போஸ்டர் செய்தி

டெல்லி குடியுரிமை போராட்ட வன்முறை: உயிரிழப்பு 7 ஆக உயர்வு

Spread the love

புதுடெல்லி,பிப்.25–

டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்ட போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறைக்கு இதுவரை 7 பேர் பலியாகி உள்ளனர்.குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு (சிஏஏ) எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெறுகின்றன. தலைநகர் டெல்லியில் பல்வேறு அமைப்பினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். அதேசமயம் சிஏஏ ஆதரவு போராட்டங்களும் நடைபெறுகின்றன.

இந்நிலையில், வடகிழக்கு டெல்லியில் நடைபெற்று வரும் போராட்டத்தின்போது வன்முறை வெடித்துள்ளது. மாஜ்பூர் பகுதியில் நேற்று நடைபெற்ற வன்முறையில் தலைமை காவலர் ரத்தன் லால் உயிரிழந்தார்.

இதேபோல் பல்வேறு இடங்களில் சிஏஏ எதிர்ப்பு போராட்டக்காரர்களுக்கும், சிஏஏ ஆதரவு போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இன்றும் ஆங்காங்கே வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. கல்வீச்சில் ஏராளமான வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. பதட்டம் நிறைந்த பகுதிகளில் போலீசார் மற்றும் அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த வன்முறையில் நேற்று மாலை வரை 4 பேர் உயிரிழந்த நிலையில், இன்று மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் சிஏஏ போராட்ட வன்முறையில் பலியானோரின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது குழுவினர் டெல்லியில் உள்ள நிலையில், சிஏஏ போராட்ட வன்முறை தீவிரமடைந்துள்ளது. டிரம்ப் செல்லும் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

அமித்ஷா ஆலோசனை

டெல்லியில் திருத்தப்பட்ட குடியுரிமைச் சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டதையடுத்து, தலைநகரின் நிலவரம் குறித்து விவாதிக்க மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. டெல்லியின் நிலவரம் குறித்து விவாதிக்க, டெல்லி கவர்னர், முதல்வர் கெஜ்ரிவால் மற்றும் அரசியல் கட்சிகளின் முக்கிய தலைவர்களுக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா அழைப்பு விடுத்துள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் பங்குபெறும் இந்த ஆலோசனைக் கூட்டம் இன்று மதியம் 12 மணியளவில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *