செய்திகள்

கொரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூலித்த 26 மருத்துவமனைகள் மீது நடவடிக்கை

கொரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூலித்த 26 மருத்துவமனைகள் மீது நடவடிக்கை

கூடுதலாக வசூலித்த கட்டணத்தை திருப்பி கொடுக்க உத்தரவு

8 மருத்துவமனைகளுக்கு அங்கீகாரம் ரத்து

சென்னை, அக்.15–

கொரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூலித்த 26 தனியார் மருத்துவமனைகள் சுகாதாரத் துறை மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதில், 8 மருத்துவமனைகளுக்கு கொரோனா சிகிச்சை அளிப்பதற்கான அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

அதிகரிக்கும் நோய்ப் பரவல் காரணமாக தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகள் மட்டுமன்றி, பல தனியார் மருத்துவமனைகளுக்கும் கொரோனா சிகிச்சையளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேவேளையில், அதற்கான கட்டண வரம்பையும் அரசு நிர்ணயித்துள்ளது.

அதன்படி, லேசான அறிகுறிகள் உள்ளவர்களுக்கு நாளொன்றுக்கு அதிகபட்சமாக ரூ.7,500 வரையும், தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு ரூ.15 ஆயிரம் வரையிலுமே வசூலிக்க வேண்டும் என அரசாணை வெளியிடப்பட்டது.

ஆனால் கொரோனா பாதித்து லேசான அறிகுறிகள் உள்ளவர்களுக்குக் கூட லட்சக்கணக்கான ரூபாயை சில தனியார் மருத்துவமனைகள் கட்டணமாக வசூலிக்கின்றன.இதையடுத்து, அதுதொடர்பான புகார்களைக் கண்காணிக்கவும், அதன் பேரில் நடவடிக்கை எடுக்கவும் மருத்துவ சேவைகள் இயக்ககம் முடிவு செய்தது.

அதன்படி, மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் பல்வேறு விதிமீறல்கள் கண்டறியப்பட்டன. இதைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் கூடுதலாக கட்டணம் வசூலித்த 26 மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மருத்துவ சேவைகள் இயக்ககக அதிகாரிகள் கூறியதாவது:–

கொரோனா தொற்று காலத்தில் மக்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. அதன்படி, தனியார் மருத்துமனைகள் அரசுடன் இணைந்து கொரோனா நோய்க்கான சிகிச்சைகளை மக்களுக்கு வழங்கிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது .அதுமட்டுமல்லாது சிகிச்சைகள் தொடர்பான உரிய நெறிமுறைகள் மற்றும் வழிகாட்டி நடைமுறைகளை அவ்வப்போது வெளியிட்டு வருகிறோம். ஆனாலும், அதனைப் பொருட்படுத்தாமல், பல தனியார் மருத்துவமனைகள் அதிக கட்டணம் வசூலித்து வருவது தெரியவந்துள்ளது.

இதுதொடர்பாக சுகாதாரத் துறைக்கு வந்த புகார்களின் அடிப்படையில் விரிவான ஆய்வு மேற்கொண்டோம். அதில் இதுவரை 26 மருத்துவமனைகள் விதிகளுக்குப் புறம்பாக அதிக கட்டணம் வசூலித்திருப்பது கண்டறியப்பட்டது. அதன்பேரில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 8 மருத்துவமனைகளுக்கு அளிக்கப்பட்டிருந்த கொரோனா சிகிச்சைக்கான உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது. அதுமட்டுமல்லாது, 18 மருத்துவமனைகள் நோயாளிகளிடம் இருந்து கூடுதலாக பெற்ற கட்டணத்தை திருப்பிச் செலுத்துமாறு உத்தரவிடப்பட்டது.

அதன் அடிப்படையில், அந்தத் தொகையை சம்பந்தப்பட்ட நோயாளிகளிடம் மருத்துவமனைகள் திருப்பி வழங்கியுள்ளன.கொரோனா சிகிச்சை வழங்கும் அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கட்டண விவரத்தை தெளிவாக பொதுமக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும் என சுகாதாரத்துறையால் ஏற்கெனவே உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. தனியார் மருத்துவமனைகள் அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தைவிட கூடுதலாக வசூலிப்பதாக புகார் பெறப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மருத்துவ சேவைகள் இயக்கக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *