செய்திகள்

நீதிபதியின் மகன் போல் நடித்து மூத்த வழக்கறிஞரை ஏமாற்ற முயற்சி

சென்னை, மார்ச் 5–

நீதிபதியின் மகன் போல் நடித்து மூத்த வழக்கறிஞரை ஏமாற்ற முயன்ற வடமாநில வாலிபருக்கு 5 மாத சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது.

சென்னையைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞரும். முன்னாள் அட்வகேட் ஜெனரலுமான பி.எஸ்.ராமன், சென்னை காவல்துறை கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரில் “அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தன்னை வாட்ஸ் ஆப்பில் தொடர்பு கொண்டு, தான் ஒரு வழக்கறிஞர் என்றும், சுப்ரீம் கோர்ட் நீதிபதியின் மகன் என்றும் தெரிவித்தார். தான் சென்னைக்கு அலுவல் சம்பந்தமாக வந்திருப்பதாகவும். தன்னுடைய செலவுக்காக ரூ.20,000- தரும்படி கேட்டதாகவும். தான் டெல்லி சென்றவுடன் திருப்பித் தந்து விடுவதாகவும் தெரிவித்து குறுஞ்செய்தி அனுப்பினார்.

அதை உண்மை என்று நம்பிய நானும் அவருக்கு உதவி செய்வதற்காக அவரைத் தொடர்பு கொண்டு என்ன விவரம் எனக்கேட்டபோது, வாட்ஸ் ஆப்பில் பேசிய நபர் போலியான நபர் என்பதைப் புரிந்துக்கொண்டேன். அவர் மீது சட்டபடியான நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனப் புகாரில் தெரிவித்திருந்தார்.

அவர் அளித்த புகார் சென்னை மத்திய குற்றபிரிவு கணிணிவழி குற்றபிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. தொடர் விசாரணையில் அட்வகேட் ஜெனரலை ஏமாற்ற முயன்ற நபர் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த அப்ரஜித் பசாக்(54) என்பதும். அவர் சுப்ரீம் கோர்ட் நீதிபதி மகன் போன்று ஆள்மாறாட்டம் செய்து ஏமாற்ற முயன்றது விசாரணையில் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவனை போலீசார் கைது செய்தனர்.

இவ்வழக்கில் நீதிமன்ற விசாரணையில் தகவல் தொழில்நுட்ப திருத்தச் சட்டம் பிரிவு 66 D உ-இ, 84C ஆகிய பிரிவுகளின் கீழ் குற்றம் செய்தது நிருபணம் ஆன காரணத்தினால் எழும்பூர் குற்றவியல் சிறப்பு நீதிமன்றம் (சிசிபி மற்றும் சிபிசிஐடி வழக்குகள்) குற்றவாளி அப்ரஜத் பசாக்குக்கு 5 மாத சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *