போஸ்டர் செய்தி

155 காவலர் குடியிருப்புகள்; 8 காவல் நிலைய கட்டிடங்கள்

சென்னை, ஜூலை 25–

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (25–ந்தேதி) தலைமைச் செயலகத்தில், உள்துறை சார்பில் அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் 7 கோடியே 40 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 60 காவலர் குடியிருப்புகள் மற்றும் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய காவலர்களுக்காக 81 லட்சத்து 51 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 6 மகளிர் காவலர் குடியிருப்புகள் ஆகியவற்றை காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்தார்.

மேலும், 16 கோடியே 97 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 89 காவலர் குடியிருப்புகள் மற்றும் 8 காவல் நிலையக் கட்டடங்களையும் திறந்து வைத்தார்.

பொது மக்களின் உயிருக்கும், உடைமைக்கும் பாதுகாப்பாக விளங்குவதோடு, மாநிலத்தின் அமைதியைப் பேணிப் பாதுகாத்து, சட்டம் ஒழுங்கைப் பராமரிக்க கடமை உணர்வுடன் பணியாற்றும் காவலர்களின் நலன்களை பேணிக் காத்திடும் வகையில், வாடகைக் கட்டடங்களில் இயங்கி வரும் காவல் நிலையங்களுக்கு சொந்தக் கட்டடங்கள் கட்டுதல், காவல் துறையில் பணிபுரிபவர்களுக்கு அவர்கள் பணிபுரியும் இடங்களின் அருகிலேயே குடியிருப்புகள் கட்டுதல், காவல் துறையினருக்கு புதிய அலுவலகக் கட்டடங்கள் கட்டுதல் போன்ற பல்வேறு திட்டங்களை அம்மா வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.

ஜெயங்கொண்டத்தில்…

அந்த வகையில், அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் 7 கோடியே 40 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 60 காவலர் குடியிருப்புகள் மற்றும் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய காவலர்களுக்காக 81 லட்சத்து 51 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 6 மகளிர் காவலர் குடியிருப்புகள் ஆகியவற்றை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார்.

மேலும், அரியலூர் மாவட்டம் தா.பழூரில் 21 குடியிருப்புகள், கடலூர் மாவட்டம் திருப்பாதிரிப்புலியூரில் 63 குடியிருப்புகள் மற்றும் தஞ்சாவூர் மாவட்டம் தஞ்சாவூர் ஆயுதப்படை வளாகத்தில் 5 குடியிருப்புகள், என மொத்தம் 11 கோடியே 46 லட்சத்து 26 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 89 காவலர் குடியிருப்புகள்;

கோயம்புத்தூர் மாவட்டம் – பில்லூர் அணை மற்றும் வடக்கிபாளையம், திருப்பூர் மாவட்டம் – வேலம்பாளையம், தஞ்சாவூர் மாவட்டம் – திருவிடைமருதூர், திருச்சிராப்பள்ளி மாவட்டம் – ஜெம்புநாதபுரம், வேலூர் மாவட்டம் – அவளூர் மற்றும் ரத்தினகிரி, விழுப்புரம் மாவட்டம் – பெரியதச்சூர் ஆகிய இடங்களில் 5 கோடியே 50 லட்சத்து 74 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 8 காவல் நிலையக் கட்டடங்கள்;

ரூ.25 கோடியில்…

என மொத்தம், 25 கோடியே 18 லட்சத்து 96 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 155 காவலர் குடியிருப்புகள் மற்றும் 8 காவல் நிலையக் கட்டடங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், அரசு தலைமைக் கொறடா எஸ். ராஜேந்திரன், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் நிரஞ்சன் மார்டி, காவல்துறை தலைமை இயக்குநர் டி.கே. ராஜேந்திரன், தமிழ்நாடு காவலர் வீட்டுவசதி கழக தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ம.நா. மஞ்சுநாதா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *