செய்திகள்

சென்னை, மதுரை, கோவையில் விரைவில் 500 மின்சார பஸ்கள்

Spread the love

சென்னை, செப்.20–

விரைவில் சென்னை, மதுரை, கோவை ஆகிய நகரங்களில் 500 மின்சார பஸ்கள் விடப்படும் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறினார்.

கடந்த 2½ ஆண்டுகளில் ரூ.1314 கோடி செலவில் 4381 பஸ்கள் வாங்கப்பட்டு இயக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.

போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், மாநகர் போக்குவரத்துக் கழக மத்திய பணிமனையில் நடைபெற்ற விழாவில், மாநகர் போக்குவரத்துக் கழகத்தைச் (சென்னை) சார்ந்த 521 ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு ரூ.125.55 கோடிக்கான பணப்பயன்களையும், அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தைச் சார்ந்த 346 ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு ரூ.63.38 கோடிக்கான பணப்பயன்களையும், விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழகத்தைச் சார்ந்த 823 ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு ரூ.130.26 கோடிக்கான பணப்பயன்கள் என ஆகமொத்தம், 1,690 ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு, ரூ.319.19 கோடிக்கான காசோலைகளை (சேமநல நிதி, பணிக்கொடை, விடுப்பு ஒப்படைப்பு ஊதியம், பங்களிப்பு ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதிய ஒப்படைப்பு) வழங்கினார்.

இவ்விழாவில், அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேசியதாவது:–

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமைச் செயலகத்தில், மாநகர் போக்குவரத்துக் கழகம் (சென்னை), அரசு விரைவு போக்குவரத்துக் கழகம், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், விழுப்புரம், சேலம், கோயம்புத்தூர், கும்பகோணம், மதுரை மற்றும் திருநெல்வேலி உள்ளிட்ட எட்டு போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற 6,283 பணியாளர்களுக்கு, 1,093 கோடி ரூபாய்க்கான ஓய்வூதிய பணப்பயன்களை வழங்கிடும் அடையாளமாக, 9 ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கு, ஓய்வூதிய பணப்பயன்களுக்கான காசோலைகளை வழங்கிய முதலமைச்சருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஓய்வு பெற்றவர்களுக்கு ரூ.5199 கோடி

அம்மாவின் ஆட்சி காலமான 2011 முதல் 2016 வரை ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு 1,153 கோடி ரூபாய் வழங்கியுள்ளார். அம்மாவின் வழியில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி ஆட்சி காலமான 2016 முதல் 2019 செப்டம்பர் வரை ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு 4,046 கோடி ரூபாய் வழங்கியுள்ளார். மொத்தமாக ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு 2011 முதல் இதுநாள் வரையில் 5,199 கோடி ரூபாய் அரசிடமிருந்து பெறப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, போக்குவரத்துக் கழகங்களின் பிற தேவைகளுக்கு அம்மாவின் ஆட்சி காலமான, 8 ஆண்டுகளில் 16,920 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

500 மக்கள் உள்ள கிராமத்துக்கும் பஸ்

இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் ஏறத்தாழ 500 மக்கள் தொகை கொண்ட குக்கிராமங்களுக்கும் போக்குவரத்து வசதி ஏற்படுத்தப்பட்டு 21,000க்கும் மேற்பட்ட பேருந்துகள் பொதுமக்களின் சேவைக்காக இயக்கப்படுகின்றன. மற்ற துறைகளை ஒப்பிடும்போது போக்குவரத்துத் துறையின் பணிகளானது மிகவும் கடினமான ஒன்றோடு. பொதுமக்களுக்கு சேவை ஒன்றையே அடிப்படையாகக் கொண்டு இயங்கக்கூடிய துறையாகும். இந்நிலையிலும், மத்திய அரசினால் போக்குவரத்துக் கழகங்களுக்கு வழங்கப்பட்ட 35 விருதுகளில், 9 விருதுகளை பெற்று சாதனைப் படைத்துள்ளது.

மேலும் 500 மின்சார பஸ்கள்

மேலும், அம்மாவின் ஆட்சி காலத்தில் குறிப்பாக, கடந்த இரண்டரை ஆண்டுகளில் 1,314 கோடி ரூபாய் செலவில் 4,381 புதிய பேருந்துகள் வாங்கப்பட்டு இயக்கப்பட்டு வருகிறது. மேலும், ஜெர்மன் வளர்ச்சி வங்கியின் கடனுதவியுடன், 12,000 புதிய பி.எஸ்–4 தரத்திலான பேருந்துகளையும், 2,000 மின்சாரப் பேருந்துகளையும் வாங்கிப் பயன்படுத்தும் வகையில் புதிய திட்டமும் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது. முதல் கட்டமாக, 500 மின்சாரப் பேருந்துகள் வாங்கப்பட்டு, சென்னை, மதுரை மற்றும் கோயம்புத்தூர் ஆகிய பெருநகரங்களில் விரைவில் இயக்கப்பட உள்ளது.

எனவே, இந்தப் போக்குவரத்துத் துறை என்பது சேவை துறையாக, மக்களுடைய தேவைகளுக்கு பேருந்துகளை இயக்கிடும் துறையாக செயல்பட்டு வருகிறது. அம்மாவினுடைய ஆட்சிக் காலத்தில் மேலும் நவீனமடைந்து, பொது மக்களுக்கு சிறப்பான சேவை செய்திடவும், ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கும், பணிபுரியும் தொழிலாளர்களுக்கும் பாதுகாப்பான அரசாக செயல்படும்” எனக் கூறிப்பிட்டார்.

இவ்விழாவில் போக்குவரத்துத் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், திட்ட விளக்க உரையில் கால நேரம் பாராமல் உழைக்கின்ற போக்குவரத்துக் கழக பணியாளர்களுக்கு அரசின் சார்பில் தேவையான அனைத்து உதவிகளும் செயப்பட்டு வருகின்றன. குறிப்பாக, அவர்களுடைய நலனில் அக்கறை செலுத்தும் பொருட்டு அரசின் சார்பில் பல்வேறு திட்டங்களும் தொழிலாளர்களுக்கு செயல்படுத்தப்பட்டுள்ளன. தொழிலாளர்கள் நலமோடு பணியாற்றினால்தான் போக்குவரத்துக் கழகங்களின் சேவைகள் மேம்படும்.” என்று குறிப்பிட்டார்.

இவ்விழாவில், மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் கோ.கணேசன் வரவேற்று பேசினார்.

அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் கே.இளங்கோவன் நன்றி கூறினார். விழுப்புரம் அரசுப் போக்குவரத்துக் கழக மேலாண் இமயக்குநர் ஆர்.முத்துகிருஷ்ணன் உள்ளிட்ட மேலாண் இயக்குநர்கள், உயர் அலுவலர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் போக்குவரத்துக் கழக பணியாளர்கள கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *