செய்திகள்

கோவையில் ரூ.265 கோடியில் மேம்பாலம் நீட்டிப்பு பணி: எடப்பாடி பழனிசாமி அடிக்கல்

சென்னை, பிப்.4–

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தலைமைச் செயலகத்தில், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சார்பில் கோயம்புத்தூர் மாநகரில், 265 கோடியே 44 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஆத்துப்பாலம் முதல் உக்கடம் சந்திப்பு ஒப்பணக்கார வீதி வரை மேம்பாலம் நீட்டிப்பு பணிக்கு அடிக்கல் நாட்டினார்.

மாநிலத்தின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியில் சாலை உட்கட்டமைப்பு வசதிகளின் முக்கியத்துவத்தினை உணர்ந்தும், பெருகிவரும் போக்குவரத்து தேவைக்கேற்ப சாலைகளின் கொள்ளளவை அதிகரிக்கவும், பாதுகாப்பான பயணத்தினை உறுதிசெய்யவும், மாநிலம் முழுவதும் புதிய பாலங்களை கட்டுதல், தேவையான பகுதிகளில் தரமான சாலைகளை அமைத்தல், சாலைகள் மற்றும் பாலங்களை பராமரித்தல் போன்ற பணிகளை அம்மாவின் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு முனைப்புடன் செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில், கோயம்புத்தூர் மாவட்டம் – கோயம்புத்தூர் (வடக்கு), மதுக்கரை மற்றும் கோயம்புத்தூர் (தெற்கு) வட்டங்களுக்குட்பட்ட கோயம்புத்தூர் மாநகரில், 265 கோடியே 44 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஆத்துப்பாலம் முதல் உக்கடம் சந்திப்பு ஒப்பணக்கார வீதி வரை மேம்பாலம் நீட்டிப்பு பணிக்கு முதலமைச்சர் இன்று அடிக்கல் நாட்டினார்.

இந்த நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை முதன்மைச் செயலாளர் ஆ.கார்த்திக், தலைமைப் பொறியாளர் (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) என். சாந்தி, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *