர்கள், வீராங்கணைகள், பயிற்சியாளர்கள் கலந்து கொண்டனர்.