செய்திகள்

21-ந் தேதி ககன்யான் சோதனை ஓட்டம்: இலக்கை நோக்கி பயணிக்கும் ‘ஆதித்யா எல்–1′

சென்னை, அக்.16-–

‘ஆதித்யா எல்1′ விண்கலம் எந்த பிரச்சினையும் இல்லாமல் சுமுகமாக பயணிக்கிறது என்றும், ஜனவரி மாதத்தில் இலக்கை சென்றடையும் என்றும் இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்தார்.

பிரபல இயற்கை விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் சமீபத்தில் மரணம் அடைந்தார். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அவரது இல்லத்துக்கு இஸ்ரோ தலைவர் சோம்நாத் நேற்று வந்தார்.

அங்கு எம்.எஸ்.சுவாமிநாதனின் மகள் சவுமியா சுவாமிநாதனை சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் எம்.எஸ்.சுவாமிநாதன் படத்துக்கு மரியாதை செய்தார்.

இதையடுத்து வெளியே வந்த அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

வேளாண்மை, அறிவியல் துறையில் என எந்த துறையில் பணிபுரிந்தாலும், இந்த துறைகளில் பணியாற்றுபவர்கள் ஒன்று சேர்ந்து பணி செய்ய வேண்டியிருக்கிறது. அப்படிதான் எம்.எஸ்.சுவாமிநாதன் அளப்பரிய தன்னுடைய பங்களிப்பை தந்துள்ளார்.

அவருக்கு மரியாதை செலுத்த வந்தேன். எம்.எஸ்.சுவாமிநாதனின் வாழ்க்கை அறிவியல் துறையில் பணிபுரிய விரும்பும் நாட்டின் ஏராளமான இளைஞர்களுக்கு உத்வேகத்தை கொடுக்கும் என நம்புகிறேன்.

இஸ்ரோவில் பல்வேறு திட்டங்களுக்கான பணிகள் நடந்து வருகின்றன. அதில் முதன்மையாக ககன்யான் திட்டத்துக்கான பணிகளை முழுவீச்சில் செய்து வருகிறோம். அடுத்ததாக செவ்வாய், வெள்ளி கிரகத்துக்கும், பின்னர் மீண்டும் நிலவுக்கும் செல்லும் திட்டங்கள் இருக்கின்றன.

அதுமட்டுமல்லாமல், தொலை தொடர்புக்கு தேவையான செயற்கை கோள்களை அனுப்பி கொண்டுதான் இருப்போம். பூமியின் வெப்பநிலை மற்றும் காலநிலை குறித்து ஆராய இருக்கிறோம். அதுதொடர்பான பணிகளும் நடைபெற உள்ளது.

சந்திரனில் விக்ரம் லேண்டர் மகிழ்ச்சியாக உறங்கி கொண்டு இருக்கிறது. அது தன்னுடைய பணியை சிறப்பாக செய்து முடித்துவிட்டது. ஒரு வேளை அது முழிக்கலாம். அதுவரை காத்திருப்போம்.

ஆதித்யா எல்–1 விண்கலம் தன்னுடைய இலக்கை நோக்கி 110 நாட்கள் பயணத்தை மேற்கொண்டு இருக்கிறது. அடுத்த ஆண்டு (2024) ஜனவரி மாதத்தின் மத்தியில் இலக்கை சென்றடையும். தற்போது வரை எந்த பிரச்சினையும் இல்லாமல் சுமுகமாக பயணித்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் சோம்நாத் நிருபர்களிடம் கூறியதாவது:-–21-ந் தேதி திட்டமிட்டபடி ககன்யான் சோதனை ஓட்டம் மேற்கொள்ளப்படும். சோதனை ஓட்டத்துக்கு தேவையான அனைத்தும் பரிசோதிக்கப்பட்டு வருகிறது. ககன்யான் சோதனை ஓட்டமானது, பூமியில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் நிலை நிறுத்தப்பட்டு பின்னர் கடலில் பத்திரமாக இறக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *