75 வேட்பாளர்கள் டெபாசிட் இழப்பு
ஈரோடு, மார்ச் 3-–
ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் 66 ஆயிரத்து 233 ஓட்டுகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார்.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈவெரா கடந்த ஜனவரி 4–-ந் தேதி திடீர் மரணம் அடைந்தார். இதைத்தொடர்ந்து அந்த தொகுதிக்கு கடந்த மாதம் 27–-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. நேற்று ஓட்டு எண்ணிக்கை நடந்தது.
முதல் சுற்று முடிவுகள் காலை 10 மணிக்கு மேல் வெளிவர தொடங்கின. அதிகாரபூர்வமாக 10.30 மணிக்கு முதல் சுற்று வாக்குகள் அறிவிக்கப்பட்டன. அதில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் 8 ஆயிரத்து 429 ஓட்டுகள் பெற்று இருந்தார். அண்ணா தி.மு.க. வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு 2 ஆயிரத்து 873 ஓட்டுகள் பெற்று இருந்தார். தே.மு.தி.க. வேட்பாளர் எஸ்.ஆனந்த் 112 வாக்குகளும், நாம் தமிழர் வேட்பாளர் மேனகா நவநீதன் 526 வாக்குகளும் பெற்று இருந்தனர்.
1 லட்சத்து 10 ஆயிரம்
வாக்குகள்
15-–வது சுற்று முடிவுகள் நேற்று இரவு 7.50 மணிக்கு அறிவிக்கப்பட்டது.
15-–வது சுற்று முடிவில் 1 லட்சத்து 10 ஆயிரத்து 156 வாக்குகள் பெற்று ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் இமாலய வெற்றி பெற்றார். 2-வது இடத்தை பிடித்த கே.எஸ்.தென்னரசு 43 ஆயிரத்து 923 வாக்குகள் பெற்று இருந்தார். இதன் மூலம் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் 66 ஆயிரத்து 233 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிவாகை சூடினார்.
3-–வது இடத்தை நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா நவநீதன் 10 ஆயிரத்து 827 வாக்குகளுடன் பிடித்தார். தே.மு.தி.க. வேட்பாளர் ஆனந்த் 1,432 ஓட்டுகள் பெற்று இருந்தார். நோட்டாவுக்கு 798 பேர் ஓட்டு போட்டு இருந்தனர். இதைத்தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை தேர்தல் நடத்தும் அதிகாரி க.சிவக்குமார் வழங்கினார்.
போட்டியிட்ட 77 வேட்பாளர்களில் 75 வேட்பாளர்கள் தங்களது டெபாசிட் தொகையை இழந்தனர். சுயேச்சையாக போட்டியிட்ட 14 வேட்பாளர்கள் ஒற்றை இலக்கத்தில் ஓட்டுகளை பெற்றிருந்தனர். அதில் சுயேச்சை வேட்பாளர்களான ஆர்.குமார், எம்.பிரபாகரன் ஆகியோர் தலா 3 ஓட்டுகளை மட்டுமே வாங்கி இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.