செய்திகள்

காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்புக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பாராட்டு

சென்னை, பிப்.10-

காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படும் என்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் அறிவிப்புக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

விவசாயிகள் நலனை கருத்தில் கொண்டும், தமிழகத்தில் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, கடலூர், அரியலூர், கரூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களின் டெல்டா பகுதிகள் பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக மாற்றப்படும் என்று முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

டாக்டர் ராமதாஸ்

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய காவிரி பாசன மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருக்கிறார். இதற்காக, சட்டப்பேரவையில் தனிச்சட்டம் கொண்டுவந்து நிறைவேற்றப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார். முதலமைச்சரின் இந்த அறிவிப்பை பா.ம.க. சார்பில் முழு மனதுடன் வரவேற்கிறேன்; பாராட்டுகிறேன். இந்த அறிவிப்பு மூலம் இனி ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட எந்த திட்டங்களுக்கும் அங்கு அனுமதி அளிக்கப்படாது.

காவிரி பாசன மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்ததன் மூலம், விவசாயிகள் நலனில் தாம் அக்கறை கொண்டிருப்பதை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிரூபித்திருக்கிறார். தாம் ஒரு விவசாயி என்று தொடர்ந்து கூறிவரும் முதலமைச்சர், அது வார்த்தை அல்ல… வாழ்க்கை என்பதை இந்த அறிவிப்பின் மூலம் உறுதிபடுத்தியிருக்கிறார்.

அரசியல் துணிச்சல்

காவிரி டெல்டாவில் பல லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான ஹைட்ரோ கார்பன் திட்டங்களை மத்திய அரசின் ஆதரவுடன் செயல்படுத்த பன்னாட்டு நிறுவனங்கள் காத்திருந்த நிலையில், அவற்றை முறியடிக்கும் வகையில், காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்திருப்பது முதல்வரின் அரசியல் துணிச்சலை வெளிப்படுத்துகிறது. இதன் மூலம் அவர் உழவர்களின் பாதுகாவலனாக உயர்ந்திருக்கிறார். இதற்காக முதலமைச்சருக்கு காவிரி டெல்டா விவசாயிகள் என்றென்றும் நன்றிக்கடன் பட்டுள்ளனர்.

காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டிருப்பது தனிப்பட்ட முறையில் எனக்கும், பாட்டாளி மக்கள் கட்சிக்கும் மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது என்றார்.

விஜயகாந்த்

தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத்தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தே.மு.தி.க. சார்பில் எனது நன்றிகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். சிறப்பு வேளாண் மண்டலத்திற்கு தனி சட்டம் இயற்றப்படும் என்று கூறியிருப்பது வரவேற்கத்தக்கது. அதேபோல காவிரி டெல்டா பகுதியில் ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்கள் வராது என்ற அறிவிப்பையும் கூறியிருப்பது இரட்டிப்பு மகிழ்ச்சியை அளிக்கிறது. எனவே அப்பகுதி விவசாயிகளுக்கு இந்த அறிவிப்பு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் என்றார்.

ஜி.கே.வாசன்

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

தமிழக அரசு தொடர்ந்து விவசாயிகள் நலன் காக்க மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள், திட்டங்கள் எல்லாமே விவசாயிகளுக்கும், விவசாயம் சார்ந்த தொழிலுக்கும் பலன் அளிக்கிறது என்பதற்கு தற்போது அறிவிக்கப்பட்டுள்ள பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல அறிவிப்பு மேலும் ஒரு எடுத்துக்காட்டாக அமைந்திருக்கிறது. இந்த அறிவிப்பு தமிழக விவசாயிகளின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றியிருக்கிறது. இதனால் டெல்டா பகுதியில் விவசாய நிலங்களை நம்பியுள்ள விவசாயிகளின் வாழ்வாதாரம் சிறக்கும். இது ஒட்டுமொத்த விவசாய வளர்ச்சிக்கும் பயன் தரும். அண்ணா தி.மு.க. அரசு தொடர்ந்து விவசாயிகள் நலன் காக்கும் அரசாக செயல்படுவதை இந்த அறிவிப்பும் நிரூபித்திருக்கிறது என்றார்.

சரத்குமார்

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

நலிவுற்றிருந்த விவசாய தொழில் நலமுடன் வளர்ச்சியடையும் வகையிலும், விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையிலும் இனி எப்போதும் ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட திட்டங்களுக்கு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் அனுமதி அளிக்கப்படாது என உறுதிபட முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருப்பது சிறப்பு. விவசாய தொழில் லாபகரமானதாகவும், தமிழகத்தில் பசுமைப்புரட்சி மேலோங்கி உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெறுவதற்கு அடிகோலுவதாகவும் இந்த அறிவிப்பு அமையும் என நம்புகிறேன் என்றார்.

முத்தரசன்

இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

காவிரி டெல்டா பகுதி பாது காக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக அறிவிக்கப்படும் என்று முதல் அமைச்சர் அறிவித்துள்ளது விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள், பொதுமக்கள் நடத்திய தொடர் போராட்டத்தின் வெற்றி. ஆனாலும் ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிடவில்லை. இதை கருத்தில்கொண்டு தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என்றார். சீமான்

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சமீபத்தில் சந்தித்தோம். அப்போது, நாம் தமிழர் கட்சி சார்பாக வைக்கப்பட்ட கோரிக்கைகளில் முதன்மையான கோரிக்கையாக தஞ்சை மண்டலத்தை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தோம். அதன்படி, தமிழர்களின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றி அறிவித்திருக்கிற தமிழக முதல் அமைச்சருக்கு மனமார்ந்த நன்றி என்றார்.

எஸ்.டி.பி.ஐ.

எஸ்.டி.பி.ஐ. கட்சி தலைவர் நெல்லை முபாரக், தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பெ.சண்முகம், இந்திய ஜனநாயக கட்சி தலைவர் பாரிவேந்தர் எம்.பி., தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ., இந்திய ஜனநாயக வாலிபர் சங்க தலைவர் என்.ரெஜிஸ்குமார் உள்பட ஏராளமான அரசியல் கட்சி தலைவர்கள் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் அறிவிப்பை வரவேற்று பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *