செய்திகள்

எந்தெந்த தொகுதி? பா.ம.க. பேச்சுவார்த்தை

சென்னை, மார்ச் 6–

அண்ணா தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.வுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில் பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, துணை பொதுச்செயலாளர் ஏ.கே.மூர்த்தி, வக்கீல் பாலு உள்ளிட்டோர் நேற்று இரவு சென்னை ஆர்.ஏ.புரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலுக்கு வந்தனர். அவர்களுடன், அண்ணா தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, அமைச்சர்கள் பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி ஆகியோர் எந்தெந்த தொகுதி ஒதுக்கீடு செய்வது என்பது குறித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்த பேச்சுவார்த்தை சுமார் ஒரு மணி நேரம் நீடித்தது.

முன்னதாக புதிய நீதிக்கட்சி நிறுவனர் ஏ.சி.சண்முகம், செயல் தலைவர் ரவிக்குமார் உள்ளிட்டோர் அமைச்சர்களை சந்தித்து பேசி சென்றனர். இதுகுறித்து ஏ.சி.சண்முகம் கூறும்போது, ‘‘புதிய நீதிக்கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்குமாறு கேட்டிருக்கிறோம். இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடவும் தயாராக இருக்கிறோம்’’ என்றார்.

அதேபோல புரட்சி பாரதம் கட்சி நிறுவனர் பூவை ஜெகன்மூர்த்தி நேற்று அண்ணா தி.மு.க. நிர்வாகிகளை சந்தித்து பேசினார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘‘அண்ணா தி.மு.க. கூட்டணியில் கே.வி.குப்பம், ஸ்ரீபெரும்புதூர், அரக்கோணம் ஆகிய தொகுதிகளை எங்கள் கட்சிக்கு ஒதுக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளோம்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *