செய்திகள்

சிறுபான்மை மக்களுக்கு என்றென்றும் பாதுகாப்பு அரணாக இருப்போம்: சட்டசபையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உறுதி

Spread the love

சென்னை, ஜன.10–

சிறுபான்மை மக்களுக்கு அம்மாவின் அரசு என்றென்றும் துணையாக, பாதுகாப்பு அரணாக இருக்கும் என்று

சட்டசபையில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உறுதிபட கூறினார்.

நேற்று (9–ந் தேதி) சட்டப்பேரவையில், நாடாளுமன்ற மக்களவையிலும், சட்டமன்றப் பேரவைகளிலும் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு உள்ள இட ஒதுக்கீட்டை மேலும் 10 ஆண்டுகளுக்கு நீட்டிக்க வகை செய்யும் நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட 2019–ம் ஆண்டு அரசமைப்பு 126-வது திருத்தச் சட்ட முன்வடிவு குறித்து அரசினர் தனித் தீர்மானத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அளித்த பதிலுரை வருமாறு:–

அண்ணா தி.மு.க.வைப் பொறுத்தவரையில், எங்களுடைய இந்த மாபெரும் இயக்கத்தை தோற்றுவித்த புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரும், அம்மாவும் ஆதி திராவிட பெருமக்கள்மீது எந்தளவிற்கு பற்றும், பாசமும் வைத்திருந்தார்கள் என்பதை, அவர்களுடைய 47 ஆண்டு கால அரசினுடைய அனைத்து நடவடிக்கைகளையும் மக்கள் நன்றாகவே அறிவார்கள்.

பொதுவாகவே, ஆதிதிராவிடர்களுக்கு என்று தனி இட ஒதுக்கீடு இருந்தாலும், புரட்சித் தலைவி அம்மா தான், ஒரு பொது தொகுதியில் ஆதி திராவிடர் பெருமகனாரை நிறுத்தி வைத்து, அவரை வெற்றி பெறச் செய்த மிகப் பெரிய பெருமைக்குரியவர்.

எல்லாவற்றிற்கும் மேலாக இந்தச் சட்டப் பேரவைக்கு தொடர்ந்து இரண்டாவது முறையாகவும், சட்டப் பேரவைத் தலைவராகக் கொண்டுவந்த பெருமையும் புரட்சித் தலைவி அம்மாவுக்கும், அண்ணா தி.மு.க. என்ற மாபெரும் இயக்கத்திற்கும் உண்டு.

பாதுகாப்பு அரண்

அதோடுமட்டுமல்லாமல், பாபா சாகிப் அம்பேத்கர் பெயரிலே மணிமண்டபம், அன்னாருக்கு சென்னையிலே திருவுருவச் சிலை, இரட்டைமலை சீனிவாசன் பெருமகனாருக்கு நினைவு மண்டபம், மொழிஞாயிறு தேவநேயப் பாவாணருக்கு நினைவு மண்டபம், பண்டிதமணி அயோத்திதாசர் நூல்களை தேசிய உடைமையாக்கல் என ஆதி திராவிடர், பழங்குடியின மக்களுடைய மேம்பாட்டுக்கு பல்வேறு திட்டங்களைத் தீட்டி, அறிவித்து, செயல்படுத்தி, இந்தியாவிலேயே அனைத்து மாநிலங்களைக் காட்டிலும், துறைகளிலும் தமிழகம் முன்னிலை பெற்று வருவதைப்போல, சாதி, மத, பேதமின்றி அனைவரையும் ஒரே நேர்கோட்டில் நிறுத்திப் பார்க்கிற சமத்துவத் தலைவி, புரட்சித் தலைவி அம்மாவினுடைய வழியில் செயல்படும் அம்மா அரசு என்றென்றைக்கும் ஆதி திராவிடர், பழங்குடியின மக்களுக்கும் அரணாக, சிறுபான்மையின பெருமக்களுக்கும் அரணாக, அன்போடு அரவணைத்து செல்கின்ற அரசாக தொடர்ந்து இருக்கிறது என்பதை நிரூபிக்கின்ற வகையிலே இந்தத் தீர்மானத்திற்கு அண்ணா தி.மு.க. ஒருமனதாக தனது ஆதரவைத் தெரிவித்துக்கொள்கிறது.

இட ஒதுக்கீட்டையும் தாண்டி….

அதோடு, ஆங்கிலோ இந்தியன்ஸ், அவர்களுடைய பிரதிநிதித்துவம் சட்டமன்றத்திலே இருக்க வேண்டுமென்ற கோரிக்கையையும், எதிர்க்கட்சித் தலைவர், மற்ற உறுப்பினர்களும் இங்கே எடுத்துச் சொன்னார்கள். எங்களுடைய நிலைப்பாட்டையும், அண்ணா தி.மு.க.வினுடைய நிலைப்பாட்டையும் மாநிலங்களவையில் விவாதம் நடைபெறுகின்றபோது, பல்வேறு கட்சிகள், சமாஜ்வாதி கட்சி, பி.எஸ்.பி., பிஜூ ஜனதா தள், ஜனதா தள் (யு), அண்ணா தி.மு.க., தி.மு.க., ஏ.ஏ.பி., ஜெ.டி.(எஸ்), ஒய்.எஸ்.ஆர்.சி.பி., ஆர்.ஜெ.டி. மற்றும் இடது கட்சிகள் ஆகியவை இந்த மசோதாவின் கீழ் ஆங்கிலோ இந்தியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதை அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும் என்று அங்கே வலியுறுத்தி பேசியிருக்கின்றார்கள். நேரடியாகவும் மத்திய அமைச்சரையும் சந்தித்து பேசியிருக்கிறார்கள். அவர்களும் அதற்கு உறுதியும் அளித்திருக்கிறார்கள். ஆக, அண்ணா தி.முக.வைப் பொறுத்தவரையில், அம்மாவினுடைய பொற்கால ஆட்சியில், ஆதி திராவிட பெருமக்களுக்கு 18 சதவிகிதம் என்றிருந்த நிலையிலும் இருந்தாலும், அதைக் காட்டிலும் அம்மா அந்தச் சமுதாய மக்களுடைய அனைத்து பொருளாதார மேம்பாட்டுக்காக, பல்வேறு சலுகைகளை, உயர் சலுகைகளை அளித்திருக்கிறார்.

சமூக நீதிக்காகப் போராடிய அம்மா, சமூக நலத் திட்டங்களை நாட்டு மக்களுக்கு அர்ப்பணித்தார். அந்தத் திட்டங்களின் மூலமாக சமூக பாதுகாப்பு திட்டங்கள், ஏழை, எளிய மக்கள் தமிழகத்திலே இருக்கின்ற அனைத்து மாணவச் செல்வங்களுக்கும் தரமான கல்வியை அவர்கள் ஏழ்மை நிலையில் இருந்தாலும், அவர்கள் பெற முடியாத சலுகைகள், பெற முடியாத கல்வி உபகரணங்களை அந்த மாணவச் செல்வங்களின் கையிலே தர வேண்டுமென்று, அரசின் மூலமாகத் தர வேண்டுமென்றுதான் அம்மா 16 வகையான கல்வி உபகரணங்களை அந்த மாணவச் செல்வங்களின் கையிலே தந்து, படிக்க வைத்ததன் காரணமாக பள்ளியிலிருந்து கல்லூரி வரை இன்றைக்கு மாணவச் செல்வங்களுடைய, சேர்க்கை கூடியிருக்கிறது. படித்த பட்டதாரிகளின் எண்ணிக்கை கூடியிருக்கிறது. அந்த வகையில், அம்மா அந்த 16 வகையான கல்வி உபகரணங்களை வழங்கினார்.

இலவச சைக்கிள் திட்டம்

இலவச சைக்கிள் திட்டத்தை முதன்முதலில் அம்மா 2001–ம் ஆண்டு, ஆதி திராவிடர் மாணவிகளுக்காக மட்டும் தான் முதலில் அறிமுகப்படுத்தினார். அதற்குப் பின்னால்தான் மற்ற மாணவர்களுக்கும், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கும் அறிமுகப்படுத்தினார்.

அதேபோல, கிராமப்புற ஏழை, எளிய மக்களுடைய, கிராமப்புறத்தினுடைய மேம்பாடு, பொருளாதார மேம்பாடு உயர வேண்டுமென்று, அம்மா விலையில்லாத 4 வெள்ளாடுகள் அல்லது செம்மறியாடுகள் தருகின்ற திட்டத்தை அறிவிக்கின்றபோது, அந்த 4 வெள்ளாடுகள் வழங்குகின்ற நேரத்தில், 30 சதவிகித வெள்ளாடுகள் ஆதி திராவிட பெருமக்களுக்கு வழங்கப்படும் என்று அம்மா அறிவித்தார். இதிலிருந்து அம்மா ஆதிதிராவிட பெருமக்களுக்கு எந்த அளவிற்கு அவர்களுடைய நலனில், அக்கறை கொண்டிருந்தார். அந்த சமுதாயம், மேல்தட்டிலிருக்கிற சமுதாய மக்களுக்கு இணையாக தங்களுடைய வாழ்க்கை நடைமுறையை கொண்டு வந்து நிலைநிறுத்த வேண்டுமென்று அம்மா எண்ணினார் என்பதனை நாடு நன்றாகவே அறிந்திருக்கிறது.

மக்களவையில் எம்.பி.களுக்குப் பிரதிநிதித்துவம் இருக்கிறது. ஆனால், மாநிலங்களவையில் இல்லை. ஆனால், அம்மா, பார்த்து, பார்த்து மாநிலங்களவையிலும் ஆதி திராவிட மக்களுக்கு பிரதிநிதித்துவம் தந்தார்.

இன்றைக்கு நடைபெற்று கொண்டிருக்கின்ற அம்மாவினுடைய அரசு, ஓராண்டுக்கு முன்னர் நடந்த ராஜ்யசபா தேர்தலில்கூட ஆதி திராவிட பெருமக்களுக்குரிய பிரதிநிதித்துவத்தை தந்தது என்பதனை இந்த நல்ல நேரத்திலே தெரிவித்துக்கொள்கிறேன். எந்த நேரத்திலும் நாங்கள் சிறுபான்மையின பெருமக்களுக்கு உறுதுணையாக, அன்றும், இன்றும், என்றும் இருப்போம் என்று நேற்று சட்டமன்றத்திலே அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரால் முழங்கப்பட்டது. இன்றும் நாங்கள் உறுதியாக சொல்கிறோம், எந்த நேரத்திலும், எந்த சூழ்நிலையிலும் சிறுபான்மையின பெருமக்களுக்கு அன்றும், இன்றும், என்றும் நாங்கள் உறுதுணையாக இருப்போம். உங்களுக்கு சிறு இடர்பாடு வந்தாலும், அதனை எதிர்த்து குரல் கொடுக்கின்ற முதல் குரலாக எங்களுடைய குரல்தான் இருக்கும் என்பதனை இந்த நல்ல நேரத்திலே தெரிவித்துக்கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன்.

இவ்வாறு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *