செய்திகள்

ரூ.99 கோடியில் அறுவை சிகிச்சைப் பிரிவு, மகப்பேறு, பச்சிளங் குழந்தைகள் பராமரிப்பு கட்டிடம்

சென்னை, கோவை, திருநெல்வேலியில்

ரூ.99 கோடியில் அறுவை சிகிச்சைப் பிரிவு, மகப்பேறு, பச்சிளங் குழந்தைகள் பராமரிப்பு கட்டிடம்

எடப்பாடி பழனிசாமி திறந்தார்

ரூ.109½ கோடியில் மருத்துவ கட்டிடங்களுக்கு அடிக்கல்

சென்னை, பிப்.24–

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று தலைமைச் செயலகத்தில், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் 98 கோடியே 93 லட்சத்து 84 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மருத்துவக் கட்டடங்களை திறந்து வைத்தார்.

மேலும், திருவள்ளூர் மாவட்டம் – ஆவடி, திருப்பூர் மாவட்டம் – வேளம்பாளையம், சேலம் மாவட்டம் – அம்மாபேட்டை மற்றும் திருநெல்வேலி மாவட்டம் – கண்டியபேரி ஆகிய இடங்களிலுள்ள 4 இரண்டாம் நிலை அரசு மருத்துவமனைகளுக்கு, 109 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள கூடுதல் கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

ஏழை எளிய மக்களுக்கு உயர்தர மருத்துவ வசதிகள் தங்கு தடையின்றி கிடைக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைகள், வட்ட மற்றும் வட்டம் சாரா மருத்துவமனைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்துதல், நவீன மருத்துவக் கருவிகள் நிறுவுதல், புதிய ஆரம்ப சுகாதார நிலையங்களை தோற்றுவித்தல், எளிதில் செல்ல முடியாத பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு, அவர்கள் வாழும் பகுதிகளிலேயே தரம் வாய்ந்த மருத்துவ வசதி கிடைக்க வழிவகை செய்தல் போன்ற பல முன்னோடி திட்டங்களை அம்மாவின் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில், சென்னை, எழும்பூர் மகளிர் நோயியல் நிலையம் மற்றும் அரசினர் தாய்சேய் நல மருத்துவமனையில் 19 கோடியே 78 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மகளிரியல் அறுவை சிகிச்சைப் பிரிவு கட்டடங்கள்; திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியில் 5 கோடியே 9 லட்சத்து 56 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தேர்வுக்கூடம் மற்றும் 7 கோடியே 79 லட்சத்து 63 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள விரிவுரையாளர் கூடம்;

மகப்பேறு, பச்சிளங் குழந்தைகள் பராமரிப்பு கட்டிடம்

மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குநரகத்தின் சார்பில் திருப்பத்தூர் அரசு மருத்துவமனை, விருதுநகர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மற்றும் ராமநாதபுரம் மாவட்ட தலைமை மருத்துவமனை ஆகிய மருத்துவமனைகளில் 54 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மகப்பேறு மற்றும் பச்சிளங் குழந்தைகள் ஒப்புயர்வு மையங்கள்; பாலக்கோடு அரசு மருத்துவமனையில் 2 கோடியே 14 லட்சம் 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மகப்பேறு மற்றும் பச்சிளங் குழந்தைகள் பராமரிப்பு பிரிவுக் கட்டடம்;

பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து இயக்குநரகத்தின் சார்பில் அரியலூர் சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் அலுவலகத்திற்கு 1 கோடியே 12 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அலுவலகக் கட்டடம்;

திண்டுக்கல் மாவட்டம், மன்னவனூர் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு 1 கோடியே 5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கட்டடம்;

கோயம்புத்தூர் மாவட்டம் – செம்மேடு, ஈரோடு மாவட்டம் – சூசைபுரம், திண்டுக்கல் மாவட்டம் – பூம்பாறை, திருவள்ளூர் மாவட்டம் – மெதூர் மற்றும் வேலூர் மாவட்டம் – சின்னப்பள்ளிகுப்பம் ஆகிய இடங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு 3 கோடியே 15 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கட்டடங்கள்;

திருநெல்வேலி மாவட்டம் – திசையன்விளை, திருப்பூர் மாவட்டம் – முதலிபாளையம், திருவள்ளூர் மாவட்டம் – வெள்ளியூர், இராமநாதபுரம் மாவட்டம் – திருவரங்கம், கீழத்தூவல், பார்த்திபனூர், பாம்பூர் மற்றும் வெங்கிட்டான்குறிச்சி ஆகிய இடங்களிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு 4 கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புறநோயாளிகள் பிரிவுக் கட்டடங்கள்; என மொத்தம் 98 கோடியே 93 லட்சத்து 84 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மருத்துவக் கட்டடங்களை முதலமைச்சர் திறந்து வைத்தார்.

கூடுதல் மருத்துவமனை கட்டடம்

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அரசு மருத்துவமனையில், அறுவை அரங்கம், அறுவை சிகிச்சைக்கு முந்தைய பராமரிப்பு அறை கொண்ட அறுவை அரங்க வளாகம், ஆண் மற்றும் பெண் மயக்க மருந்து மீட்பு பராமரிப்பு பிரிவு, சேவை மற்றும் மருத்துவ சேமிப்புக்கூடம், 60 படுக்கைகள் கொண்ட ஆண் மற்றும் பெண் உள்நோயாளிகள் பிரிவு, இரத்த வங்கி, விபத்து மற்றும் அவசர சிகிச்சைத் துறை, அவசர அறுவை சிகிச்சை பிரிவு, டிஜிட்டல் எக்ஸ்ரே மற்றும் மருந்தகம் உள்ளிட்ட வசதிகளுடன், 5,040.45 சதுர மீட்டர் பரப்பளவில், 26 கோடியே 90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள கூடுதல் மருத்துவமனைக் கட்டடம்;

திருப்பூர் மாவட்டம், வேளம்பாளையம் அரசு மருத்துவமனையில், அறுவை அரங்க பிரிவு, பச்சிளம் குழந்தை பராமரிப்பு பிரிவு, 60 படுக்கைகள் கொண்ட ஆண், பெண் மற்றும் பொது உள்நோயாளிகள் பிரிவு, டயாலிசிஸ் பிரிவு, இமேஜிங் துறை, மருந்தகம், புறநோயாளிகள் பிரிவு, அவசர சிகிச்சைத் துறை, அவசர அறுவை சிகிச்சை பிரிவு மற்றும் சேவைகள், நிர்வாக அலுவலகம், பயிற்சியாளர்கள் தங்குமிடம் மற்றும் மருந்து சேமிப்பு கூடம் உள்ளிட்ட வசதிகளுடன், 5779.87 சதுர மீட்டர் பரப்பளவில், 27 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள கூடுதல் மருத்துவமனைக் கட்டடம்;

சேலம் மாவட்டம், அம்மாபேட்டை அரசு மருத்துவமனையில், இரண்டு அறுவை அரங்கங்கள், இமேஜிங் துறை, புறநோயாளிகள் துறை, அவசர சிகிச்சைப் பிரிவு, அவசர அறுவை சிகிச்சை பிரிவு, ஸ்டெர்லைசேஷன் சேவை, டயாலிசிஸ் பிரிவு மற்றும் சேவைகள், 60 படுக்கைகள் கொண்ட ஆண், பெண் மற்றும் பொது உள்நோயாளிகள் பிரிவு, சலவையகம், நிர்வாகத் துறை, சி.எம்.ஓ. அறை, நவீன சிறிய சமையலறை, மருந்தகம் மற்றும் மருத்துவ ஆய்வகம் உள்ளிட்ட வசதிகளுடன், 5,706.54 சதுர மீட்டர் பரப்பளவில், 26 கோடியே 70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள கூடுதல் மருத்துவமனைக் கட்டடம்;

திருநெல்வேலி மாவட்டம், கண்டியப்பேரி அரசு மருத்துவமனையில், இரண்டு அறுவை அரங்கங்கள், பச்சிளம் குழந்தை பராமரிப்பு பிரிவு மையம், இமேஜிங் துறை, 60 படுக்கைகள் கொண்ட ஆண், பெண் மற்றும் பொது உள்நோயாளிகள் பிரிவு, புறநோயாளிகள் துறை, விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு, அவசர அறுவை சிகிச்சை பிரிவு, மருந்தகம் மற்றும் மருத்துவ ஆய்வகம் உள்ளிட்ட வசதிகளுடன், 5,599.33 சதுர மீட்டர் பரப்பளவில், 28 கோடியே 90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள கூடுதல் மருத்துவமனைக் கட்டடம்;

என மொத்தம் 109 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள கூடுதல் மருத்துவமனைக் கட்டடங்களுக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்.

இந்த நிகழ்ச்சியில், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை அமைச்சர் வி.எம்.ராஜலட்சுமி, தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு சுகாதார சீரமைப்புத் திட்ட இயக்குநர் ஏ. சிவஞானம், மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் ஆர். நாராயணபாபு, மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குநர் டாக்டர் குருநாதன், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து இயக்குநர் (சிறப்பு பணி அலுவலர்) டாக்டர் என். சித்ரா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *