செய்திகள்

7வது முறையாக கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத் துறை சம்மன்: 26–ந்தேதி ஆஜராக வலியுறுத்தல்

புதுடெல்லி, பிப். 22–

டெல்லி மதுபான ஊழல் தொடர்பான பணமோசடி வழக்கில் ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 7வது முறையாக அமலாக்கத் துறை சம்மன் அனுப்பி உள்ளது. அவர் இம்மாதம் 26–ந்தேதி ஆஜராகும்படி தெரிவித்துள்ளது.

டெல்லியில் முதமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடைபெறுகிறது. கடந்த 2021ம் ஆண்டில் புதிய மதுபான கொள்கையை கெஜ்ரிவால் அரசு அமல்படுத்தியது. இதன்படி 849 தனியார் நிறுவனங்களுக்கு மதுக்கடை உரிமங்கள் வழங்கப்பட்டன. இதில் முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாக அப்போதைய தலைமைச் செயலாளர், துணை நிலை கவர்னரிடம் அறிக்கை அளித்தார். அதன்படி சிபிஐ, அமலாக்கத் துறை தனித்தனியாக விசாரணை நடத்தி வருகின்றன.

இந்த வழக்கில் டெல்லி முதல்வர் கேஜ்ரிவாலுக்கு அமலாக்கத் துறை சார்பில் கடந்த ஆண்டு நவம்பர் 2, டிசம்பர் 21, கடந்த ஜனவரி 3, 17, பிப்ரவரி 2, 17 ஆகிய தேதிகளில் அடுத்தடுத்து சம்மன்கள் அனுப்பப்பட்டன. ஆனால் 6 சம்மன்களுக்கும் கெஜ்ரிவால் ஆஜராகவில்லை.

இதுதொடர்பாக அமலாக்கத் துறை சார்பில் டெல்லியில் உள்ள விசாரணை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இந்த வழக்கு தொடர்பாக கடந்த 17ம் தேதி நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டு இருந்தது. அன்றைய தினம் காணொலி வாயிலாக அவர் நீதிமன்றத்தில் ஆஜரானார். டெல்லி சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றதால் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக முடியவில்லை என்று அவர் விளக்கம் அளித்தார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, வழக்கின் அடுத்த விசாரணையை மார்ச் 16ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

இந்த நிலையில் அரவிந்த் கெஜ்ரிவால் 26–ந்தேதிதேதி ஆஜராக வேண்டும் என அமலாக்கத்துறை 7வது முறையாக சம்மன் அனுப்பி உள்ளது.

இந்த வழக்குத் தொடர்பாக கடந்த 19ம் தேதி 6வது சம்மனை நிராகரித்த போது கெஜ்ரிவால் கூறுகையில், “தற்போது இந்த விவகாரம் நீதிமன்றத்தில் உள்ளது. அதனால் அமலாக்கத் துறை காத்திருக்க வேண்டும்” என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *