செய்திகள்

இலங்கையில் சிகிச்சை பெற்று வந்த இளையராஜா மகள் பவதாரணி மரணம்

இன்று மாலை சென்னை வருகிறது உடல்

முதலமைச்சர், அரசியல் பிரமுகர்கள், திரையுலகினர் இரங்கல்

சென்னை, ஜன.26-

இசையமைப்பாளர் இளையராஜாவின் மகள் பவதாரணி (வயது 47) இலங்கையில் நேற்று மரணம் அடைந்தார்.

இசையமைப்பாளர் இளையராஜாவின் மகள் பவதாரிணி. பின்னணி பாடகியான இவர் ஏராளமான பாடல்களை பாடியுள்ளார். சிறுநீரக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த பவதாரிணி, கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை மேற்கொண்டு வந்தார். கடந்த 5 மாதங்களுக்கு முன்பு, ஆயுர்வேத சிகிச்சைக்காக பவதாரிணி இலங்கைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் தொடர் சிகிச்சை பலனளிக்காத நிலையில், அவரது உடல்நிலை மோசமடைந்து நேற்று மாலை உயிரிழந்தார்.

இலங்கையில் தனியார் வைத்தியசாலையில் இருந்து கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு பவதாரிணி உடல் கொண்டு செல்லப்பட்டது. முழுவதும் மூடப்பட்ட பெட்டியில் பவதாரிணி உடல் வைக்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனைக்கு பிறகு பவதாரிணி உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும்.

இதையடுத்து பவதாரிணியின் உடல் இலங்கையில் இருந்து இன்று மாலை சென்னைக்கு கொண்டு வரப்படுகிறது. அதனைத் தொடர்ந்து இறுதி சடங்குகளும் நடைபெற உள்ளன. அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

முதல்வர் இரங்கல்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-

பிரபல பின்னணிப் பாடகியும் இசைஞானியின் அன்பு மகளுமான பவதாரணியின் அகால மரணத்தால் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். இசைமேதைகள் நிறைந்த குடும்பத்தில் பிறந்த பவதாரணி, தேனினும் இனிய தனது குரல் வளத்தால் இளம் வயதிலேயே ரசிகர்களின் நெஞ்சில் தனியிடம் பிடித்தவர் ஆவார். கேட்டதும் அடையாளம் கண்டுகொண்டு பரவசமடையச் செய்யும் மிகவும் தனித்துவமான குரல் அவருடையது. பாரதி திரைப்படத்தில் தனது தந்தையின் இசையமைப்பில் பாடிய ‘மயில் போல பொண்ணு ஒன்னு’ பாடலுக்காக இளம் வயதிலேயே தேசிய விருதும் பெற்றவர். பல படங்களுக்கு இசையமைப்பாளராகவும் பணிபுரிந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இன்னும் பல்லாண்டுகள் வாழ்ந்து இசையுலகில் எத்தனையோ சாதனைகளைச் செய்திருக்க வேண்டிய பவதாரணியின் திடீர் மறைவு இசையுலகில் ஈடுசெய்தற்கரிய இழப்பு. அவர் விட்டுச் செல்லும் இடம் அப்படியே இருக்கும்.

தனது பாசமகளை இழந்து துடிக்கும் இசைஞானிக்கும், பவதாரணியின் சகோதரர்கள் யுவன் சங்கர் ராஜா, கார்த்திக் ராஜா உள்ளிட்ட குடும்பத்தினருக்கும், திரையுலகினருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கமல்ஹாசன்

நடிகரும், மக்கள் நீதி மய்யத் தலைவருமான கமல்ஹாசன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

மனம் பதைக்கிறது. அருமைச் சகோதரர் இளையராஜாவைத் தேற்ற என்ன செய்வதென்று தெரியவில்லை. அவர் கைகளை மானசீகமாகப் பற்றிக்கொள்கிறேன். பவதாரிணியின் மறைவு பொறுத்துக்கொள்ளவோ ஏற்றுக்கொள்ளவோ முடியாத ஒன்று. இந்தப் பெருந்துயரில் என் சகோதரர் இளையராஜா மனதை இழக்காதிருக்க வேண்டும். பவதாரிணியின் குடும்பத்தாருக்கு என் நெஞ்சார்ந்த இரங்கல் என கூறியுள்ளார்.

இதே போன்று, மத்திய இணை மந்திரி எல்.முருகன், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார், திருநாவுக்கரசர், சசிகலா மற்றும் திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *