செய்திகள்

குழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமை: ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வு பயிற்சி

Spread the love

சென்னை, பிப்.1–

குழந்தைகளுக்கு பாலியல் துன்புறுத்தல் ஏற்படும்போது ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டிய சட்டப்பூர்வமான கடமைகள் குறித்து சென்னை மாநகராட்சி மற்றும் இன்னர் வீல் கிளப் ஆப் மெட்ராஸ் இணைந்து நடத்திய சென்னைப் பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கான பயிலரங்கம் அம்மா மாளிகை அரங்கத்தில் இன்று நடைபெற்றது.

இந்த பயிலரங்கத்தில் சென்னை மாநகராட்சி ஆணையாளர் கோ.பிரகாஷ், காவல்துறை கூடுதல் தலைமை இயக்குனர் (மகளிர் மற்றும் குழந்தைப் பாதுகாப்பு) எம்.ரவி, புதுச்சேரி மனித உரிமை ஆணையத்தின் தலைவர் எம்.ஜெயச்சந்திரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பாலியல் வன்கொடுமைகளால் பாதிக்கப்படும் குழந்தைகளை கையாளும் முறைகள் குறித்தும், குழந்தைகளுக்கு நல்ல முறையில் தொடுதல் மற்றும் தவறான முறையில் தொடுதல் குறித்தும், இந்த வன்கொடுமையில் ஈடுபடும் நபர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட வேண்டிய சட்டநடவடிக்கைகள் குறித்தும் கருத்துக்களை எடுத்துரைத்தார்கள்.

விழிப்புணர்வு

இவ்வகையான பயிற்சி வகுப்புகள் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து மண்டலங்கள், வார்டுகள் மற்றும் அனைத்து சென்னைப் பள்ளிகளிலும் இனிவரும் நாட்களில் நடத்தப்படும் எனவும், இவ்வகையான குற்றத்தில் ஈடுபடுபவர்கள் மேல் கடுமையான நடவடிக்கை எடுக்க அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும், ஆசிரியர்கள் மட்டும் தான் கல்வி பயிலும் அனைத்து குழந்தைகளுக்கும் தாய், தகப்பனாக செயல்படுகிறார்கள் எனவும், மேலும், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மாநகராட்சியுடன் இணைந்து இதுபோன்ற பயிலரங்கங்களை நடத்த முன்வர வேண்டும் எனவும், ஆசிரியர்கள் அனைவரும் போக்சோ சட்டத்தைக் குறித்த விழிப்புணர்வை முழுமையாக தெரிந்திருக்க வேண்டும் எனவும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

பெற்றோருக்கு அடுத்தபடியாக குழந்தைகளை வளர்ப்பதிலும், குழந்தைகளை கவனித்து சிறந்த வழியில் உருவாக்கி, துயரத்தில் உள்ள குழந்தைகளுக்கு உதவும் பொறுப்பில் உள்ளவர்கள் ஆசிரியர்களே. எனினும் பல சமயங்களில் இப்பிரச்சனைகளை எதிர்நோக்குவதில் இயலாமையும், சட்டப்பூர்வமான கடமைகள் என்ன என்பதும், எத்தகைய ஆதரவு அமைப்புகள் உள்ளன என்பதும் ஆசிரியர்களுக்குத் தெரிவதில்லை.

இந்தப் பயிற்சி வகுப்பில் கலந்துகொண்ட தலைமையாசிரியர்களுக்கு, துன்புறுத்தலுக்குள்ளான குழந்தைகளை கண்டறிந்து அவர்களைப் பொறுப்புடன் கையாண்டு, அந்தப் பிரச்சினையிலிருந்து விடுபட வழிவகை செய்யவும், குழந்தைகளின் மனநிலையை புரிந்து கொள்ளவும், பாலின வேறுபாடுகளை குறித்தும், பாலின துன்புறுத்தல் ஏற்படும்போது எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்தும், அவ்வாறு துன்புறுத்தல் ஏற்படும்போது காவல்துறையிடம் புகார் செய்வது குறித்தும், பள்ளிகளில் குழந்தைகள் பாதுகாப்பானதாக உணரச் செய்வது குறித்தும், பாலினக் கல்வி குறித்த வகுப்புகள் பற்றியும் பயிற்சி அளிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், துணை ஆணையாளர் (கல்வி) கிரேஸ் லால்ரின்டிகி பச்சுவாவ், இந்திய குழந்தைள் நல இயக்க ஆலோசகர் கிரிஜா குமரபாபு, இன்னர் வீல் அமைப்பின் மண்டல தலைவர் நளினி ஒளிவண்ணன், கல்வித்துறை அலுவலர்கள், இன்னர் வீல் கிளப் ஆப் மெட்ராஸ் பிரதிநிதிகள் மற்றும் சென்னைப் பள்ளி தலைமையாசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *