செய்திகள்

சென்னையில் 10 தொகுதிகளில் அண்ணா தி.மு.க. போட்டி

சென்னை, மார்ச் 11–

அண்ணா தி.மு.க.வின் 2–-ம் கட்ட வேட்பாளர் பட்டியலில் சென்னையில் உள்ள 16 தொகுதிகளில் 10 இடங்களில் அண்ணா தி.மு.க. போட்டியிடுகிறது.

கடந்த 2016–-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் சென்னையில் உள்ள ஆர்.கே.நகர், பெரம்பூர், கொளத்தூர், வில்லிவாக்கம், திரு.வி.க.நகர், எழும்பூர், ராயபுரம், துறைமுகம், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி, ஆயிரம் விளக்கு, அண்ணாநகர், விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, தியாகராயநகர், மயிலாப்பூர், வேளச்சேரி ஆகிய 16 தொகுதிகளிலும் அண்ணா தி.மு.க. போட்டியிட்டது.

இதில், ஆர்.கே.நகரில் ஜெயலலிதாவும், பெரம்பூர் தொகுதியில் வெற்றிவேலும், ராயபுரத்தில் டி.ஜெயக்குமாரும், விருகம்பாக்கத்தில் விருகை ரவியும், தியாகராயநகரில் சத்திய நாராயணன் என்கிற சத்தியாவும் மயிலாப்பூரில் ஆர்.நட்ராஜ் ஆகிய 6 பேர் மட்டும் வெற்றி பெற்றனர்.

இந்தநிலையில் அண்ணா தி.மு.க.வின் 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியலில் சென்னையில் உள்ள 16 தொகுதிகளில் 10 இடங்களில் மட்டும் அண்ணா தி.மு.க. களம் காண்கிறது.

இதில், 2016–-ம் ஆண்டு போட்டியிட்ட அமைச்சர் டி.ஜெயக்குமார், ஜே.சி.டி.பிரபாகர், கோகுல இந்திரா, விருகை ரவி, சத்திய நாராயணன் என்கிற சத்தியா, ஆர்.நட்ராஜ் ஆகிய 6 பேருக்கு மட்டும் மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2016–-ல் கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலினை எதிர்த்து போட்டியிட்ட ஜே.சி.டி. பிரபாகர் மட்டும் இந்த சட்டமன்ற தேர்தலில் வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிடுகிறார். மற்ற 5 பேரும் 2016–-ல் போட்டியிட்ட தொகுதிகளிலேயே போட்டியிடுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *