நாடும் நடப்பும்

திருவண்ணாமலை மாணவி வினிஷாவின் சாதனை பாரீர்

இன்றைய பள்ளி மாணவர்களே வருங்கால உலகை ஆளப் போகிறவர்கள். நாம் இன்று கையில் வைத்திருக்கும் அனைத்து தொழில்நுட்பங்களும் மெல்ல மறைந்து அதிநவீன கருவியாக வருங்காலத்தில் உருமாறி விடும்!

ரேடியோவில் பாட்டுக்கள் கேட்ட தொழில்நுட்பம் மறைந்து, பொத்தான் அளவு கருவியில் பல லட்சம் பாடல்களை கேட்க, கையடக்க தொழில்நுட்பமாக மாறி இருப்பது நல்ல உதாரணமாகும்!

இப்படி மாறி வரும் வாழ்வியலில் இன்றைய பள்ளி மாணவர்களின் ஈடுபாட்டை உறுதி செய்வதே பள்ளிகளின் கடமையாக இருக்கிறது; இருக்க வேண்டும்!

அந்த வகையில் சமீபமாக ஊடகங்களில் செய்தியாக வந்துள்ள திருவண்ணாமலை சிறுமியின் சாதனை பாராட்டுக்குரியது.

சுற்றுச்சூழலை பாதுகாக்க ‘சூரியஒளியில் இயங்கும் இஸ்திரி பெட்டி’யை கண்டுபிடித்த திருவண்ணாமலை மாணவிக்கு ஸ்வீடனில் செயல்படும் அமைப்புகள் மூலம் விருது மற்றும் ரூ.8.50 லட்சம் பரிசு தொகை வழங்கப்பட்டுள்ளது.

சுற்றுப்புற சூழல் மீது அக்கறையுடன் செயல்படும் பள்ளி மாணவர்களுக்காக ‘மாணவர் பருவ நிலை விருது’ வழங்கும் பணியை ஸ்வீடன் நாட்டில் செயல்படும் அமைப்புகள் கடந்த 4 ஆண்டுகளாக வழங்கி வருகிறது. சுற்றுச்சூழல், பருவ நிலை மற்றும் எதிர்கால தலைமுறைக்காக தனது பங்களிப்பை வெளிப்படுத்தும் 12 முதல் 17 வயதுள்ள பள்ளி மாணவர்களை ஊக்குவிக்க விருது வழங்கப்படுகிறது.அதன்படி, சுத்தமான காற்று விருதுப் பிரிவில் இந்தாண்டுக்கான விருதை சூரியஒளியில் இயங்கும் இஸ்திரி பெட்டியை கண்டுபிடித்த, திருவண்ணாமலை எஸ்கேபி வனிதா சர்வதேச பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவி வினிஷா பெற்றுள்ளார்.

இதுகுறித்து மாணவி வினிஷா கூறும்போது, “துணிகளை இஸ்திரி போடுவதற்காக பயன்படுத்தப்படும் கரிக்காக மரங்கள் வெட்டப்படுகின்றன. மேலும் எரிக்கப்பட்ட கரியை சுற்றுப்புறங்களில் கொட்டுவதால் நிலம், நீர் மற்றும் காற்று மாசு ஏற்படும். சூரிய ஒளியில் இயங்கும் இஸ்திரி பெட்டியை பயன்படுத்தும்போது மரங்கள் காப்பாற்றப்படும். மாசு ஏற்படுவது தடுக்கப்படும். ஒரு மரம், தினசரி 5 பேருக்கு ஆக்ஸிஜன் தருகிறது. அந்த மரங்களை பாதுகாப்பதன் மூலம் மழையை பெற முடியும்.

இந்த சூரியஒளியில் இயங்கும் இஸ்திரி பெட்டியின் மேற்புறத்தில் சூரிய ஒளித் தகடுகள் பொருத்தப்பட்டுள்ளன சூரிய ஒளியால் 5 மணி நேரம் சார்ஜ் செய்யும்போது அதைப் பயன்படுத்தி 6 மணி நேரம் வரை இஸ்திரி செய்ய முடியும். இதற்கு ரூ.30 ஆயிரம் செலவாகும். இதன்மூலம் சுமார் 7 ஆண்டுகள் பயன்பெறலாம்.

விருது மற்றும் பதக்கத்தை காணொலி மூலம் ஸ்வீடன் துணை பிரதமர் இசபெல்லாலோ வழங்கி உள்ளார். காற்று மாசுப்படுவதை தவிர்ப்போம், பருவநிலை மாற்றத்தை தடுப்போம்” என்றார்.இந்த சிறுமியை போல் எல்லா துறைகளிலும் 9–ம் வகுப்பு, 10–ம் வகுப்பு மாணவர்கள் ஈடுபாடு காட்ட ஏதுவான சூழ்நிலையை அமைத்து தரப்பட்டால் அடுத்த தலைமுறை வளர்ச்சிகள் மனதுக்கு இதமானதாகவும் சுற்றுப்புற சூழலுக்கு பாதகமற்றதாகவும் இருக்கும்.

இப்படி ஒரு சிந்தனை 1970 களில் மாணவர்களிடம் இல்லாததால் இன்று பாட்டில்களில் கேன்களில் குடிநீர் வாங்க வருகிறோம். இனியும் விழித்துக் கொள்ளாது இருந்தால் தங்கம் போல் தண்ணீரின் விலையும் அடுத்த 30 ஆண்டுகளில் விஷம் போல் ஏறிவிடலாம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *