விழுப்புரம், பிப். 23–
ஏழை மக்கள், விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றுபவர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி என்று விழுப்புரத்தில் நடந்த அரசு விழாவில் அமைச்சர் சி.வி.சண்முகம் பெருமிதத்துடன் கூறினார்.
விழுப்புரத்தில் நடந்த அரசு விழாவில் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் பேசியதாவது:-
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை போன்று பச்சை துண்டு போட்டு வேடம் போடாமல், நாடகம் நடிக்காமல், தானும் ஒரு விவசாயி என்ற எண்ணத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கிராமப்புற ஏழை, எளிய மக்கள், விவசாயிகளின் தேவையை உணர்ந்து கோரிக்கைகளை நிறைவேற்றி தருகிறார்.
விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களின் நீண்ட கால கோரிக்கையான குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வு கிடைக்கிற வகையில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிறைவேற்றி தந்துள்ளார். அதுபோல் விழுப்புரம் மாவட்ட மீனவர்களின் வாழ்வாதார பிரச்சினையை தீர்க்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இங்குள்ள மீனவர்கள் மீன்பிடிக்க துறைமுகத்திற்கு செல்ல வேண்டுமெனில் சென்னை அல்லது அதற்கு அடுத்ததாக புதுச்சேரி, கடலூரில் உள்ள துறைமுகங்களுக்கு செல்ல வேண்டும். அவ்வாறு செல்லும்போது பல பிரச்சினைகளை சந்திக்கின்றனர். இதனால் மீனவர்களின் வாழ்வாதார பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்தும் வகையில் விழுப்புரம், காஞ்சீபுரம் மாவட்டங்களை ஒருங்கிணைத்து 2 மாவட்டங்களிலும் உள்ள 65 மீனவ குப்பங்கள் பயன்பெறும் வகையில் மீன்பிடி துறைமுகம் கொண்டு வந்து மீனவர்களின் வாழ்க்கையில் ஒளியேற்றி வைத்தவர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.
எண்ணற்ற திட்டங்கள்
இந்த 4 ஆண்டு கால ஆட்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நமது தொகுதி மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி தந்துள்ளார். இதனால் என்னால் சட்டமன்ற தொகுதி மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றியதோடு எண்ணற்ற திட்டங்களையும் கொண்டு வர முடிந்தது. கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தின் மூலம் விழுப்புரம் மாவட்ட மக்களின் குடிநீர் பிரச்சினையை தீர்த்து வைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை உளுந்தூர்பேட்டை வரை நீட்டித்து தர வேண்டும் என்று கோரிக்கை வைத்ததன் அடிப்படையில் அதற்கும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதியளித்துள்ளார்.
அதேபோல் கல்வியில் பின்தங்கிய மாவட்டங்களான விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களை கல்வியில் தரம் உயர்த்த கோரிக்கை வைத்தோம். அதன்படி விழுப்புரத்தில் பல்கலைக்கழகம் நிறுவப்படும் என்று அறிவித்து ஜெயலலிதா பெயரிலேயே பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என்று சட்டசபையில் சட்டத்தை நிறைவேற்றி தந்துள்ளார். இதற்காக முதல்-அமைச்சருக்கு நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.