சிறுகதை

ஆண்ட்ராய்டு போன் ஆசை | செருவை நாகராசன்

சிறுகதைச் சுருக்கம்: போன் ஆசையைக் கைவிட்டு ஏழைகளுக்கு உதவுதல்

* * *

அன்று ஞாயிற்றுக்கிழமை ; குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் ஆனந்தத்தை அள்ளிக் கொண்டு வருகிற நாள்.

அலுவலகங்களில், கடைகளில் கடினமான வேலைகளில் ஆறு நாட்களைப் பல்லைக் கடித்து ஓட்டிய பணியாளர்கள் பின்னர் விடுதலையை அனுபவித்து அதை தனது குடும்பத்தோடு கொண்டாடுகிற நாள்.

ஒரு தனியார் பள்ளி ஆசிரியர் நாற்பது வயது மோகன். அவனது மனைவி நளினி, அவர்களது மகன்கள் அருண், கவின். மகள் யாழினி. அனைவரும் மதியம் அசைவ உணவினை ஆற அமர உண்டு முடித்து சற்றே இளைப்பாறும் நோக்கில் பல விஷயங்களையடக்கிய பேச்சில் ஈடுபட்டிருந்தனர்.

தனக்கு ஆசைப்பட்டவைகளையெல்லாம் கேட்கும் நாளே அன்றுதானே….

“அப்பா! ரெண்டு வருசமா ஒரு ஸ்மார்ட் போன் கேட்டுக்கிட்டே இருக்கேன். ஏம்பா வாங்கி தர மாட்டேங்கிறீங்க… என்றான் கவின் கெஞ்சியபடி.

அருண் :– ஒரு ஆண்ட்ராய்டு போன் மினிமம் 7000 ரூபா… திடீர்னு எங்கே போறது…

‘‘ம்…. சரி! அது என் பிரச்சனை. கூடிய சீக்கிரம் வாங்கித் தர்ரேன்’’ என்றார் மோகன்.

அப்பா! எனக்கு ஏழாயிரம் ரூபாய்ல வேணாம். பதினோராயிரம் ரூபாய்ல நல்ல கம்பெனி. சூப்பர் மாடல் இருக்கு. அதுதாம்பா வேணும்.” என்றான் கவினை விட இரண்டு வயது மூத்தவனான அருண்.

சரி! சரி! அதையே வாங்கிடுவோம்.

அப்பா! எனக்கும் ஒரு ஸ்மார்ட் போன் வேணும். ஏழாயிரம் ரூபாய்ல.. அது போதும்… எனக்கு….” என்றாள் 14 வயது யாழினி.

யாழினி! நீ இப்ப ஒன்பதாவதுதான் படிக்கிற… நீ ஆசைப்படலாமா? தேவையா ஒனக்கு…?

அப்பா நெட்ல என்னோட ஃப்ரண்ட்ஸ் எல்லா சப்ஜெக்ட் லெஸனும் படிக்கிறாங்கப்பா… ஸ்மார்ட் போன் கையில இருந்தா மார்க் கூட வாங்கிக்கலாம்பா… அப்பா! அப்பா! ப்ளீஸ்ப்பா!…

சரி பார்க்குறேன். அருணுக்கு கவினுக்கு வாங்கும்போது முடிஞ்சா வாங்கலாம்… ‘‘என்னங்க… ஆண்ட்ராய்டு போன் ஆசை எனக்கும் பல வருசமா இருக்கு…. நம்ம காலணி லேடீஸ் எல்லார்கிட்டையும் இருக்குங்க… எனக்கிட்ட மட்டும்தான் இல்லே… அவங்கள்லாம் வாட்ஸ் அப், ஃபேஸ்புக், யூட்யூப்னு ஒவ்வொன்னையும் பற்றி பேசறதப் பார்த்தா எனக்கு பொறாமையா இருக்கு… அருணுக்கும் யாழினிக்கும் வாங்கும்போது எனக்கும் கட்டாயம் வாங்கனும். ஆனா ஏழாயிரம் ரூபாயில நல்ல கம்பெனியா போதும்.”என்றாள் மனைவி

“அதுதானே பார்த்தேன். என்ன இவ மட்டும் சும்மா இருக்காளேனு. ஆனா எல்லாரும் ஒண்ணு தெரிஞ்சுக்கோங்க. நான் பதினைஞ்சு வருசமா ஒரே ஸ்கூல்ல வேலை பார்த்தும் வெறும் பதினேழாயிரம் தான் மாச சம்பளம்; ஆனாலும் வாங்குறேன். ஒரு சீட்டு மட்டும் போட்ருக்கேன். வரட்டும் பார்ப்போம். அப்ப எல்லாரும் யோசிப்போம்.

ஆவலுடன் சரிங்க… சிட்டு எப்ப முடியும்? பணம் எப்ப வரும்ங்க…?

அடுத்த மாசம் ஏலம் கேட்கனும். நாம எடுத்தா மூணு நாள்ல கெடைச்சிடும். ‘‘சரிங்க… சரிப்பா ’’ அனைவரது முகத்திலும் மகிழ்ச்சி பரவியது.

ஆண்ட்ராய்டு போன் கோரிக்கை அன்று மட்டுமல்ல. அடுத்த இரண்டு மாதங்களிலும் தந்தையுடன் பேச நேரம் கிடைக்கிற போதெல்லாம் மூவரும் ஆண்ட்ராய்டு போன் ஆசையினை எழுப்பி நினைவூட்டத் தவறவில்லை. மோகனும் சளைக்காமல் “சரி! சரி! வாங்குவோம். சீட்டுப் பணம் வரட்டும் என்று காலத்தைக் கடத்திக் கொண்டே வந்தார்.

பிறகு ஒருநாள் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் வேலையில் வீட்டில் அனைவருமே இருக்க வெளியேயிருந்து. “சித்தப்பா… சித்தப்பா…” என்று குரல் கேட்டது. அது பழகிய குரலாக இருக்கவும் ஆவலோடு வெளியே வந்து பார்த்தான் மோகன்.

‘‘அட… பிரேம்… வா… வா… நளினி பிரேம் வந்திருக்கிறான். அருண் உன்னோட அண்ணன் வந்திருக்கிறான்… யாழினி வந்து பாரு… பிரேம் உள்ளே வா…’’

‘‘சித்தப்பா! எல்லாரும் நல்லா இருக்கீங்களா?’’

ம்…ம். மொதல்ல உள்ளே வா…

“பிரேம்! என்ன திடீர்னு வந்து நிக்கிறே… ஒரு போன் கூட இல்லே… ஒரு அவசரமான உதவி சித்தப்பா… அதனாலதான் வந்தேன்…

“என்ன உதவி பிரேம்… சொல்லு… என்னால முடிஞ்சத அண்ணனுக்காக நான் செய்ய மாட்டேனா… சொல்லுப்பா…”

“சும்மா சொல்லு பிரேம்…”

“வந்து… வந்து… சித்தப்பா நான் பிளஸ் டூ ல 456 மார்க் எடுத்துருக்கேன். எங்க ஊர் பாலிடெக்னிக்கிலேயே சேரலாம்னு பார்க்கிறேன்…” என்றான் தயங்கிய குரலில்.

“வெரிகுட்… நல்ல மார்க்… நல்ல யோசனை… உங்கப்பா என் அண்ணன் என்ன சொல்றார்…?”

“அப்பா வேற என்ன சொல்லப் போறார்? போன வருசம் கஜா புயல்லே வீட்டை சுத்தி இருந்த தென்னை மரம், பலா மரம், வாழை, கரும்பு எல்லாமே போயிடுச்சி… குடியிருந்த வீடும் போயிடுச்சி… நான் அப்பா, அம்மா, மாடுகள் தான் மிச்சம்… பாலிடெக்னிக்ல சேர இருபதாயிரத்துக்கு நாம எங்கேடா போறது… வேணும்னா என் தம்பிக்கிட்ட போயி நெலமையைச் சொல்லுன்னு என் கையில நூறு ரூபாக் காச கொடுத்து அனுப்பி வச்சாரு… சித்தப்பா…! திடீர்னு வந்து உதவி கேட்கிறதுக்கு என்னை மன்னிச்சிடுங்க சித்தப்பா…”

‘‘பரவால்ல… பரவால்ல… கேட்க உனக்கு எல்லா உரிமையும் இருக்கு… அண்ணன்தானே என்னை படிக்க வச்சார்… நளினி! நான் எதிர்பார்த்தது வந்திடிச்சி… நீங்க மூனு பேரும் உள்ளே போயிக் கலந்து பேசிட்டு வாங்க… ஆண்ட்ராய்டு போனா…? அல்லது எஜூகேசனுக்கு உதவுறதா…?’’

“அருண் வாடா… யாழினி வா… உங்க விருப்பத்தை வந்து சொல்லுங்க… பிரேம்! நீ சித்தப்பாவோட பேசிக்கிட்டிரு… ஒரு அஞ்சு நிமிஷம்…”

(முன் அறையில் பிரேம் அமர்ந்து நலம் விசாரித்துக் கொண்டிருக்க, நளினி குழந்தைகளுடன் திரும்பி வருகிறாள்)

“நளினி! அருண், யாழினி என்ன சொல்றாங்க…? என்ன முடிவு…?”

“அதை நான் சொல்றதை விட அருண், யாழினியே சொல்லட்டும்… அப்பாக்கிட்ட நீயே சொல்லு அருண்…!”

“அப்பா! ஆண்ட்ராய்டு போன் மீது எனக்கும் தங்கச்சிக்கும் அபார ஆசைதான்… ஆனா அதை விட பிரேம் அண்ணா மேல படிக்கிறது ரொம்ப முக்கியம்…”

“ஆமாம்பா… உங்களை படிக்க வச்சு இந்த நிலமைக்கு உசத்திவிட்ட பெரியப்பா குடும்பத்துக்கு ஹெல்ப் பண்ணுங்க… அந்த அண்ணனைப் படிக்க வைங்க… அயர்ன் பண்றவரோட வீட்டு அக்காவுக்கு ஏதாவது ஹெல்ப் பண்ணுங்க…”

“ஆமாங்க… பிரேம் படிச்சு முன்னேறி ஒரு நல்ல வேலைக்குப் போனா. அவனே தம்பி தங்கச்சிக்கு வாங்கித் தந்துட்டுப் போறான்…”

“வெரிகுட்… நல்ல முடிவு… பிரேம்! அட்மிசனுக்குள்ள புல் அமெளண்டும் நான் தர்றேன்… மாசா மாசம் மற்ற செலவுகள் இருக்குமேப்பா… அதுக்கு வழி?”

“சித்தப்பா! ஒரு ஏக்கர்ல வாழை போட்டிருக்கோம். எல்லாம் தார் விட்டிருக்கு… தற்பூசணியும் போட்டிருக்கோம்… அப்பப்ப ஆடு, கோழிகளை வித்து அம்மாவும் பணம் தர்றேன்னாங்க… விடியக்கால கொஞ்ச நேரம் வீடுகளுக்கு நியூஸ் பேப்பர் போடலாம்னு இருக்கேன் சித்தப்பா… அடிக்கடி இங்கே வந்து உங்கக்கிட்டே பணம் கேட்டுத் தொந்தரவு செய்ய மாட்டேன் சித்தப்பா…”

“ஏம்பா அப்படி சொல்றே…! வா! வா! இது ஒன் வீடு அடிக்கடி வந்து போயிக்கிட்டிரு…”

“ஆமாண்ணா! நீங்க நல்லா படிச்சி முன்னேறி பெரியப்பாவையும் பெரியம்மாவையும் கவனிச்சுக்கோங்க… எங்களுக்கு அது போதும்ணே…”

“அண்ணா வேலைக்குப் போனதும் உங்க மொத சம்பளத்துல எனக்கு மறக்காம ஆண்ட்ராய்டு போன் ’’.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *