போஸ்டர் செய்தி

அண்ணா பல்கலைகழக வளாகத்தில் எந்த முறைகேடும் நடக்கவில்லை

சென்னை,ஆக.3–

லஞ்சம் பெற்றுக் கொண்டு கூடுதல் மார்க் வழங்கிய விவகாரத்தில் சிக்கிய அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அண்ணா பல்கலைகழக துணைவேந்தர் சூரப்பா தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே இந்த விவகாரத்தில் முன்னாள் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி உமா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் தமிழகத்தில் அனைத்துப் பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதம் நடந்த செமஸ்டர் தேர்வு எழுதிய மாணவர்கள் சிலர் கூடுதல் மார்க் பெற லஞ்சம் கொடுத்துள்ளதாக புகார் எழுந்தது.

மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களிடம் ரூ.10 ஆயிரம் பெற்று அவர்களுக்கு கூடுதல் மார்க் வழங்கியதாக, அப்போதைய தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரியும் தற்போதைய ஐடி துறை பேராசிரியையுமான உமா மற்றும் மண்டல அதிகாரிகள் விஜயகுமார், சிவகுமார் மற்றும் விடைத்தாள் திருத்திய 7 ஆசிரியர்கள் உள்பட 10 பேர் மீது லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், லஞ்சம் பெற்றுக் கொண்டு கூடுதல் மார்க் வழங்கிய விவகாரம் தொடர்பாக முன்னாள் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி உமா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அண்ணா பல்கலைக்கழகம் விடைத்தாள் மறுமதிப்பீடு முறைகேடு விவகாரத்தில் தேர்வுக் கட்டுப்பாட்டாளர் உமா முறைகேட்டில் ஈடுபட்டது நிரூபணமானதால் அவரை இடைநீக்கம் செய்து அண்ணா பல்கலைகழக துணைவேந்தர் சூரப்பா நடவடிக்கை எடுத்துள்ளார்.

இதுதொடர்பாக உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறுகையில், அண்ணா பல்கலைக்கழகம் விடைத்தாள் மறுமதிப்பீடு முறைகேடு விவகாரத்தில் முன்னாள் தேர்வு கட்டுப்பாட்டாளர் உமா முறைகேட்டில் ஈடுபட்டது நிரூபணம் ஆகியுள்ளது. அவர் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

துணைவேந்தர் சூரப்பா பேட்டி

அண்ணா பல்கலைக்கழக முறைகேடு தொடர்பாக துணைவேந்தர் சூரப்பா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:–

மறுமதிப்பீடு விவகாரத்தில் பலருக்கு தொடர்பு உள்ளது. முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் அனைவரும் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ளவர்கள் என கூற முடியாது. அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவர்களின் வளர்ச்சியும், பல்கலைக்கழக மாண்பும் காக்கப்படும். பல்கலைக்கழக வளாகத்தில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை. தனியார் கல்லூரிகளில் விடைத்தாள் திருத்தும் போது முறைகேடு நடைபெற்றுள்ளது. இந்த முறைகேட்டில் தொடர்புடைய அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.

பல்கலைக்கழகத்திற்கு தமிழக அரசு அளித்து வரும் ஒத்துழைப்பு திருப்திகரமாக உள்ளது. எனது முழு நேரத்தையும் விசாரணைக்காக செலவிடுவதைவிட பல்கலைக்கழக வளர்ச்சிக்கு செலவிடவே விரும்புகிறேன்.

அண்ணா பல்கலைக்கழகத்தில் எந்த ஊழலையும் அனுமதிக்க மாட்டோம். மறுமதிப்பீடுக்கு வசூலிக்கப்படும் பணம் முறையாக செலவிடப்படுகிறதா? என்பதை கண்காணிப்பேன். இது போன்ற முறைகேடுகளை ஒருபோதும் நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். முறைகேடு நடக்க சமூகமும் ஒரு வகையில் காரணமாக உள்ளது. நடந்த முறைகேடுகள் அனைத்தும் முன்னாள் மாணவர்கள் சம்பந்தப்பட்டது. லஞ்ச ஒழிப்பு துறையின் முதல் தகவல் அறிக்கை நேற்று தான் கிடைத்தது. அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த முறைகேடு எந்த வகையிலும் கற்பனை செய்ய முடியாத தவறு. தேவைப்பட்டால் தேர்வுத்துறையில் மாற்றம் கொண்டு வரப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே அண்ணா பல்கலைக்கழக மறுகூட்டல் முறைகேடு தொடர்பாக திண்டிவனம் அரசு பொறியியல் கல்லூரியின் முதல்வர் விஜயகுமார் பதவி இறக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *