செய்திகள்

சென்னை குடிநீர் வழங்கல், கழிவுநீர் அகற்று வாரியம் உலக தரத்துக்கு உயர்த்தப்படும்: சட்டசபையில் ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு

Spread the love

சென்னை, பிப்.14–

24 மணி நேரம் குடிநீர் வழங்கவும், கழிவுநீரை சேகரித்து மறுசுழற்சி செய்யவும்

சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியம் உலக தர சேவை நிறுவனமாக உயர்த்தப்படும் என சட்டசபையில் துணை முதல்அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:–

சென்னை மாநகரம் தொடர்ந்து நிலைக்கத்தக்க பொருளாதார வளர்ச்சி பெறுவதை உறுதிசெய்வதற்கு, அரசின் ஒரு முக்கிய முயற்சியாக, உலகவங்கியின் ஆதரவுடன் ‘சென்னை மாநகரக் கூட்டாண்மை’ என்னும் தனித்தன்மை வாய்ந்த வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்படும். பெருநகரப் போக்குவரத்து, நீர் ஆதாரங்களின் தாங்குத்தன்மை மற்றும் நகர நிர்வாகம் மற்றும் நிதி மேலாண்மை என்ற மூன்று முக்கியத் தூண்களை இத்திட்டம் மையமாகக் கொண்டுள்ளது.

திட்டத்தின் நகர்ப்புரப் போக்குவரத்துப் பிரிவின் கீழ், சென்னை மெட்ரோ இரயில், தெற்கு இரயில்வே, மாநகரப் போக்குவரத்துக் கழகம், பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் மாநில நெடுஞ்சாலைகள் துறை ஆகிய பல்வேறு நகர்ப்புரப் போக்குவரத்து முகமைகளின் முதலீடுகளையும், உத்திகளையும் சிறப்பான முறையில் பயன்படுத்தி, ஒரு ஒருங்கிணைந்த போக்குவரத்து முறை ஏற்படுத்தப்படும்.

24 மணிநேரமும் குடிநீர் வழங்குதல்

‘சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்துக் குழுமம்’ மறுசீரமைக்கப்பட்டு, அனைத்துத் துறைகள் மற்றும் போக்குவரத்து முறைகளை ஒருங்கிணைத்து, நிதி ஆதாரங்களைப் பகிர்ந்தளித்துத் தரும் ஒரு அமைப்பாக வலுவூட்டப்படும். திட்டத்தின் நீர் ஆதாரங்களின் பிரிவின் கீழ், சென்னையில் தொடர்ச்சியாக ஏற்பட்டு வரும் வெள்ளம் மற்றும் குடிநீர்ப் பற்றாக்குறையைச் சமாளிப்பதற்கும், குடிநீர்த் தேவையை நிறைவு செய்வதற்கும் ஒருங்கிணைந்த நீர் மேலாண்மைத் திட்டம் செயல்படுத்தப்படும். சென்னை நகரம் முழுவதும் படிப்படியாக, 24 மணிநேரமும் குடிநீர் வழங்குதல், கழிவுநீரை சேகரித்து மறுசுழற்சி செய்து பயன்பாட்டிற்குக் கொண்டு வருதல், சென்னைப் பெருநகரக் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தை உலகத் தரம் வாய்ந்த சேவை நிறுவனமாகத் தரம் உயர்த்துதல் மற்றும் வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்புகளை குறைப்பதற்கான முதலீடு ஆகியவை இத்திட்டத்தின் முக்கியப் பகுதிகளாக அமையும்.

மேலும், சென்னை மாநகரக் கூட்டாண்மைத் திட்டத்தின் கீழ், நகர்ப்புர நிர்வாகம் மற்றும் நிதி ஆதாரங்கள் ஆகிய பிரிவை, பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமம் முக்கிய பங்குதாரர்களாக இணைந்து, அவர்களால் செயல்படுத்தப்படும். சென்னை மாநகரக் கூட்டாண்மைக்கு உலக வங்கியின் நிதியுதவியாக 100 கோடி அமெரிக்க டாலர்கள் பெறப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்திட்டத்திற்கு, 2020–21 ஆம் ஆண்டில் தேவையான ஒப்புதல்கள் பெறப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *